Monday, May 14, 2012

நீயே வேண்டும்!






சுப்பு தாத்தா பாடித் தந்ததை கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


காற்றும் நுழைய இடமின்றி
கண்மணி நெஞ்சில் நீ வேண்டும்
திருவடி நிழலே தஞ்சம் எனநான்
உருகிக் கிடக்கும் நிலை வேண்டும்

பார்க்கும் பொருளில் எல்லாமே
பாவை உன்திரு முகம் வேண்டும்
கேட்கும் ஒலிகள் எல்லாமே
உன்றன் திருப் புகழாய் வேண்டும்

காற் சிலம்பொலிக்க வர வேண்டும்
கற்பகமே அருள் தர வேண்டும்
நாற் றிசையும் மனம் ஓடாமல்
நாயகியே நீ அதில் வேண்டும்!


--கவிநயா

9 comments:

  1. வலை களைகட்டிவிட்டது !


    "காற்றும் நுழைய இடமின்றி
    கண்மணி நெஞ்சில் நீ வேண்டும்"

    ஆரம்பமே ரொம்ப அழகு !

    பேசிட என்நா அசைந்தாலுன்
    பேர் ஒன்றே அதில் வர வேண்டும்;
    போகும் இடம் யாவும் உன்
    புனிதத்தலமாகும் வரம் வேண்டும் .

    ReplyDelete
  2. அன்புக்கு மிக்க நன்றி லலிதாம்மா! உங்க வரிகளும் அழகாக பொருந்தி வருது, பாடலுக்கு. (சுப்பு தாத்தா பாடித் தந்ததையும் கேளுங்க)

    ReplyDelete
  3. கண்மணி நெஞ்சில் என்னும் வார்த்தைகளை நான் இந்தப் பாடலில்
    கடைசியாக பாடும்பொழுது, என்னையும் அறியாது கவி நயா நெஞ்சில்
    எனப் பாடிவிட்டேன். யான் பிழை செய்திருந்தால் பொருத்தருள்க.

    நாற்றிசையும் மனம் ஓடாமல் என்பது நாற்றிசையும் மனம் நாடாமல்
    என்றும் இருக்கலாம்.

    நான்கு திசைகளிலும் மனதை ஈர்க்கும் பொருட்களை நாடாது ஈசன் பால் மனதைச்
    செலுத்துவது வேண்டப்படுவதுவே.

    நாற்றம் = மணம். அடுத்த சொல் இசை.
    மனதிற்குவந்த மணமும் இசையும் மனதை இழுத்துச் சென்றுவிடும் என்பது வெள்ளிடைமலை.
    மனம் போன போக்கில் கால் போகலாமா என்ற கவிஞர் கண்ணதாசன் பாடலை நினைவு கொண்டால்,
    இந்த மனத்தினை அறத்தின் பால் உய்ப்பது அறிவு என்பது புலப்படும். மனிதன் தன் மனத்தின் பின்
    போகாது, தன் மனத்தினை தன் பின்னே வரச்செய்வது ஆன்மீக எண்ணங்களால் உந்தப்படும்
    அறிவு பூர்வமான செயல்.

    அவ்வறிவே அற்றம் காக்கும் கருவி எனலாம்.

    வழக்கம்போலவே கருத்தாழமும் சொற்திறனும் கொண்ட சுந்தரக்கவிதை அது.
    இயற்றுவது கவினயா என்றால் வியப்பில்லை. அவரது முன் வினை புண்ணியமே.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. சுப்பு ஐயா பாடியதைக் கேட்டு ரசித்தேன் ;

    நாற்றம்+இசை என்ற விளக்கத்தையும் ரசித்தேன்;

    இந்த வரியில் கவிநயா நான்கு+திசை என்ற பொருளில் நாற்றிசை என்று
    எழுதியிருப்பதால் " நான்கு பக்கமும் மனம் அலைபாயாமல்"என்ற பொருள்பட "ஓடாமல்"என்று எழுதியிருப்பதும் அழகாக பொருந்துகிறது.

    ReplyDelete
  5. வாங்க தாத்தா.

    //என்னையும் அறியாது கவி நயா நெஞ்சில்
    எனப் பாடிவிட்டேன். யான் பிழை செய்திருந்தால் பொருத்தருள்க.//

    உங்கள் பிழை இல்லை, அவள் செயல் என்பதாகவே நினைத்து எனக்கு மெத்த மகிழ்ச்சியே!

    //இந்த மனத்தினை அறத்தின் பால் உய்ப்பது அறிவு என்பது புலப்படும். மனிதன் தன் மனத்தின் பின்
    போகாது, தன் மனத்தினை தன் பின்னே வரச்செய்வது ஆன்மீக எண்ணங்களால் உந்தப்படும்
    அறிவு பூர்வமான செயல்.//

    அழகாச் சொன்னீங்க தாத்தா.

    நாற்றிசையின் மணத்தையும் குணத்தையும் ரசித்தேன்.

    //அவரது முன் வினை புண்ணியமே.//

    உண்மைதான்னு நினைக்கிறேன்.

    ஆசிகளுக்கு மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  6. வாங்க லலிதாம்மா! நிச்சயம் நீங்க கேட்பீங்க, ரசிப்பீங்கன்னு தெரியும். மிக்க நன்றி. நான் தான் இன்னும் உங்களோடது கேட்கலை :( சீக்கிரம் வரேன்...

    ReplyDelete
  7. போகும் இடம் யாவும் உன்
    புனிதத்தலமாகும் வரம் வேண்டும் .

    ReplyDelete
  8. வாங்க ராஜேஷ்! உங்களையும் பாத்து ரொம்ப நாளாச்சு :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete