Wednesday, October 10, 2007

அகத்தியர் - ஸ்ரீ சக்ர ராஜ! நவராத்திரிப் பாடல் 1

அகத்தியரைப் பற்றிப் பல கதைகளும் தொடர்புகளும் வழங்கப்பட்டாலும், அவரே தமிழ் முனி என்று பலரும் கருதுகின்றனர்! தேனினும் இனிய தமிழ் மொழியை, ஈசன் முருகனுக்கு அளித்தான்; அதை முதல் ஆசிரியராய் இருந்து, முருகனே அகத்தியருக்குக் கற்பித்தான் என்பது வழக்கு!

பின்னரே அகத்தியர், தொல்காப்பியருக்கு தமிழ் இலக்கணத்தைப் பயிற்றுவித்தார் என்றும் சொல்லுவர்.
முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
, என்பது அருணகிரியார் வாக்கு!

அகத்தியர் சித்தர்களுக்கு எல்லாம் தலைவரும் கூட!
இன்றும் சித்தர் தத்துவங்களிலும், சித்த மருத்துவத்திலும் கொண்டாடப்படுபவர்! திருமூலர், பாபாஜி போன்றவர்களுக்கும் குரு!

தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்.
இராமாயணம், மகாபாரதம் என்று இரண்டு காவியங்களிலும் வருபவர்.
சைவ-வைணவ ஒற்றுமைக்கு இவர் முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.


ஈசன் திருமணம், விந்திய மலைச் செருக்கழித்தல், காவிரி தோற்றம், பிள்ளையார் குட்டு, வாதாபியின் கதை, லோபாமுத்திரையுடன் இல்லற வாழ்வு, குற்றாலத்தில் வைணவர்களின் செருக்கழித்தல் என்று இவரைப் பற்றிய கதைகள் பலப்பல! ஜைன இலக்கியங்களிலும் குறிக்கப்படுகிறார்.

சப்தரிஷி மண்டலத்தில் தென் திசை நட்சத்திரம் இவரே! சோதிடத்திலும் இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். (நாடி ஜோதிடம், வாஸ்து முதற்கொண்டு)...
இப்படிப் பல்துறை வித்தகர்! பல்கலை அறிஞர்!

பேரகத்தியம், சிற்றகத்தியம் என்பது இவர் தமிழில் செய்த நூல்கள் என்பர். இவை தொல்காப்பியத்துக்கு முன்னோடி!
வடமொழியில் ரிக்வேத மந்திரங்கள் பலவும், லலிதா சகஸ்ரநாமம், ஆதித்ய ஹிருதயம் போன்ற நூல்களையும் செய்துள்ளார்.
இவர் மனைவியார் லோபாமுத்திரைக்கு சக்தி வழிபாட்டில் ஈடுபாடு மிகுதி. அதனால் அவருடன் சேர்ந்து, ஸ்ரீவித்யா மற்றும் ஸ்ரீ சக்ர தத்துவங்களை, அகத்தியரும் ஆய்ந்தார் என்று சொல்லுவர்.

அப்படி செய்யப்பட்டது தான் கீழ்க்கண்ட பாடல்! மிகவும் புகழ் வாய்ந்த பாடல்....ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி!(புதுக்கோட்டை அதிட்டானத்தார் தான் அகத்தியர் பெயரில், இப்பாடலை எழுதியதாகச் சொல்வோரும் சிலர் உண்டு)

இன்று நவராத்திரி முதல் நாள்! (Oct 11, 2007)
அன்னை அருள் கொலு இருக்கும் இந்த ஒன்பது நாட்களிலும், பூமாலைகளோடு, பாமாலைகளும் கேட்டு மகிழ்வோம்!
பூமாலையின் வாசம் மூக்கைத் தான் துளைக்கும்! - பாமாலையின் வாசமோ, முற்பிறப்பு அறுக்கும்!
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

பாடலை, இனிமையான இசையில் இங்கு கேட்கலாம்! அதுவும் சந்தானம் பாடுவது செவிக்கின்பம்!!
மகாராஜபுரம் சந்தானம்
பம்பாய் சகோதரிகள்
நித்ய ஸ்ரீ


Rochester-NY, ராஜராஜேஸ்வரி.
அன்னையின் திருமுகத்தில் பரங்கருணை!

(Click for an enlarged version)
(செஞ்சுருட்டி ராகம்)
ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி

(ஸ்ரீசக்ர)

(புன்னாகவராளி ராகம்)
பலவிதமாய் உன்னைப் ஆடவும் பாடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி


(நாதநாமக்ரியை ராகம்)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி


(சிந்து பைரவி ராகம்)
துன்பப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா....அகிலாண்டேஸ்வரி

(ஸ்ரீசக்ர)


நியுயார்க் மாநிலத்தில், ராச்செஸ்டர் (ரஷ்) என்னும் ஊரில், அழகான ராஜராஜேஸ்வரி ஆலயம் உள்ளது! இலங்கைத் தமிழர் ஒருவரால் (அய்யா என்று விளிக்கப்படுபவர்) நடத்தப்படும் இந்த ஆலயம் மிகவும் பிரபலமான ஒன்று!
எளிமை, தூய்மையுடன், சாதி மத பேதமின்றி வழிபாடுகள் நடைபெறுகின்றன! அர்ச்சகரும் அந்தணர், அல்லாதார் என்று பேதம் கிடையாது! இதோ அவர்கள் தளம்!

