Tuesday, January 29, 2013




பவானி அஷ்டகம்
(ஆதி சங்கரர் எழுதிய பவாநியாஷ்டகத்தின் தழுவல் )

(1)ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்தா
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி 


பெற்றோரோ,உற்றாரோ,மணங்கொண்ட துணையோ,
நான் பெற்ற மக்களோ,பணமோ ,என் அறிவோ,
என்னைக் கடைதேற்றவல்ல துணையல்ல;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(2)பவாப்தாவபாரே மஹா துக்க பீரு
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த:
குஸம்ஸார பாஸ ப்ரபத்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி


தத்தளிக்கின்றேன் நான் பிறவிக்கடலில் ;
தாழ்வடைந்தேன் காமம், பேராசையாலே;
சிக்கித்தவிக்கின்றேன் சம்சார வலையில்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(3)ந ஜானாமி தானம் ந ச த்யானயோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம்
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

ஈயுமின்பம்,த்யானநிலையொன்றுமறியேன்;
தந்திரமோ,தோத்திர மந்திரமோ அறியேன்;
பூஜைவிதி,துறவுநிலை ஏதுமறியேன் ;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(4)ந ஜானாமி புண்யம் ந ஜானாமி தீர்த்தம்
ந ஜானாமி முக்திம் லயம் வா கதாசித்
ந ஜானாமி பக்திம் வ்ருதம் வாபி மாத
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் தவமேகா பவானி!


புண்ணியமோ ,புனிதத்தலமோ நான் அறியேன்;
உன்னோடுளம் ஒன்றும்வழி,முக்திநெறி அறியேன்;
பக்திசெய்தலும் ,விரதவிதி ஏதும் அறியேன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(5)குகர்மீ குசங்கீ குபுத்தி குதாச:
குலாசாரஹீன: கதாசாரலீன:
குத்ருஷ்டி: குவாக்ய ப்ரபந்த: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


தீயன என் எண்ணங்கள்,செயல்,சேர்க்கை யாவும்;
குல நெறி காத்திலேன்;நடத்தையிலும் கடையன்;
நோக்கு,வாக்கனைத்திலும் நானென்றும் தீயன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !


(6)ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் சுரேஷம்
தினேஷம் நிசிதேஸ்வரம் வா கதாசித்
ந ஜானாமி சான்யத் சதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!


ஆக்கும் அயன்,காக்கும் அரி,அரன்,அமரர்தலைவன்,
இரவி,சந்திரன் எந்த தெய்வமும் நான் அறியேன்;
உன் பதங்களன்றி அரண் வேறு அறியேன்;
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(7)விவாதே விஷாதே ப்ரமாதே ப்ரவாசே
ஜலே ச அனலே பர்வதே சத்ரு மத்யே
அரண்யே சரண்யே சதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

சர்ச்சையிலும்,துக்கம்,மதிமயக்கந்தனிலும்,
நெடும்பயணம்,நீர்,நெருப்பு,மலை,காடு எதிலும்,
சூழ்பகையிலும் என்றும் எனக்கபயம் நீயே!
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

(8)அநாதோ தரித்ரோ ஜரா ரோக யுக்தோ
மஹா க்ஷீண தீன: சதா ஜாட்யவக்த்ர:
விபத்தௌ ப்ரவிஷ்ட: ப்ரணஷ்ட: சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி!

நாதியற்ற ஏழை,மூப்பால் நோயாளியானேன்;
வலுவற்று சோர்ந்தேன்;இழி நிலையடைந்தேன்;
வினை சூழ்ந்த எனை என்றுங்காக்குந் துணை நீ!
கதிநீயே !கதிநீயே !தாயே !பவானி !

Monday, January 21, 2013

என் தாயே !



என் தாயே !

குறைமதிதனைச்சிரத்தில்
தரிப்பவளே !என் தாயே !
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !

சொன்னீராம் பன்னீரால் பண்ணவந்தேன் அபிஷேகம் ;
கண்ணீரில்,செந்நீரில் ,சொன்னீரும் கரையுமுன்னே
அபிராமி !காட்சி தருவாய் --என் சொல்
அபிஷேகம் ஏற்று அருள்வாய் .
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !

இணையேதுமில்லா உன் இணையடிதனை நனைக்க
மனப்பசுவின் பா(ல்)தன்னை ஜனனி!நான் கறந்துவந்தேன் ;
கனிவாய்ப் பூங்கழல் காட்டுவாய்-கற்பகமே!
பணிவாய் நான் பா(ல்)ஊற்றுவேன்.
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !

இனிய தேன் பா சிந்தி இசைமணம் பரப்பும் என்
இதயகுமுதந்தனையுன் பதமலரில் கிடத்திவிட்டேன் ;
வாடுமுன்னே சூடிக்கொள்வாய் --உன்னைக்
கூடும் வகை கூறிச்செல்வாய் .
திரைநீக்கி என்முன் வருவாய் !
குறைதீர்த்துக்கருணை புரிவாய் !



Thursday, January 17, 2013

வர(ம்)வேண்டும்!



   வர(ம்)வேண்டும்!

