Monday, May 7, 2012

தாயே!தாள் பதிப்பாய்!


( ' சர்வம் நீயே 'வலையில் சிலமாதங்கள் முன் நான் எழுதி
 கலா பாடிய அன்னை பாட்டு இன்று அம்மன் பாட்டு அன்பர்களுக்காக இங்கே : )

தாயே!தாள் பதிப்பாய்!

(subbusir  sings :
http://www.youtube.com/watch?v=1NtBs_ne5D8&feature=email )

 மின்னல் முகிலிடையே பளிச்சிடுவதுபோல்
கன்னங்கரு முடியிடையே வகிடு மின்ன,
கன்னல்கரத்தாளாய்க் காணும் அபிராமி!
உன்பொன்னடி சென்னியில் பதித்துவிடு!

விடம் விழுங்கிய விடையவன் மேனியிலே
இடப்பாகம் அபகரணம் செய்தவளே!
மதங்கன் மகளே!உந்தன் மலரடியால்
மடமதியேன் சென்னியை மிதித்துவிடு!


அத்தையாய்க் குறமகள் உறவாடுகிறாள்!
தத்தையும் தொற்றிக்கொண்டதே உன் தோளில்!
சொத்தையோ,சுக வாழ்வையோ வேண்டவில்லை;
பக்தைமேலுந்தன் தாள் பட்டால் போதுமம்மா!


அன்று பிதற்றிய பட்டருக்குதவிடவே
விண்ணில் முழுமதி காட்டி நீ வியக்கவைத்தாய்!
இன்று பாட்டென எண்ணிப் பிதற்றி நிற்கும்
எந்தன் சென்னியில் தாயே!தாள் பதிப்பாய்!

----------------------------------------------------------------------------------------------------

                      பரமாச்சாரியாரின் 'அம்பிகை அருளும் தீக்ஷைகள்'
                      என்ற கட்டுரையின் சாரம்:

ஒவ்வொரு ரூபத்தில் அம்பாள் மூன்றுவித தீக்ஷைகள்
அருள்கிறாள்:(1) ஸ்பர்ச தீக்ஷை அல்லது''குக்குட[கோழி]தீக்ஷை"
2)நயன தீக்ஷை அல்லது ''மத்ஸ்ய [மீன்]தீக்ஷை''
3)மானஸ தீக்ஷை அல்லது ''கமட[ஆமை]தீக்ஷை''

               முட்டையின் கருவை ஓடு மறைப்பதுபோல் அஞான ஓடு
ஞானத்தை மறைக்கிறது;தாய்,முட்டையைக் குஞ்சு பொரிப்பதில் மூன்றுவகை :
முதலாவது: தாய்க்கோழி முட்டைமேல் உட்கார்ந்து அடைகாத்து
குஞ்சு பொரிக்கும்; ஸ்பர்ச தீக்ஷை இந்த வகை!காமாட்சிதான்
பக்தனின் தலையில்தாள் பதித்து [அபிராமபட்டர்போல்]
ஸ்பர்ச/கோழி தீக்ஷை அருளி அஞ்ஞான
ஓட்டை உடைக்கஉதுவுகிறாள் !

இரண்டாவது: முட்டையிட்ட தாய்மீன், நீரில் சஞ்சரித்தபடி
இருந்தாலும் முட்டையைத் தன் கண்ணால் தீக்ஷண்யமாகப் பார்க்குமாம்;அந்தப் பார்வையின் சக்தியால் ஓடுடைந்து
குஞ்சு வெளியில் வருமாம்;நயன தீக்ஷை இந்த வகை!
மீனாட்சிதான் தன் கடாக்ஷத்தாலேயே
நயன/மீன் தீக்ஷை அளிப்பவள் !

மூன்றாவது: நீரிலுள்ள தாய் ஆமை கரையில் வந்து
முட்டையிட்டு விட்டு நீருக்குத் திரும்பிப் போய்விடுமாம்;
தாய் ஓரிடம் முட்டை ஓரிடம் ஆனாலும்,தாயாமை முட்டை
நல்லபடிப் பொரிந்து குஞ்சு நலமாய் இருக்கணும் என்று
நினைத்தபடி இருக்குமாம் ;அதன் தீவிர நினைப்பின்
சக்தியிலேயே கரையிலுள்ள முட்டை வெடித்து குஞ்சு
நல்லபடி வெளிவருமாம்!மானஸதீக்ஷை இந்த வகை!
காசிவிசாலக்ஷி பக்தர்களை தன் அனுக்ரஹ சிந்தையோடு
மனசால் நினைத்தே கமட/ஆமை தீக்ஷை அளிப்பவள்!

      நான் மேலே அளித்துள்ள பாடல் காமாட்சி அன்னையின்
குக்குட தீக்ஷை பற்றிப் படித்ததும் என் மனத்தில் பொங்கிப்
பெருகிய ஏக்கத்துக்கு வடிகாலாக அமைந்த பாடல்.


No comments:

Post a Comment