ஞானவெட்டியான் ஐயா, சென்ற முறை இட்ட நவராத்திரி - முதல் நாள் பதிவு இங்கே!

12 comments:

  1. தென் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியருக்குக் கோயில் உண்டு. சென்னை பாண்டி பஜார் அருகிலும் ஒரு கோயில் உண்டு. மற்ற இடங்களில் அகத்தியர் கோயில் இருக்கின்றனவா?

    நல்ல பாடல் தந்ததிற்கு நன்றி ரவி. சந்தானம் அவர்கள் பாடி கேட்கப் பிடித்தது.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பாடல் இரவிசங்கர். நானும் இந்தப் பாடலை அகத்தியரின் பாடல் என்று சொல்லப்பட்டு கேட்டிருக்கிறேன். அகத்தியரின் பெயரில் நிறைய பாடல்கள் இருக்கின்றன - சண்முக நாயகன் தோன்றிடுவான்; சிவ சத்குரு நாயகன் தோன்றிடுவான் என்ற சிந்துபாடலும் சிறுவயதில் படித்துப் பாடியிருக்கிறேன்.

    இந்தப் பாடல் அம்பிகை பாடல் என்றாலும் நீங்கள் தந்த சுட்டிகளில் பெண்கள் பாடியதை விட சந்தானம் பாடியதே மிக நன்றாக இருப்பது போல் ஒரு தோற்றம் வருகிறது. அவர் பாடியே முதலில் இந்தப் பாடலைக் கேட்டதால் இருக்கலாம். :-)

    ReplyDelete
  3. அகத்தியரைப் பற்றிய தியரிகள் பல இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஒளவையார்கள் பலர் இருந்ததைப் போல் அகத்தியர்களும் பலர் இருந்திருக்கலாம். அல்லது சங்கராச்சாரியர்கள் என்று ஒரு பரம்பரையே சங்கரர்களாக அறியப்படுவதைப் போல் அகத்தியர்கள் ஒரு சாதுப் பரம்பரையாக இருந்திருக்கலாம். பல அகத்தியர்களின் வாழ்வில் நடந்தவைகளும் ஒரே அகத்தியரால் நடத்தப் பெற்றது என்ற தொன்மம் எழுந்திருக்கலாம். அகத்தியர்களில் ஒருவர் குடமுனியாகவும், இன்னொருவர் காவிரியைக் கொணர்ந்தவராகவும், இன்னொருவர் தமிழ்முனியாகவும், இன்னொருவர் லோபாமுத்திரை நாயகனாகவும், இன்னொருவர் சித்தராகவும், இன்னொருவர் சாக்த முனியாகவும் இப்படி பலர் இருந்திருக்கலாம். ஒருவரே இவற்றில் சில குணங்களைக் கொண்டவராகவும் இருந்திருக்கலாம். ஆனால் தொன்மங்கள் சொல்லுவது போலவும் சித்த இலக்கியங்களில் கிடைப்பவை போலவும் எல்லாமும் செய்த ஒரே குள்ளமுனியாக ஒருவர் இருந்தாரா என்பது ஐயமே. இது முன்னீடு (Proposal) அளவில் தான் இப்போது இருக்கிறது. முடிந்த முடிபாகச் சொல்ல இயலவில்லை. இன்னும்.

    ReplyDelete
  4. //பின்னரே அகத்தியர், தொல்காப்பியருக்கு தமிழ் இலக்கணத்தைப் பயிற்றுவித்தார் என்றும் சொல்லுவர்.
    முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய முதல்வோனே, என்பது அருணகிரியார் வாக்கு!//

    இது விநாயகரைப் பாடும் பாடல் இல்லையா? விநாயகரின் மறு உருவம் தான் அகத்தியர் என்கிறீர்களா?

    ReplyDelete
  5. நல்ல பாட்டை சரியாண சமயத்தில் கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  6. //குமரன் (Kumaran) said...
    முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய முதல்வோனே, என்பது அருணகிரியார் வாக்கு!//

    இது விநாயகரைப் பாடும் பாடல் இல்லையா? விநாயகரின் மறு உருவம் தான் அகத்தியர் என்கிறீர்களா?//

    இது திருப்புகழில் கைத்தல நிறைகனி என்ற விநாயகர் பாடல் தான் குமரன்!
    விநாயகரைப் போல் அகத்தியருக்கும் அதே குள்ள உருவம் தான். ஆனால் அவரின் அம்சம் தான் இவர் என்று எல்லாம் சொல்லுவதற்கு தொன்மங்கள் ஏதும் இல்லை. இங்கு நான் குறிப்பிட்டது இலக்கணம் படைத்திட்ட நிகழ்வை மட்டுமே!

