Monday, May 21, 2012

பிரமனின் தோல்வி!



சுப்பு தாத்தா வலஜி ராகத்தில் இனிமை ததும்பப் பாடியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


இருவிழி போறாது கருவிழி சோராது
அம்மா உன் எழில் வடிவம் காண்பதற்கே!
பிறவிகள் போறாது மொழிகளும் சோராது
அம்மா உன் திருப்புகழைப் பாடுதற்கே!

நாரணி உன்றன் ஆணையினாலே
நான்முகன் உலகினைப் படைத்தான்!
வேதத்தின் வடிவாம் வேதஜனனீ உன்றன்
பாதங்கள் சிந்தையில் பதித்தான்!

கால் தொட்டுப் புரளும் கேசத்தைக் கண்டான்
கார் முகில்களை அவன் படைத்தான்!
பாலென ஒளிரும் திருமுகம் கண்டான்,
பால் நிலவினை அவன் படைத்தான்!

உன்நிறம் கண்டான் அருணனைப் படைத்தான்!
கண்ணொளி கண்டான் கதிரவன் படைத்தான்!
மெல்லிடை கண்டான் மின்னலைப் படைத்தான்!
கருணையைக் கண்டான் பெருமழை படைத்தான்!

உன் குரல் அழகால் குயிலினம் படைத்தான்!
உன் அசை வழகால் மயில்களைப் படைத்தான்!
உன் நடை அழகால் அன்னத்தைப் படைத்தான்!
உன்றன் வடிவாய் மங்கையர் படைத்தான்!

திருவடி அழகினைக் கண்டதி னாலே
தாமரை மலர்களைப் படைத்தான்
எத்தனை படைத்தும் திருப்தி கொள்ளாமல்
வித வித மலர்களைப் படைத்தான்

பலவித அழகுகள் படைத்த பின்னாலும்
படு தோல்வியையே கண்டான் – பிரமன்
படு தோல்வியையே கண்டான்!


--கவிநயா

7 comments:

  1. குரல் வளம் போறாது இசை ஞானம் போறாது
    கவி நயா கவிதை பாடுதற்கே..
    வரிகளில் மின்னுதே வைரங்கள் ஜொலிக்குதே
    வலஜியில் பாடி நான் மகிழ்வடைவேன்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  2. வலஜியில் நீங்க பாடி மகிழ்ந்ததை நானும் கேட்டு/பார்த்து மகிழ்ந்தேன் தாத்தா! மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. அம்மன் அழகை கவிதையில் அழகாக...

    ReplyDelete
  4. பாட்டு கலக்கல் ;இருவருக்கும் நன்றி !

    ReplyDelete
  5. i couldnt hear subbu sir singing;
    is there any code?

    ReplyDelete
  6. //அம்மன் அழகை கவிதையில் அழகாக...//

    முதல் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ஜனா :)

    ReplyDelete
  7. //பாட்டு கலக்கல் ;இருவருக்கும் நன்றி !//

    நன்றி லலிதாம்மா!

    //i couldnt hear subbu sir singing;
    is there any code?//

    இப்போ இருக்கிற சுட்டியை முயற்சித்துப் பாருங்கம்மா.

    ReplyDelete