Monday, August 17, 2015

இன்பம் போதும் போதுமே!

 
துன்பம் மிகுந்து வருகையிலே
            உள்ளம் உன்னை நாடுமே
இன்பம் ஒன்று வந்து விட்டால்
              தன்னில் தானே ஆழுமே
இன்ப துன்பம் எது வந்தாலும்
             உன் நினைவே வேண்டுமே
உன்னை எண்ணும் இன்பம்
            அந்த இன்பம் ஒன்று போதுமே!

முழு மதி போல் எழில் மிகுந்த
            முகம் படைத்த அன்னையே
மழு பிடித்த மன்னனுக்கு
            பாதி மேனி தந்தையே
பொழி கருணை விழியிரண்டால்
            புவியைக் காக்கும் அன்னையே
கொழி தமிழால் உன்னைப் பாடும்
            இன்பம் போதும் போதுமே!

துவண்டு விழும் கொடியினுக்குக்
            கொழு கொம்பான அன்னையே
மிரண்டு அழும் பிள்ளைகளை
            அரவணைக்க வந்தையே
திரளும் கொள்ளை அன்பினாலே
            துயரம் தீர்க்கும் விந்தையே
வளரும் அன்பால் உன்னைப் பாடும்
           இன்பம் போதும் போதுமே!

கன்றின் குரல் கேட்டு வரும்
            பசுவைப் போல வரணுமே
குன்றிலிட்ட விளக்கு போல
            மனதில் ஒளிர வேணுமே
மன்றின் மீது நின்று ஆடும்
            ஈசனுடன் உன்னையே
என்றும் நல்ல தமிழில் பாடும்
           இன்பம் போதும்  போதுமே!


--கவிநயா

3 comments: