Wednesday, September 19, 2012

தாயின் ஊடல் தீர்த்த சேய் !

(thanks :google for picture )

         ஊடி நின்ற உமையை சமாதானப்படுத்த சிவனார்
அவளடி பணிய,ஐயன் சூடிய நிலவின் வெண்கதிரை
அன்னையின் பாதகமலத்தில் கண்ட கரிமுகக் குழந்தை,
அதனைத் தான் விரும்பியுண்ணும் தாமரைத்தண்டின்
நூல்கற்றை என எண்ணி தும்பிக்கையால் பிடித்திழுக்க
முயல,பிள்ளையின் இந்த சேட்டையைக் கண்ட
பெற்றோர் அவனைக் கட்டி அணைக்கையில்,
யதேச்சையாக ஏற்பட்ட பதியின் திவ்யஸ்பர்சத்தில்
உமை ஊடல் தீர்ந்ததாய்ச்சொல்லும் ஒருசம்ஸ்க்ருத
கவிதை படித்தேன்!

      அன்னையின் ஊடலுக்குக் காரணம் என்னவாயிருக்கும்
என்று நான் கற்பனை செய்ததன் விளைவே கீழுள்ள
என் பாடலின் முதல் ஐந்து பதங்கள்! அடுத்த மூன்று
பதங்களும் அந்த சம்ஸ்க்ருதகவிதையைத்
தழுவி நான் எழுதிய வரிகள்!


தாயின் ஊடல் தீர்த்த சேய் !

(subbusir sings:
  http://www.youtube.com/watch?v=IKnKaCAcO4A&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1&feature=plcp)


கதம்பவனந்தனிலே ஒருநாள் ..கண்ணன்
மயில்முகுடம் நடுங்கப்படுவேகமாய்ச் சென்றான்!
வனமாலி வனத்திலென்ன கண்டான்?-அவன்
தலைதெறிக்க மூச்சிரைக்க எதைப்பிடிக்கச்சென்றான்? (1)

கண்டான் கருநாகம் கிரிதாரி !.."காளிங்கன்

மீண்டும் உயிர்த்தெழுந்து விட்டானோ?"என்றே
ஐயுற்று அதன்தலையிலேறி --தை தை
தை என்று குதித்தாட ஓடியோடிச் சென்றான் ! (2)

உண்மையறிந்தான் அண்மை சென்று..தான்
கண்டது தங்கையின் கருங்கூந்தல் என்று!
நடந்ததெண்ணி நகைத்தான் அண்ணல்...அன்புத்
தங்கையும் பூத்தனளோர் புன்னகை மின்னல்! (3)

அன்னையின் மின்முறுவல் கண்டு ..அவள்
பொன்மேனியில் தவழும் வெண்முத்துமாலை,
நாணிச்சிவந்து நிறம் மாற .."இந்த
மாணிக்கமாலை ஏது?"என மயங்கினன் மகிழ்நன் ! (4)

"நானிட்ட முத்தாரம் நீக்கி ..இந்த
மாணிக்கமாலை அணிவித்ததார்?"என்றே
ஐயுற்றாற்போல் ஐயன் வினவ ..கேட்ட
தையலோ ஊடலுற்று நின்றாள் முகந்திருப்பி ! (5)

ஊடல் தீர்க்க உளங்கொண்டே.-உமையின்
பாதந்தனில் பதித்தான் பரமன் திருச்சென்னி;
தலைதங்கும் நிலவின் ஒளிக்கதிரால்-தலைவி
திருவடித்தாமரையில் வெண்ணொளி மின்ன! (6)

வெண்கதிர் செங்கழலில் ஒளிர --கண்ட
ஐங்கரன் தாமரைநூலென மயங்கி
நீட்டி நின்றான் துதிக்கை தன்னை ..நூலை
எட்டிப் பிடித்திழுத்து உண்டு களித்திடவே ! (7)

சேய் செய்யும் சேட்டைதனைக்கண்டு ..தெய்வத்
தாய் தந்தை இருவரும் குஞ்சரனைத் தழுவ ,
குழந்தை மெல்ல நழுவிச் செல்ல ..பதியின்
தழுவலில் தணிந்தனள் தையலவள் ஊடல்! (8)

(கணேசக்கடவுளின் ஷோடசநாமத்
   தமிழ்த்துதி கேட்க:
http://myprayers-lalitha.blogspot.in/2011/08/blog-post_31.html  )

1 comment:

  1. ச்சோ ச்வீட் அம்மா! சுப்பு தாத்தா பாடியதையும் கேட்டு மகிழ்ந்தேன். நன்றி தாத்தா!

    ReplyDelete