Monday, November 21, 2011

நீயே கதி!


பலமுறை உனைப் பணிந்தேன்
பதமலர் தனில் விழுந்தேன்
கதியென உனைப் பிடித்தேன் அம்மா
நதியென எனை நனைப்பாய் அம்மா!

பண்ணில் உனைத் தினம்
பாடி அழைக்கின்றேன்
காதில் விழ வில்லையோ?

மண்ணின் மாந்தரெல்லாம்
போற்றும் அன்னைக்கிந்தப்
பிள்ளையொரு தொல்லையோ?

விண்ணின் தேவருக்கு
அருள இரங்கிவந்தாய்
எனக்கு என்று அருள்வாய்?

கண்ணின் மணியுன்னைப்
போற்றித் துதிக்கின்றேன்
காக்க ஓடி வருவாய்

கல்லும் கரையுமிந்தப்
பெண்ணின் கவிகேட்டுன்
உள்ளம் கரைய வில்லையோ?

முள்ளை மலராக்கும்
தீயைப் பனியாக்கும்
பார்வை எனக் கில்லையோ?

உன்னை அன்றி ஒரு
நினைவு எனக்கில்லை
என்றன் அன்பை அறிவாய்

கண்ணில் வழிந்தோடும்
நீரைத் துடைத்திடவே
அன்னை நீயே வருவாய்!


--கவிநயா

2 comments:

  1. தேனிசைத் தமிழிலே
    ஊனுருகப் பாடி
    நானுன்னை வேண்டிடினும்

    தூண் பிளந்து சேய்முன் தோன்றியோன் தங்கையே!
    ஏனிந்த மௌனமம்மா?

    ReplyDelete
  2. வாங்க லலிதாம்மா!

    ReplyDelete