Monday, December 7, 2009

உன்னைச் சேரும்வழி காட்ட வேண்டும்!

உன்னைச் சேரவழி காட்ட வேண்டும் - அம்மா
உன்னைச் சேரும்வழி காட்ட வேண்டும்

வான்வெளியில் வழிமறந்த சிறுபறவைபோல
தொலைந்துஅலைக் கழியும்உந்தன் மகளைப்பார்ப்பாய்
தன்சிறகில் தாங்கிக்கொள்ளும் தாய்ப்பறவையாக
என்றுநீ ஓடிவந்து என்னைக் காப்பாய்?

கடல்உந்தன் இருப்பறியா ஓடையாய்இருந்தேன்
நதியாக என்னைநீ அருளிச் செய்தாய்
நதியான பின்னரும் நடைதானே பழகுகிறேன்
விரைந்தோடி வந்துஉன்னை அடையச்செய்வாய்

இதயத்தின் துடிப்போடு உந்தன்திருநாமம்
லயத்தோடு கதியோடு துடித்திருக்க வேண்டும்
உயிர்த்துடிப்பு நின்றாலும் உள்ளிருக்கும் அன்பு
கள்ளிருக்கும் பூப்போலக் கனிந்திருக்க வேண்டும்

உனையன்றி வேறென்ன வேண்டும் அம்மா
எனக்குன் அன்பன்றி வேறென்ன வேண்டும்?
கனவினிலும் நினைவினிலும் உந்தன்மலரடியில்
என்றென்றும் அடைக்கலமாய் நானிருக்க வேண்டும்

உன்னைச் சேரவழி காட்ட வேண்டும் - அம்மா
உன்னைச் சேரும்வழி காட்ட வேண்டும்


--கவிநயா

6 comments:

  1. //கனவினிலும் நினைவினிலும் உந்தன்மலரடியில்
    என்றென்றும் அடைக்கலமாய் நானிருக்க வேண்டும்//

    எல்லோரின் வேண்டுதலும் இதுவாகவே இருக்க அருள் புரிவாய் ஆதி சக்தி அன்னையே.

    ReplyDelete
  2. வாருங்கள் கைலாஷி. ஆமாம், அதை விட சிறந்தது வேறு என்ன இருக்கிறது? வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. நதிக்கு எல்லாம் வழி காட்ட வேண்டியதில்லையாம். தானவே கடல் போய் சேருமாம். :-)

    ReplyDelete
  4. //நதிக்கு எல்லாம் வழி காட்ட வேண்டியதில்லையாம். தானவே கடல் போய் சேருமாம். :-)//

    ஆஹா :) ஆனா கடலில் போய் சேராத நதிகளும் இருக்காமே. அப்படி ஆகிடாம இருக்கணும்!

    நல்ல வார்த்தைக்கு நன்றி ராதா :)

    ReplyDelete
  5. தொலைந்த சிறு பறவையை மனக்கண்ணில் எண்ணிப் பார்த்தேன். அதன் துயரம் நெஞ்சைச் சிலிர்த்தது.

    ReplyDelete
  6. //தொலைந்த சிறு பறவையை மனக்கண்ணில் எண்ணிப் பார்த்தேன். அதன் துயரம் நெஞ்சைச் சிலிர்த்தது.//

    உங்களுக்கு புரியுது, அவளுக்கும் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன் :) நன்றி குமரா.

    ReplyDelete