Monday, January 21, 2013

என் தாயே !



என் தாயே !

குறைமதிதனைச்சிரத்தில்
தரிப்பவளே !என் தாயே !
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !

சொன்னீராம் பன்னீரால் பண்ணவந்தேன் அபிஷேகம் ;
கண்ணீரில்,செந்நீரில் ,சொன்னீரும் கரையுமுன்னே
அபிராமி !காட்சி தருவாய் --என் சொல்
அபிஷேகம் ஏற்று அருள்வாய் .
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !

இணையேதுமில்லா உன் இணையடிதனை நனைக்க
மனப்பசுவின் பா(ல்)தன்னை ஜனனி!நான் கறந்துவந்தேன் ;
கனிவாய்ப் பூங்கழல் காட்டுவாய்-கற்பகமே!
பணிவாய் நான் பா(ல்)ஊற்றுவேன்.
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !

இனிய தேன் பா சிந்தி இசைமணம் பரப்பும் என்
இதயகுமுதந்தனையுன் பதமலரில் கிடத்திவிட்டேன் ;
வாடுமுன்னே சூடிக்கொள்வாய் --உன்னைக்
கூடும் வகை கூறிச்செல்வாய் .
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !



No comments:

Post a Comment