Sunday, April 5, 2009

காட்சியெல்லாம் மீனாட்சி ! (பங்குனியில் ஒரு நவராத்திரி - 6)



உலகத்திலே காண்ப தெல்லாம்
உன் னுருவாய் தோணுதம்மா
உள்ளத்திலே உன் நினைவே
உயிர் மூச்சாய் ஆனதம்மா

பச்சை நிறம் பார்க்கையிலே
பசுமை யதன் குளிர்ச்சியிலே
இச்சா சக்தி உன்நிறமே
இத மாகத் தோணுதம்மா

கீழை வானச் சிவப்பினிலே
கிளியின் சிவந்த மூக்கினிலே - உன்
பவழ வாய்ச் சிவப்பழகே
பரவச மாய் தோணுதம்மா

கதிர வனைக் காணுகையில் - உன்
கண் ணொளியே தோணுதம்மா
நில வொளியில் நனைகையிலே - உன்
விழியின் குளுமை தழுவுதம்மா

மலர்கள் மலர்ந்து சிரிக்கையிலே - உன்
முறுவல் நினைவில் தோணுதம்மா
பட்டாம் பூச்சி பறக்கையிலே - உன்
இமைகள் சிறகு அடிக்குதம்மா

வெள்ளிக் கெண்டை மீனினமும்
துள்ளித் தாவும் மானினமும்
சுற்றும் கரு வண்டினமும் - உன்
கொஞ்சும் விழிகள் ஆனதம்மா

அன்னப் பறவை நடையினிலும்
தோகை மயிலின் அசைவினிலும்
தென்றல் காற்றின் மென்மையிலும்
உந்தன் நளினம் தோணுதம்மா

உலகத்திலே காண்ப தெல்லாம்
உன் னுருவாய் தோணுதம்மா
உள்ளத்திலே உன் நினைவே
உயிர் மூச்சாய் ஆனதம்மா!


--கவிநயா

10 comments:

  1. அன்னையி திருக்கோவில் குடமுழுக்கை முன்னிட்டு மிக நல்ல பாடல் அக்கா.

    ReplyDelete
  2. முதல் ஆளாக வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குமரா :)

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு பதிவிட வேண்டும் என்ற உங்கள் அருமையான யோசனைக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  3. //கீழை வானச் சிவப்பினிலே
    கிளியின் சிவந்த மூக்கினிலே - உன்
    பவழ வாய்ச் சிவப்பழகே//

    பரவச மாய் தோணுதக்கா! :))

    ReplyDelete
  4. நன்றி கண்ணா :)

    ReplyDelete
  5. நல்ல கவிநயம் மிக்க பாடல்!

    இதில் மனிதர்களும் அப்படித் தோன்றியிருந்தால் இன்னும் சிறந்திருக்கும் என எண்ணுகிறேன்.

    தேவை தனை யறிந்து
    தன்னன்பைப் பாலாக்கித்
    தானீந்த அன்னையிலே
    தேவீ நின்முகமே தெரியுதம்மா!

    கைபிடித்துக் கூட்டிச் சென்று
    கேட்டதெல்லாம் வாங்கித் தந்து
    துணையாக வந்த தந்தை
    நீயேயன்றி வேறு எவரம்மா!

    நிலத்தினிலே பாடுபட்டு
    நெற்றிவேர்வை நிலத்தில் விழ
    சோறளிக்கும் விவசாயி
    நின்வடிவாய்த் தோணுதம்மா!

    உதவிவேண்டும் ஏழைக்குத்
    தன்னுதவி அளித்து வரும்
    எத்தனையோ நல்லவரும்
    நின்னுருவாய்த் தோணுதம்மா!

    யாவினும் நலம் சூழ்க!

    ReplyDelete
  6. வாங்க அண்ணா. நீங்கள் சொல்வதும் சரிதான். கவிதைக்கு மெருகூட்டியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. மிக அருமையாகச் செய்திருக்கிங்க கவிக்கோ கவிக்கா.. :-)

    ReplyDelete
  8. வாங்க மௌலி. ரொம்ப நாளா இந்த பக்கம் காணும்? வருகைக்கும் வாசிப்புக்கும் மிக்க நன்றி :)

    ReplyDelete
  9. உலகத்திலே எனும் பாடல் அற்புதம்.

    ஈசனை உணர்ந்தவர் எங்கும் பார்ப்பது ஈசனே.

    உங்கள் பாடலை கானடா ராகத்தில் பாட முயற்சித்திருக்கிறேன்.
    வருக.
    http://menakasury.blogspot.com

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  10. வாங்க சுப்பு தாத்தா.

    நீங்க தேர்ந்தெடுத்த ராகம் மிகவும் இனிமையாகவும் மென்மையாகவும் பொருத்தமாக கண் பனிக்கும் வண்ணம் அமைஞ்சிருக்கு. மிக்க நன்றி.

    எப்போதும் பாடலுக்கு சுட்டி மட்டும் குடுத்துட்டு கவிதை பற்றி எதுவும் சொல்லாமயே போயிடறீங்க என்கிற குறை இருந்தது; அந்தக் குறையை இப்போ நிவர்த்தி செய்திட்டீங்க. அதுக்கும் சேர்த்து மிக்க நன்றி :)

    ReplyDelete