Tuesday, September 7, 2010

விழியழகி!



வெள்ளைப் பாற்கடலில் துள்ளுகின்ற மீனினமோ
கள்ளைக் கடிமலரில் தேடுகின்ற வண்டினமோ

முள்ளை மலராக்கி மாயம்செய்யும் மந்திரமோ
கல்லைக் கனியாக்கும் கனிவுமதன் தந்திரமோ

வில்லைக் கையேந்தும் மன்மதனின் அம்புகளோ
தில்லைச் சுந்தரனை துரத்திவரும் வம்புகளோ

காலைக் கதிரவனும் கடன்வாங்கும் சூரியரோ
மாலை முழுமதியும் மயங்குகின்ற சந்திரரோ

பால முருகன்கையில் வேலெனவே வந்தனவோ
கோல மயில்எழிலாய் அவனுடனே சென்றனவோ

நீல மயில்தோகை இமைகளென ஆனதுவோ
நீல கண்டனுக்கு விரித்திருக்கும் வலையதுவோ

கருணை பொழியவென்றே கருத்திருக்கும் முகிலதுவோ
மருளை நீக்கவென்றே காத்திருக்கும் ஒளியதுவோ

கருக மணியழகோ மருண்டுஓடும் மானழகோ
விரையும் எதிரியையும் வெல்லுகின்ற வாளழகோ

பிறையைச் சூடியவன் மனம்மீட்டும் வாத்தியமோ
இறைவியுன் விழியழகை பாடுவதும் சாத்தியமோ!


--கவிநயா

12 comments:

  1. //தில்லைச் சுந்தரனை துரத்திவரும் வம்புகளோ//

    உமையவளின் விழியழகில் உருகி உருகி எழுதியிருக்கீங்க.

    அருமை!

    ReplyDelete
  2. super song ithu
    summa asathukirathu
    thatha beemaplas ennum ragathile
    padaraaru.

    kezhunga,,kezhunga,,kettukitte irunga

    subbu thatha
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  3. பிறையைச் சூடியவன் மனம்மீட்டும் வாத்தியமோ ineya varikal

    ReplyDelete
  4. //உமையவளின் விழியழகில் உருகி உருகி எழுதியிருக்கீங்க.//

    :)

    //அருமை!//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி சுந்தரா.

    ReplyDelete
  5. //thatha beemaplas ennum ragathile
    padaraaru.//

    ராகம் மிகப் பொருத்தமா இருக்கு தாத்தா. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. //பிறையைச் சூடியவன் மனம்மீட்டும் வாத்தியமோ ineya varikal//

    மிக்க நன்றி சித்ரா.

    ReplyDelete
  7. ஒவ்வொரு வரியும் அழகு!

    ReplyDelete
  8. //ஒவ்வொரு வரியும் அழகு!//

    மிக்க நன்றி குமரா :)

    ReplyDelete
  9. அருமை

    வரிகளை நன்றாக இரசித்தேன்

    ReplyDelete
  10. //வரிகளை நன்றாக இரசித்தேன்//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும், திகழ்.

    ReplyDelete
  11. வரிக்கு வரி அழகு....

    //வெள்ளைப் பாற்கடலில் துள்ளுகின்ற மீனினமோ
    கள்ளைக் கடிமலரில் தேடுகின்ற வண்டினமோ

    முள்ளை மலராக்கி மாயம்செய்யும் மந்திரமோ
    கல்லைக் கனியாக்கும் கனிவுமதன் தந்திரமோ//

    இதை விட சிறப்பாக வர்ணிக்க முடியுமா என்று தெரியவில்லை...

    //பிறையைச் சூடியவன் மனம்மீட்டும் வாத்தியமோ
    இறைவியுன் விழியழகை பாடுவதும் சாத்தியமோ!//

    முடிவில் முத்தாய்ப்பாய் சொல்லி முடித்தமை நன்று....

    கவிநயா என்ற பெயர் மிக உங்களுக்கு மிக பொருத்தமே...

    ReplyDelete
  12. உங்கள் வருகையும் ரசனையும் மகிழ்ச்சி அளிக்கின்றன கோபி. அழகியவளைப் பாடுகையில் வரிகளுக்கு அழகாக வந்து விழுவதைத் தவிர வேறு வழியில்லைதானே :)

    ReplyDelete