அம்மா என்ற சொல்லைச் சொல்லும்போதே எவ்வளவு சுகமாக இருக்கிறது. அந்த ஒரு சொல்லே அளவில்லாத அன்பையும், குழைவையும், நெகிழ்வையும் தந்து விடுகிறது. அதனாலேயே அவளை, உலகுக்கெல்லாம் அன்னையை, ஆதிபராசக்தியை, அகிலாண்ட ஈஸ்வரியை, அழைக்கும்போது, அன்னை என்றோ, அம்பாள் என்றோ, இன்னும் வேறு விதமாகவோ சொல்லாமல், அம்மா என்று அழைக்கவே எனக்கு மிகவும் பிடிக்கும். அம்மா என்றவுடன் இதயத்துக்குள் வந்து அமர்ந்து கொண்டு விடுகிறாள் என்று தோன்றும்.
எனக்கு அவளைப் பற்றி ஒன்றும் தெரியாது. அவள் பெருமைகளையும் அருமைகளையும் அறியேன். ஆனால் அவள் அன்பே உருவானவள் என்பதை மட்டும் ஆணித்தரமாய் அறிவேன். இல்லையென்றால் என்னைப் போன்ற சிறியவளுக்கு அவளைப் பற்றி ஒரு வரியேனும் எண்ணும், எழுதும், பேசும், வாய்ப்பு கிடைத்திருக்குமா? அவளுக்கே அவளுக்கான இந்தப் பூவில் முதல் முதலாக மூன்றாம் ஆடிவெள்ளிக்கு எழுதும் வாய்ப்புக்கு மிக மகிழ்ந்து, அவள் திருவடிகள் பணிந்து தொடங்குகிறேன்.
மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் எனக்கு மிகவும் பிடித்தது. சிறுவயது முதலே அதன் வடிவத்தால், இசையால் கவரப்பட்டு, பொருள் புரியாமலே பாடி வந்திருக்கிறேன். சமீபத்தில் அதன் பொருளை புரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கிய போது அதனைத் தமிழில் எழுதும் எண்ணம் வந்தது. அப்படி முயல்கையில் சமஸ்கிருதத்தில் ஒரு சொல்லில் சொல்லும் விஷயத்துக்கு தமிழில் நான்கு சொற்களேனும் வேண்டியிருப்பதாய் உணர்ந்தேன். அம்மா மன்னிப்பாள் என்ற நம்பிக்கையில், அதனை மொழி பெயர்ப்பு என்று அழைக்காமல் தழுவல் என்றே அழைக்கிறேன். குமரன் அளித்த ஊக்கத்தின் பேரில் அதனை இங்கே பதிக்கிறேன்.
அன்னையின் அன்புக்கு ஈடு இணை வேறெதுவும் இல்லை. எதிர்பார்ப்பில்லாத தூய அன்பைத் தரக் கூடியவர்கள் தாய்மார்கள் மட்டுமே (தந்தைமார்கள் அடிக்க வராதீங்க!). உலகாதய அம்மாக்களே இப்படியென்றால், ஜகன்மாதாவைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? அப்பேற்பட்ட அன்னைக்கும் பிள்ளையிடம் கோபம் வரலாம். வரும். எப்போது? பிள்ளை தவறு செய்யும்போது. அதுவும் அன்பினாலேயே ஏற்படுகிறது என்பதை நாம் உணர வேண்டும். அதனால்தான் ஜகன்மாதாவும் நம்முள் இருக்கும் மஹிஷனை அழித்து அருள்பாலிக்கவே மஹிஷாசுரமர்த்தினியாய் ஜொலிக்கிறாள்! அவளுடைய, நிகரில்லாத எழிலையும், ஒப்பில்லாத வீரத்தையும், கரையில்லாத கருணையையும், இந்தப் பாடல் என்னமாய் போற்றுகிறது!
வாருங்கள் – அயிகிரி நந்தினியின் தமிழ்த் தழுவலைப் பார்க்கும் முன், அதனுடைய ஒலி வடிவத்தைக் கேட்டு மகிழுங்கள்.