(subbusir sings:
http://www.youtube.com/watch?v=-D-W-uT-mvw&list=UUw4TCj3_an8TqdGY6TNaixA&index=1)
ஜனித்ததொரு பாடல் மனத்தினிலே -ஜனனி!
        உனை உள்ளந்தனிலே நினைக்கையிலே!
இனிக்குது ஈஸ்வரி!நாவெல்லாம் -உந்தன்
       மகிமையைப் பாட்டாய் இசைக்கையிலே !

மணக்குது இதயம் ,அதிலுந்தன் தூய
         மலர்ப்பதம் அருள்மடல் விரித்ததனால் ;
பனிக்குது கண்கள் பரவசத்தால் -அதற்குன்
         புனிதத் திருக்காட்சி கிடைத்ததனால் !

ஜனித்ததொரு பாடல் மனத்தினிலே -ஜனனி!
         உனை உள்ளந்தனிலே நினைக்கையிலே!
இனிக்குது ஈஸ்வரி!நாவெல்லாம் -உந்தன்
         மகிமையைப் பாட்டாய் இசைக்கையிலே !

எனது மனம் கதம்பவனமாகி -அதில் நீ
              வளையவந்து விளையாடும் வரமருள்வாய்  !
தினமொரு புதுப்பூந்தமிழ்த்துதியாலுனை
             அலங்கரித்துப் பார்க்கும் திறமருள்வாய்  !

ஜனித்ததொரு பாடல் மனத்தினிலே -ஜனனி!
         உனை உள்ளந்தனிலே நினைக்கையிலே!
இனிக்குது ஈஸ்வரி!நாவெல்லாம் -உந்தன்
         மகிமையைப் பாட்டாய் இசைக்கையிலே !

Monday, January 14, 2013

வென்றாள்,கொண்டாள்,வந்தாள்,பொழிந்தாள்!



னைருக்கும் இனிபொங்கல் வாழ்த்துகள்! 

சுப்பு தாத்தாடானா ராத்தில் அருமையாகப் பாடித் தந்து ங்கே. மிக்நன்றி தாத்தா!
 

கனவி லொரு காட்சி கண்டேனே என்றன்
மனதி லொரு மாற்றம் கண்டேனே
கவிதை யொன்று ஊறக் கண்டேனே அதுவும்
கரும்பெனவே இனிக்கக் கண்டேனே

நீல வண்ணம் வானில் வந்ததே, வந்து
நெஞ்சமெல்லாம் நிறைத்து நின்றதே
நூலிடையாள் வடிவம் கொண்டதே, கொண்டு
வேல் விழியால் என்னை வென்றதே!

செக்கர் வானம் சிவந்து வந்ததே, வந்து
செம்பருத்தி யாகச் சிரித்ததே
தேவியவள் வடிவம் கொண்டதே, என்னைத்
தென்றலாகித் தழுவிக் கொண்டதே!

பச்சை வண்ணம் பூசி வந்ததே, வந்து
பசுங் கிளியாய்த் தோளில் அமர்ந்ததே
பைங்கிளியாள் வடிவம் கொண்டதே, கொண்டு
பக்கத் துணையாகி வந்ததே!

வண்ணம் பல வாகி வந்ததே, வந்து
எண்ணமெல்லாம் நிறைந்து நின்றதே
மங்கையவள் வடிவம் கொண்டதே, கொண்டு
கங்கையென அருளைப் பொழிந்ததே!


--கவிநயா 


 

Friday, January 11, 2013

நியாயமா?



நியாயமா?

அரன்தன் இடப்பாகம்
சிறந்தவளே!சிவையே!
திறந்தா !உனைப்பாடவே-தாயே!
வரந்தா உனைக்கூடவே.

பரந்துவிரிந்து எங்கும்
நிறைந்த நிரந்தரி!
பரந்தாமன் ப்ரியசோதரி!-சங்கரி!
சரண் தந்தெனை ஆதரி!

பிரிந்த தாயைத்தேடித்
திரிந்து அழும் சேயைப்
பரிந்தணைக்க வா அம்மா.-இன்னும்
மறைந்திருத்தல் நியாயமா?

Monday, January 7, 2013

எக்காலம்?






சுப்பு தாத்தா தபலாவுடன் பாடியிருப்பது இங்கே. அவர் சேர்த்திருக்கும் அழகான ஒளிப்படங்களையும் கண்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!


உன்னை யன்றி ஒரு உபாயம் இல்லை
உணர்வது எக்காலம்?

அன்னை உனையன்றி அபயம் இல்லை
அறிவது எக்காலம்?

பெண்ணே உனையன்றிப் புகலும் இல்லை
புரிவது எக்காலம்?

கண்ணில் வழிகின்ற கண்ணீர் மழையும்
காய்வது எக்காலம்?

நினைவில் நீ மட்டும் நின்று உலவுகின்ற
காலம் எக்காலம்?

கால நேரமின்றி உன்றன் நினைவினிலே
களிப்பது எக்காலம்?

கனவு நனவாகி, நினைவு கனவாகிக்
கலப்பது எக்காலம்?

நீயே சதமென்று உன்றன் பதம் வீழ்ந்து
கிடப்பது எக்காலம்?


--கவிநயா