    பல முறை இந்தப் பாடலைப் படிக்கும் போது, ஏன் அருணகிரியார் இப்படிப் பாடினார் என்று யோசித்ததுண்டு! முத்தமிழ் இலக்கணத்தை மேரு மலையில் அகத்தியர் செய்ததாகத் தான் பரவலாகப் படித்துள்ளோம். அதை அருணகிரியார், விநாயகர் துதியில் எப்படிச் சேர்த்தார் என்பதைக் கேட்டுத் தான் தெளிய வேண்டும்.

    முற்பட "எழுதிய" முதல்வோனே என்பதில் "எழுதிய" என்ற சொல், அவர் சொல்லச் சொல்ல இவர் எழுதியதா என்றும் தெரியவில்லை!

    SK, ராகவன் எங்கே? திருப்புகழ் விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  7. //இலவசக்கொத்தனார் said...
    தென் திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியருக்குக் கோயில் உண்டு. சென்னை பாண்டி பஜார் அருகிலும் ஒரு கோயில் உண்டு. மற்ற இடங்களில் அகத்தியர் கோயில் இருக்கின்றனவா?//

    அகத்தியர் மலை (திருநெல்வேலியா?)சற்று பிரபலம்.
    சித்தர் மடங்களில் எல்லாம் அகத்தியர் இருப்பாரு. தலைக்காவிரியில் இருக்கான்னு தெரியலை!

    //நல்ல பாடல் தந்ததிற்கு நன்றி ரவி. சந்தானம் அவர்கள் பாடி கேட்கப் பிடித்தது/

    உங்களுக்கு சந்தானம் பாடியது தான் பிடிக்கும்னு தெரியுமே! :-)

    ReplyDelete
  8. //குமரன் (Kumaran) said...
    சண்முக நாயகன் தோன்றிடுவான்; சிவ சத்குரு நாயகன் தோன்றிடுவான் என்ற சிந்துபாடலும் சிறுவயதில் படித்துப் பாடியிருக்கிறேன்//

    அடுத்த முருகனருள் பாட்டு ரெடி!:-)

    //இந்தப் பாடல் அம்பிகை பாடல் என்றாலும் நீங்கள் தந்த சுட்டிகளில் பெண்கள் பாடியதை விட சந்தானம் பாடியதே மிக நன்றாக இருப்பது போல் ஒரு தோற்றம் வருகிறது.//

    ச்சோ ச்சோ...
    நவராத்திரி அதுவுமா பெண்களுக்கு சப்போர்ட் பண்ணாம இப்படிச் சொல்லிடீங்களே! இன்னிக்கி வீட்டுல உங்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா தோசை தான்! :-)

    ReplyDelete
  9. //குமரன் (Kumaran) said...
    அகத்தியரைப் பற்றிய தியரிகள் பல இருக்கின்றன. ஒருவருக்கொருவர் தொடர்பில்லாத ஒளவையார்கள் பலர் இருந்ததைப் போல் அகத்தியர்களும் பலர் இருந்திருக்கலாம். அல்லது சங்கராச்சாரியர்கள் என்று ஒரு பரம்பரையே சங்கரர்களாக அறியப்படுவதைப் போல் அகத்தியர்கள் ஒரு சாதுப் பரம்பரையாக இருந்திருக்கலாம்.//

    ஹூம்...இருக்கலாம்!
    ஒருவரே இவ்வளவு சாதித்திருப்பாரா-ன்னு பலருக்கும் சந்தேகம்!

    //ஆனால் தொன்மங்கள் சொல்லுவது போலவும் சித்த இலக்கியங்களில் கிடைப்பவை போலவும் எல்லாமும் செய்த ஒரே குள்ளமுனியாக ஒருவர் இருந்தாரா என்பது ஐயமே. இது முன்னீடு (Proposal) அளவில் தான் இப்போது இருக்கிறது. முடிந்த முடிபாகச் சொல்ல இயலவில்லை. இன்னும்//

    அகத்தியர் ஆராய்ச்சி தஞ்சைத் தமிழ்ப் பல்கலையில் நடந்தது. அது பற்றிய சுட்டி தேட வேண்டும். tamilvu.org இல் கிடைத்தாலும் கிடைக்கலாம்!

    ReplyDelete
  10. //தி. ரா. ச.(T.R.C.) said...
    நல்ல பாட்டை சரியாண சமயத்தில் கொடுத்ததற்கு நன்றி.//

    திராச வராமல் ஒரு இசைப் பதிவா!
    இனிய நவராத்திரி வாழ்த்துக்கள் திராச!

    ReplyDelete
  11. can't get listen the songs.....th link problem...

    ReplyDelete
  12. Namaskarams and thanks for sharing. I would like to suggest replacing முன்னர் with முன் ஊழ் in the following line.
    நிழல் எனத் தொடர்ந்த முன்னர் கொடுமையை நீங்கச் செய்தாய்.

    Best Wishes.

    ReplyDelete