காடுகள் அடர்ந்த தருத் தரங்களிலே தெய்வீகப் பெண்டிர் சூழ்ந்திருக்க அந்தவண்ண அழகு மலைப் பிரதேசத்தில் மகிழ்வுடன் வசிக்கும் மலைமகளே கோகிலமும் மிக நாணும்படி தன் புல்லாங் குழலினை இசைப்பவளே மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (14)
இடையினில் ஒளிரும் மஞ்சள் பட்டாடையால் நிலவொளியையும் தோற்கடிப்பவளே பதம் பணிவோரின் ஆபரணங்களால் நகங்களும் ஜொலிக்க திகழ்பவளே தங்கமலை உச்சியில் விளங்கும்கலசம்போல் அழகிய தனங்களை உடையவளே மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (15)
கதிரவனையும் விஞ்சும் வலிமை கொண்ட பலஆயிரம் கரங்களை உடையவளே தாரகாசுரனை எளிதினில் வென்ற வேலவனின் அன்னை ஆனவளே சுரதா சமாதி இருவருக்கும் மன அமைதியைத் தந்து காத்தவளே மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (16)
உன் மலரடிகளைத் தினமும் போற்றி அன்புடன் துதித்து வணங்கையிலே தாமரை மலரில் வாசம் செய்யும் உன் திருவருள் எனக்கின்றிப் போய்விடுமோ? உன் திருவடிகளே சதமென இருக்கையில் செல்வங்கள்ஏதும் என்னை விலகிடுமோ? மஹிஷாசுர வதம் செய்தவளே இமவான் மகளே உந்தன் தாள் பணிந்தோம் (17)
K வீரமணி - LR ஈஸ்வரி.....நாடி நரம்பு எல்லாம் புடைக்க...கண்கள் கசிய...ரோட்டோரம் உள்ள எளிமையான மனிதனையும் பக்தியால் திகைக்க வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர்கள்!
தமிழகம் முழுவதும் உள்ள அம்மனின் பேர்களையும், அவள் இருக்கும் ஊர்களின் பேர்களையும், ஒவ்வொன்றாய் பட்டியல் இடும் பாட்டு - நீங்கள் எல்லோரும் கேட்டு மயங்கி இருப்பீர்கள்!
அதை இன்று, இந்தப் பதிவில், எழுத்து/ஒலி வடிவிலும் கேட்டு இன்புறுங்கள்!
இன்று ஆடி வெள்ளி, இரண்டாம் வெள்ளி!
கிராமம்-நகரம் என்று பாரபட்சம் இல்லாது எங்கும் நிறைந்திருக்கும் ஆத்தா மகமாயி...ஏழை எளியோரின் தெய்வம்!
பார்ப்பதற்கு மூடத்தனம் என்று சில பேருக்குத் தோன்றும்! ஆனால் பொங்கலும், கூழும், குலவையும், வேப்பிலையும், தீமிதியும்... தமிழகத்தின் ஒட்டுமொத்த எளிய மக்களின் வாழ்வைக் காட்டும் கண்ணாடி. அவர்கள் வாழ்விலும், குடும்பங்களிலும் உள்ள ஒரே பற்றுதல்!
கண்ணன் கீதையில் சொன்னது - ஒரு சிறு இலையாவது முழு மனத்துடன் அர்ப்பணிப்பவரைக் காத்து ரட்சிப்பேன் என்பது!
அவன் தங்கை மாயி மகமாயிக்கும் அஃதே இலை - அதுவே வேப்பிலை!
இலை கூட உனக்குக் கிடைக்க வில்லையா?
சரி...தண்ணீர் கிடைக்குமே!
தண்ணீர் கிடைக்க வில்லை என்று....யாரும், எங்கும், எப்போதும் சொல்லவே முடியாதே!
கண்ணன் உறுதியாகச் சொல்கிறான்! உன் கண்களில் ரெண்டு சொட்டாவது இருக்குமே தண்ணீர்! அதை அர்ப்பணி! இதோ அர்ப்பணிக்கிறார் K. வீரமணி!
பாடலைக் கேட்டு பரவசமாக வேண்டுமா? இதோ சுட்டி! (Currently playing என்று சொன்னாலும்..அந்த "நெறஞ்சு மனசு" சுட்டியைச் சுட்டுங்கள்...It opens the player with an advt first and then the song!) நெறஞ்சு மனசு உனக்குத் தாண்டி மகமாயி - உன்னை நினைச்சுப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி! மறைகளும் இதைச் சொல்லுமடி மகமாயி கண்ணில் தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி!நமை ஆளும் நாயகியாம் நல் மகமாயி - கண் இமை போல காத்திடுவாள் மகமாயி! உமையவள் அவளே இமவான் மகளே சமயத்தில் வருபவள் அவளே - எங்கள் சமயபுரத்தாள் அவளே! இசைக் கலையாவும் தந்தருள வேண்டும் என் குலதெய்வமே மகமாயி! தஞ்சமென்று உன்னைச் சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி! முந்தை வினைகளைக் களைந்தெறிவாள் தாய் மயிலையிலே, முண்டகக்கன்னி - கோலவிழி பத்திரகாளி! வேண்டும் வரம் தருவாள் என் தாய்....வேற்காட்டுக் கருமாரி! ஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் பாத்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும் காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி நார்த்தமலை வாழும் எங்கள் நாயகியாம் திரிசூலி நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா நிம்மதியைத் தந்திடுவா வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை தீர்த்திடுவா மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாச் சிரிச்சு நிப்பா தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா மல்லிகைச் சரம் தொடுத்து மாலை இட்டோம் - அரிசி மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் இட்டோம் - அம்மா துள்ளியே எந்தன் முன்னே வாரும் அம்மா - அம்மா தூயவளே எந்தன் தாயீ மாரியம்மா!
