Monday, December 26, 2011

வாழிய வாழிய வாழியவே!


மீனாட்சி அம்மை குழந்தைப் பருவம். 

'ஆடுக ஊஞ்சல் ஆடுகவே' மெட்டில்...



வாழிய மீனாள் வாழியவே
வானவர் தானவர் போற்றிடவே!
வாழிய மீனாள் வாழியவே
வையகம் போற்றிட வாழியவே! (1)


(காப்பு)
கணபதி கந்தனும் காத்திடவே
மால் நான் முகனும் வாழ்த்திடவே
அம்மையும் அப்பனும் அருளிடவே
அன்னையும் உதித்தாள் அவனியிலே! (2)

மலயத்துவசன் மனம் மகிழ
மதுரை நகரே மண மணக்க
தழலின் நடுவே தாமரை போல்
தங்கத் தாயவள் உதித்தனளே! (3)

மும்முலை கொண்ட மகள் கண்டு
மன்னவனும் மதி மயங்கினனே
கைத்தலம் பற்றுவன் கண்டவுடன்
மறைந்திடும் எனும் செய்தி கேட்டனனே! (4)

காஞ்சன மாலை மடியினிலே
களிப்புடன் தவழ்ந்தாள் குழந்தையென
கண்டவர் மனங்கள் கனிந்திடவே
‘களுக்’கென்று சிரித்தாள் கன்னங் குழிய! (5)


(செங்கீரை)
வெள்ளித் தண்டைக் கால் நீட்டி
கொள்ளை எழில்மதி முகம் உயர்த்தி
செல்லம் போலே மீனாளும்
செங்கீரை போலே ஆடினளே! (6)


(தால)
உலகிதன் உயிர்களை பிள்ளையென
உதரத்தில் காத்திடும் உமையவளும்
தானே தளிரென பிள்ளையைப் போல்
தாயவள் தாலாட்டில் உறங்கினளே! (7)


(சப்பாணி)
அபயம் அளிக்கும் கரங்களினை
அழகாய்ச் சேர்த்து அன்னையவள்
சகல உயிர்களும் சந்தோஷம் கொள்ள
சப்பாணி கொட்டி மகிழ்ந்தனளே! (8)


(முத்தம்)
பவழம் ஒத்த செவ்வாயில்
பாகை ஒக்கும் தேனொழுக
பக்கம் வந்து பெற்றவர்க்கு
பரிசாய் முத்தங்கள் தந்தனளே! (9)

(வாரானை)
வாவா வென்று தாயழைக்க
வாஞ்சை மீற தந்தை யழைக்க
அகிலத்தை நடத்தும் அங்கயற்கண்ணி
தளிர்ப் பதம் பதித்து நடந்தனளே! (10)


(அம்புலி)
வானில் அம்புலி கண்டனளாம்
விளையாட ஆசை கொண்டனளாம்
சின்னஞ் சிறிய கரம் உயர்த்தி
அவனை அருகினில் அழைத்தனளே! (11)


(சிற்றில்)
வைகை ஆற்றின் கரையினிலே
வாகாய் மணலைக் குவித்தெடுத்து
அதிலே கொஞ்சம் நீர் தெளித்து
அழகாய்ச் சிற்றில் செய்தனளே! (12)


(கழங்காடல்)
கல்லாங் காய்கள் எடுத்து வந்து
கருத்துடன் அவற்றைச் சேர்த்து வந்து
களிப்புடன் அன்னை மீனாளும்
கழங்காடி மிக மகிழ்ந்தனளே! (13)


(அம்மானை)
பந்தார் விரலி பந்தெடுத்து
அதற்குத் துணையாய்ப் பாட்டெடுத்து
புவியினர் எல்லாம் வியந்திடவே
பாங்குடன் அம்மானை ஆடினளே! (14)


(ஊசல்)
மாயை என்னும் ஊஞ்சலிலே
மாந்தரை ஆட்டிடும் மங்கையவள்
மரகத ஊஞ்சல் தனிலமர்ந்து
மதுரை மகிழ ஆடினளே! (15)


வாழிய மீனாள் வாழியவே
வானகம் வையகம் வாழ்த்திடவே
வாழிய மீனாள் வாழியவே
வணங்குவர் உள்ளத்தில் வாழியவே! (16)




--கவிநயா

17 comments:

  1. குட்டி மீனாள் திருக்காட்சி மட்டற்ற மகிழ்ச்சியளித்தது ;என்ன சொல்றதுன்னே தெரியலை !

