Monday, January 2, 2012

ஸ்ரீ சாரதா புஜங்கம்


அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவருக்கும் நிறைந்திருக்கட்டும்!

முன்பு ஒரு முறை மௌலி ஸ்ரீ சாரதா புஜங்கத்தின் பொருளை எழுதியிருந்தார். அதை வைத்து எழுதிய பாடல் இங்கே... நன்றி மௌலி.





காருண்ய தேவதையே
சாந்தம்மிகு சாரதையே
அன்புடனே பதம் பணிந்தோமே - உந்தன்
அருளினையே வேண்டி நின்றோமே!
பொன்கலசம் போல்முலையாள்
தண்கருணை யால்அருள்வாள்
அமிர்தத்தை கரத்தினில் கொண்டாள் - அன்னை
பதம்துதித்தோர் மனதினில் உறைவாள்!


முழுநிலவைப் போல்ஒளிர்வாள்
எழில்மிகுந்த நகைபுரிவாள்
கருணையுடன் காத்திடுவாளே - அன்னை
சாரதையின் பதம்பணிவோமே!


கடைக்கண்ணின் கருணையினால்
கண்ணிமைபோல் காத்திடுவாள்
கலைகளுக்கு நாயகியாவாள் - அன்னை
அழகுக்கெல்லாம் அரசியுமாவாள்!
 

அணிகலன்கள் அணிந்திருப்பாள்
தங்கம்போல ஜொலித்திருப்பாள்
துங்கைநதிக் கரையோரத்தில் -  ஞான
முத்ரையுடன் அருளிடுவாளே!


நெற்றியிலே சுட்டியுடன்
கரத்தில்அக்ஷ மாலையுடன்
அணிகளுடன் ஒளிர்ந்திடுவாளே - அன்னை
அன்புடனே அரவணைப்பாளே!
பண்படிக்க மகிழ்ந்திடுவாள்
பக்தர்களை காத்திடுவாள்
எழில்மிகுந்த எங்கள் சாரதை - அவளின்
அடிபணிந்து வணங்கிடுவோமே!


உச்சிவகிடு மின்னிடவே
நீண்டபின்னல் துலங்கிடவே
குஞ்சலங்கள் அணிந்திருப்பாளே - அன்னை
அலையழகாய் கூந்தல்கொண்டாளே!


மான்போல மருள்விழியாள்
தேன்போல கிளிமொழியாள்
இந்திராதி தேவர் பணிந்திட - அன்னை
காந்திமிகத் திகழ்ந்திடுவாளே!


அழகுக்கு ஒருவருமே
ஒவ்வாத எழிலுடையாள்
மின்கொடிபோல் மேனியைக்கொண்டாள் - அன்னை
அனைத்துக்கும் முதலாய்நின்றாள்!


நிர்மலமாம் குணமுடையாள்
தவமுனிவர் தொழும்படியாய்
உலகெங்கும் அவளாய்நின்றாள் - அன்னை
அவளேதான் உலகாய்நின்றாள்!


பலப்பலவாம் வாகனத்தில்
சுபநவமி காலங்களில்
எழுந்தருளி அருள்புரிவாளே - அன்னை
சாரதையை வணங்கிடுவோமே!


அனல்ரூப மானவளாம்
அனைத்துலகும் ஆள்பவளாம்
இதயமெனும் தாமரைமலரில் - அன்னை
வண்டெனவே ரீங்கரிப்பாளாம்!


நடன,நாத தோத்திரத்தின்
அடிநாதம் ஆனவளாம்
அன்பிற்கே இலக்கணமாவாள் - அன்னை
சாரதையின் அடிபணிவோமே!

முக்கண்ணன் மாதவனும்
முனிவர்களும் தேவர்களும்
நான்முகனும் வணங்கிடுவாரே - சாரதையை
அன்புடனே பணிந்திடுவாரே!


இருசெவியில் குண்டலங்கள்
எழிலுடனே அசைந்திருக்க
ஒளிவீசும் நகைபுரிவாளே - அன்னை
சாரதையை வணங்கிடுவோமே!


--கவிநயா

7 comments:

  1. ரொம்ப ரொம்ப அழகான வரிகள்! எல்லா வரியையும் லயிச்சு வாசிச்சாலும் கடைசி நாலு வரி ப்ரமாதம்! :-)

    ReplyDelete
  2. ஆஹா!....நான் எழுதியிருக்கேனா?, எனக்கே நினைவில்லை.... எனிவே லிங்க் கொடுத்தமைக்கு நன்றிகள் கவிக்கா

    ReplyDelete
  3. குண்டலம்னாலே தக்குடுவுக்கு பிடிக்குமே :) வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி தம்பி!

    ReplyDelete
  4. //ஆஹா!....நான் எழுதியிருக்கேனா?, எனக்கே நினைவில்லை.... எனிவே லிங்க் கொடுத்தமைக்கு நன்றிகள் கவிக்கா//

    ஆமா... நீங்க ஆஞ்சநேயர் மாதிரி, மௌலி.
    ... உங்க சிறப்பு உங்களுக்கே தெரியலைன்னு சொல்ல வந்தேன் :) வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  5. ஒவ்வொரு வரியிலும் தேனருவி!

    ReplyDelete
  6. வாங்க லலிதாம்மா! நன்றி :)

    ReplyDelete