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப் பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம் பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் - உனக்குப் பாவாடைச் சேலைகளும் கொண்டு வந்தோம்
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் - மற்ற அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா?கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா! காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
இந்தச் சின்னவனின் குரல்கேட்டு முகம் திருப்பு - அம்மா சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு! - அம்மா கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும் - அம்மா காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்! பண்ணமைக்கும் நாவுனையே பாட வேண்டும் - அம்மா எல்லோரும் பக்தியுடன் கையெடுத்து உன்னையே கும்பிட வேண்டும்! எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்! இருப்பதெல்லாம் உன்னுடையது ஆக வேண்டும்!
மண்ணளக்கும் தாயே.... மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா சிங்கப்பூரிலே வீரமா காளியம்மா
மலேசியா-ஜோஹர் பாரு
சிங்கப்பூர்
இவையனைத்தும் ஒன்று சேர்ந்த சக்தி சொரூபமே - அம்மா திருவேற்காட்டில் வாழ்..... கனவிலும் நினைவிலும் இவன் தொழும் என் சத்திய தெய்வமே....கருமாரியம்மா.....கருமாரியம்மா.....இந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா அம்மா அம்மா அம்மா....அம்மா அம்மா... கற்பூர நாயகியே கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா..... .. .. ..என்று வேறு மாதிரி இப்போது தொடரும்! பெரீய்ய்ய்ய்ய்ய பாடல்!
அன்புத்தோழி, அப்படித் தொடரும் பாட்டை முந்தைய பதிவுகளில் போட்டாங்க. இதோ சுட்டிகள்! 123
இன்னமும் தொடரும்...
திருவேற்காட்டில் அன்னைக்கு மந்திரம் முழங்க, குலவை ஒலிக்க, பாடல் தொடர்கிறது...
முடிந்தால் அதை அடுத்த வெள்ளிக்கிழமை இடுகிறேன்! மண்ணளக்கும் தாயே பெரிய பாளையத்தம்மா! பாதாள பொன்னியம்மா! - வாழைப்பந்தல் பச்சையம்மா! நின் தாள் சரண்!
பங்குனி உத்திரத் திருநாளாகிய இன்று மயிலை கபாலீச்சுரத்தில் அன்னை கற்பகவல்லிக்கும் ஐயன் கபாலீஸ்வரருக்கும் திருமணத் திருவிழா நடைபெறுகிறது. அந்த திவ்ய தம்பதிகளின் திருமண விழாவினை முன்னிட்டு பிரியா சகோதரிகள் சிந்துபைரவி இராகத்தில் பாடிய இந்த இனிய பாடலை இங்கே தருகிறேன்.
திருமண விழாவின் போது அன்னையிடம் வேண்ட வேண்டியவைகளை எல்லாம் இந்தப் பாடலில் வேண்டிக் கொள்ளலாம்.
பெற்றவளும் நீ பெருமை சேர்ப்பவளும் நீ அதி அற்புதம் விளைக்கும் அன்னையே இரு பொற்பதங்கள் பணிந்தோம் பரவசமாய் தாயே கருணையே கற்பகமே என்றும் எங்களைக் காக்க வேணுமே
கருணை தெய்வமே கற்பகமே காண வேண்டும் உந்தன் பொற்பதமே (என் கருணை)
உறுதுணையாக எம் உள்ளத்தில் அமர்ந்தாய் உனையன்றி வேறே யாரோ எம் தாய் (கருணை)
ஆனந்த வாழ்வு அளித்திடல் வேண்டும் அன்னையே எம் மேல் இரங்கிடல் வேண்டும் நாளும் உன்னை தொழுதிடல் வேண்டும் நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)