Monday, October 12, 2015

துர்க்கை என்னும் நாமம்

அனைவருக்கும் இனிய நவராத்திரி வாழ்த்துகள்!



பிஹாக் ராகத்தில் சுப்பு தாத்தா பக்தியுடன் பாடித் தந்தது... மிக்க நன்றி தாத்தா! தாத்தா இட்டிருக்கும் படம் துளசி அம்மாவுடையதாம்.



துர்க்கை என்னும் உந்தன் நாமம் செப்புகின்ற போதிலே
துக்கம் யாவும் அச்சம் கொண்டு தூர விலகி ஓடுமே!
பட்சம் கொண்டு நீயும் எந்தன் பக்கம் உள்ள போதிலே
வெட்கம் கொண்டு வினைகள் யாவும் விட்டு விட்டு ஓடுமே!

சூல மேந்தும் அன்னை உன்னை நாடுகின்ற போதிலே
சூழுகின்ற துன்பம் யாவும் சிதறிப் பதறி ஓடுமே!
சீலம் கொண்டு வாழ்வில் உன்னைச் சிந்திக்கின்ற போதிலே
ஓலமிட்டு மும் மலங்கள் எம்மை விட்டு ஓடுமே!

சீறுகின்ற சிம்மம் மீதில் ஏறுகின்ற அன்னையே!
கோருகின்ற யாவும் நீயும் கொடுத்திடுவாய் உண்மையே!
மாறுகின்ற காலந் தன்னில் மாறிடாத அன்னையே!
கூறுகின்ற உந்தன் நாமம் கூட வரும் உண்மையே!

நாடு விட்டுக் காடு ஏகும் காலம் வரும் முன்னரே
ஈடு அற்ற உன்னைப் பற்றிக் கொள்ள வேண்டும் அன்னையே!
வீறு கொண்ட வேங்கை போல வேகங் கொண்ட அன்னையே!
பேறு பெற்ற பிள்ளையானேன் உன்னைப் பாட உண்மையே!


--கவிநயா


3 comments:

  1. இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அம்மன் அருள் காக்கட்டும்

    ReplyDelete
  2. இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள். அம்மன் அருள் காக்கட்டும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கைலாஷி.

      Delete