Monday, April 18, 2016

சொக்கத் தங்க மீனாள்!


மாநகராம் மதுரையினை
ஆள வந்த மீனாட்சி!
மக்கள் மனம் எங்கும் இன்று
அவளுடைய அரசாட்சி!

கோல மயில் போல எழில்
கொஞ்சும் அவள் திருக்காட்சி!
கொண்டவனின் துணையுடனே
புரிந்திடுவாள் அருளாட்சி!

கொண்டை முடி அலங்கரித்து
கோதையவள் வீற்றிருப்பாள்!
கொஞ்சும் கிளி கையில் வைத்து
கனிவுடனே காத்திருப்பாள்!

காண வரும் பக்தருக்கு
கண்டவுடன் அருள் புரிவாள்!
கண்டு கொண்ட அடியவரின்
இதயத்திலே குடியிருப்பாள்!

கண்விழியால் காப்பவளாம்
கனிமொழியாள் மீனாளாம்!
விண்ணவரெல்லாம் போற்றும்
கண்மணியாம் மீனாளாம்!

வளைக்கரத்தில் வாளெடுத்து
போர் தொடுத்த மீனாளாம்!
சொக்கனிடம் சொக்கி நின்ற
சொக்கத் தங்க மீனாளாம்!



--கவிநயா 


No comments:

Post a Comment