    ReplyDelete
  2. மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் அருமை

    ReplyDelete
  3. வாழிய மீனாள் வாழியவே
    மனதைக் கவர்ந்த மீனாட்சியின்
    புகழை மிக அருமையான தமிழில்
    வாழ்த்திய கவிநயாவும்
    வாழி வாழியவே

    திவாகர்

    ReplyDelete
  4. //குட்டி மீனாள்//

    ச்வீட் :) நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  5. //மீனாக்ஷி பிள்ளைத்தமிழ் அருமை//

    நன்றி கைலாஷி :)

    ReplyDelete
  6. //வாழிய மீனாள் வாழியவே
    மனதைக் கவர்ந்த மீனாட்சியின்
    புகழை மிக அருமையான தமிழில்
    வாழ்த்திய கவிநயாவும்
    வாழி வாழியவே//

    ஆசிகளுக்கு நன்றி திவாகர் ஜி :)

    ReplyDelete
  7. Evvalavu alagu!Miga arpuyham>
    Natarajan.

    ReplyDelete
  8. madurai kovil-a garbha-grahathai adutha pragarathil meenakshi's sila roopams in all theparuvams are there. this poem has reminded me of that.

    Great work akka... Thank you.

    ReplyDelete
  9. //Evvalavu alagu!Miga arpuyham>
    Natarajan.//

    நன்றி திரு.நடராஜன் :)

    ReplyDelete
  10. //madurai kovil-a garbha-grahathai adutha pragarathil meenakshi's sila roopams in all theparuvams are there. this poem has reminded me of that.//

    ஆமாம், எனக்கும் அது நினைவிருக்கு.

    //Great work akka... Thank you.//

    மதுரைக்காரர் சொன்னா சரிதான் :) நன்றி மௌலி.

    ReplyDelete
  11. மீனாட்சி குட்டி கவினயாக்காவோட தமிழ் வழியா தத்தி தத்தி தவழ்ந்து வந்து நம்ப கன்னத்துல எச்சில் முத்தம் தரர்து மாதிரி இருக்கு. :)

    ReplyDelete
  12. வருக தக்குடு! புது மாப்பிள்ளையின் வரவு மகிழ்ச்சி தருகிறது :)

    //மீனாட்சி குட்டி தத்தி தத்தி தவழ்ந்து வந்துநம்ப கன்னத்துல எச்சில் முத்தம் தரர்து மாதிரி இருக்கு.//

    சீக்கிரமே நனவாக வாழ்த்துகள்! :)

    ReplyDelete
  13. ஆஹா, அப்பு விளையாட்டை நேரிலே பார்த்துட்டு எழுதினாப்போல் இருக்கே!

    மீனாக்ஷி நேரிலேயே வந்துவிட்டாள். நல்லதொரு கவிதைக்கு நன்றி.

    ReplyDelete
  14. //ஆஹா, அப்பு விளையாட்டை நேரிலே பார்த்துட்டு எழுதினாப்போல் இருக்கே!//

    பார்த்தா இன்னும் நல்லா எழுதலாமோ என்னவோ :)

    //மீனாக்ஷி நேரிலேயே வந்துவிட்டாள். நல்லதொரு கவிதைக்கு நன்றி.//

    மிக்க மகிழ்ச்சியும், நன்றியும் கீதாம்மா.

    ReplyDelete
  15. பாடிக் குடுத்துவிட்டுப் பின்னூட்டம் போடலாம்ன்னு பாக்குறேன். நேரம் கிடைக்க மாட்டேங்குது. :-)

    ரொம்ப அழகா எளிமையா எழுதியிருக்கீங்க அக்கா.

    ReplyDelete
  16. //பாடிக் குடுத்துவிட்டுப் பின்னூட்டம் போடலாம்ன்னு பாக்குறேன். நேரம் கிடைக்க மாட்டேங்குது. :-)//

    மீனாக்ஷி குமரனுக்கு பாட்டுப் பாட நேரம் கண்டு பிடிச்சுக் குடு! :)

    //ரொம்ப அழகா எளிமையா எழுதியிருக்கீங்க அக்கா.//

    நன்றிப்பா :)

    ReplyDelete