கீதாம்மாவின் இனிய குரலில்... இராகமாலிகையில்...மிக்க நன்றி கீதாம்மா!
அந்தி மாலை நேரம்
அந்த வண்ணம் அவள் தேகம்
அலைந் தலைந்து வானளக்கும்
கூந்தல் கரு மேகம்
ஜொலி ஜொலிக்கும்
கண்ணிரண்டும்
சூரிய சந்திரர்கள்
அவள் முக மதியின்
ஒளியினிலே
மலர்ந்திடும் செவ்விதழ்கள்
வளைத்து வைத்த வில்லைப்
போல
குனிந்திட்ட புருவங்கள்
அவள் வதனமதன் நடுவினிலே
நிமிர்ந்திட்ட சிறு
நாசி
ஆதி சிவன் அழகு பார்க்க
கண்ணாடிக் கன்னங்கள்
அவன் நடனத்துக்கு
இசைந்தாடி
அசைந்திடும் காதணிகள்
சங்கு போன்ற கழுத்தினிலே
அட்டிகை அணி செய்யும்
மார்பினிலே மணியாரம்
மகிழ்வுடன் தவழ்ந்திருக்கும்
கைவளைகள் கலகலவென
கதைகள் பேசிச் சிரிக்கும்
எழில் மோதிரங்கள்
மென் விரல்கள்தமை
அணைத்தபடி இருக்கும்
பாசமுடன் அங்குசமும்
பணிவுடன் அமர்ந்திருக்கும்
அருள் சுரக்கும்
கரமிரண்டும்
அபயம் தர அழைக்கும்
இல்லை என்று சொல்லும்படி
இருக்கும் அவள் இடையில்
தகதகக்கும் ஒட்டியாணம்
இருப்பை நினைவுறுத்தும்
பாதங்களை அணைத்தபடி
கொலுசுகள் கலகலக்கும்
மெட்டி ஒலி மென்மையாக
மன்னவனை இழுக்கும்
அன்னையவள் எழிலைச்
சொல்லும்
புலவர் இங்கு ஏது?
அதைச் சொல்லுகின்ற
திறனைக் கொண்ட
மொழியும் கிடையாது!
--கவிநயா
No comments:
Post a Comment