Monday, December 20, 2010

நீயே என் நினைவுக்குள் நிலையானவள்!


நீயே என் நினைவுக்குள் நிலையானவள்
தாயே என் மனதுக்கு சுகமானவள்
மாயே என் மயக்கங்கள் களைகின்றவள்
சேயென்று எனை அள்ளி அணைக்கின்றவள்

விழியினில் விழுந் தென்னை இழுக்கின்றவள் - என்
மொழியினில் நுழைந் திசையாய் ஒலிக்கின்றவள்
ஒளிகளுக் கெலாம் ஒளியாய் ஜொலிக்கின்றவள் - அண்ட
வெளியெங்கும் தண் ணருளால் நிறைக்கின்றவள்

மலரினில் நிற மாகி சிரிக்கின்றவள் - அதன்
மகரந்தம் தா னாகி மணக்கின்றவள்
சொல்லோடு பொரு ளாகி சுவைக்கின்றவள் - அவள்
கன்றோடு பசு வாகி களிக்கின்றவள்

பல்லுயி ராய் மண்ணில் பிறக்கின்றவள் - அவள்
இன்னுயி ராய் என்னில் இருக்கின்றவள்
தன்னுயி ராய் நம்மை காக்கின்றவள் - அவள்
பொன்னடி பணி வோரை ஏற்கின்றவள்!

--கவிநயா

5 comments:

  1. வழக்கம் போல நல்லா இருக்குங்க. ஒரே ஒரு சந்தேகம்.

    ஆரம்பத்தில் 'நீ' என்று விளித்துவிட்டுப் பின்னாடி 'அவள்'அப்படின்னு வருதே. சரியா?

    ஏதாவது தப்பக் கேட்டிருந்தா கண்டுக்காம உட்டுடுங்க:)

    ReplyDelete
  2. நல்ல சந்தேகம்தான் :) ஏனோ எழுதும்போது எனக்கு தோணவே இல்லை. நீங்க கேட்ட பிறகு அட, ஆமான்னு தோணுது. இலக்கணப்படி பார்த்தா தவறுதான்னு நினைக்கிறேன்! ஆனா அம்மா மன்னிச்சிடுவா :)

    உடனடியா வாசிச்சதுக்கு மிக்க நன்றி கோபி.

    ReplyDelete
  3. அக்கா,
    "பலே பாண்டியா" படம் பார்த்து இருக்கீங்களா? "நீயே என்றும் உனக்கு நிகரானவன் !" அப்படின்னு ஒரு பாட்டு வரும். அந்த ராகத்தில் பாடி பார்த்தால் அருமையா பொருந்தி வருது. :-)

    ReplyDelete
  4. நீங்க சொன்ன பிறகு கேட்டேன் (ரொம்ம்ம்ம்ப காலத்துக்கு முந்தி கேட்டிருக்கேன் :)

    மிக்க நன்றி ராதா.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete