Monday, February 23, 2009

புன்னகைப்பாள் புவனேஸ்வரி!



அழகு முகப் புன்னகையை
ஆனந்த மாய்ப் பார்த்திருப்பேன்
அம்மாஎன் எழில் ஈஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

இதழ்க் கடையின் புன்னகையை
இன்ப முடன் பார்த்திருப்பேன்
உல காளும் ஜகதீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

கனிவு மிகு புன்னகையை
கால மெல்லாம் பார்த்திருப்பேன்
கருணை மிகு காளீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

கண் மலரும் புன்னகையை
களிப் புடனே பார்த்திருப்பேன்
விண் ணுறையும் வைத்தீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

பொன் னொளிரும் புன்னகையை
பரவச மாய்ப் பார்த்திருப்பேன்
புவி யாளும் பரமேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

மனங் கவரும் புன்னகையை
எனை மறந்து பார்த்திருப்பேன்
மா தரசி மாதேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

தினம் உந்தன் புன்னகையை
திகட் டாமல் பார்த்திருப்பேன்
திகம் பரனின் பாகேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

தே சொளிரும் புன்னகையை
தேடி வந்து பார்த்திருப்பேன்
மாச கற்றும் மல்லீஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

வீசு தென்றல் புன்னகையை
வில காமல் பார்த்திருப்பேன்
வினை தீர்க்கும் வாகேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

சுக மளிக்கும் புன்னகையை
சொக்கிச் சொக்கிப் பார்த்திருப்பேன்
சுந்தரியே ஸ்வர்ணேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

சக்தி உந்தன் புன்னகையை
பக்தி யுடன் பார்த்திருப்பேன்
முக்தி தரும் சர்வேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!

சாந்தி தரும் புன்னைகையின்
காந்தி யினைப் பார்த்திருப்பேன்
எழி லரசி ராஜேஸ்வரி - அம்மா
எனை யாளும் புவனேஸ்வரி!!

--கவிநயா

21 comments:

  1. புவனமுழுதாழும் புவனேஸ்வரிக்கு
    புதுக்கோட்டையில் கோவில் இருக்கிறது.

    (எங்க ஊர் அதாங்க)

    அருமையான பாடலுக்கு நன்றி கவிநயா.

    ReplyDelete
  2. அன்னையின் புன்னகையை அருமையாகச் சொன்னீர்களக்கா.

    ReplyDelete
  3. வாங்க புதுகைத் தென்றல்.

    //(எங்க ஊர் அதாங்க)//

    ரொம்ப பக்கத்துல வந்துட்டீங்க :) புதுக்கோட்டையில சொந்தங்கள் அதிகம். முதல் சொந்தம் அம்மாதான் - அதான் புவனேஸ்வரி :) (படத்தைப் பார்த்தீங்களா?)
    என் பெற்றோருடைய ஊரும் பக்கத்துலதான். அதனால அடிக்கடி புதுக்கோட்டை பயணம் உண்டு.

    //அருமையான பாடலுக்கு நன்றி கவிநயா.//

    ரசனைக்கு மிக்க நன்றி, தென்றல் :)

    ReplyDelete
  4. //அன்னையின் புன்னகையை அருமையாகச் சொன்னீர்களக்கா.//

    நல்லது மௌலி. இன்னும் சொல்ல ஆசைதான். வார்த்தைகள் என்னமோ வந்துகிட்டே இருந்தது. ஆனா ரொம்ப நீளமாயிடும்னுதான் நிறுத்திட்டேன். மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் :)

    ReplyDelete
  5. //கண் மலரும் புன்னகையை
    களிப் புடனே பார்த்திருப்பேன்//

    ஓ...அன்னையின் இதழ் மட்டுமா புன்னகைக்கும்?
    கண்ணும் கவினே புன்னகைக்கும் அல்லவா அக்கா?

    ReplyDelete
  6. //ஓ...அன்னையின் இதழ் மட்டுமா புன்னகைக்கும்?
    கண்ணும் கவினே புன்னகைக்கும் அல்லவா அக்கா?//

    ஆம், உண்மைதான் கண்ணா. பார்த்துக்கிட்டே இருக்கலாம். வருகைக்கு மிக்க நன்றி கண்ணா :)

    ReplyDelete
  7. அப்பன் புன்னகையால் முப்புரம் எரிந்தது!
    அம்மா புன்னகையால் மூவுலகும் குளிர்ந்தது!

    பாட்டின் Theme ரொம்ப பிடிச்சிருக்கு-க்கா! புன்னகைப்பாள் புவனேஸ்வரி-ன்னு புன்னகையைத் தலைப்பாக்குங்க! படத்தைப் பார்த்தாலே ஒரு புன்னகை வருது! :)

    ReplyDelete
  8. //அப்பன் புன்னகையால் முப்புரம் எரிந்தது!
    அம்மா புன்னகையால் மூவுலகும் குளிர்ந்தது!//

    நல்லா சொன்னீங்க!

    //புன்னகைப்பாள் புவனேஸ்வரி-ன்னு புன்னகையைத் தலைப்பாக்குங்க!//

    உங்க ஆசையை நிறைவேத்தியாச்சு :)

    ReplyDelete
  9. //உங்க ஆசையை நிறைவேத்தியாச்சு :)//

    நன்றிக்கா!

    இப்போ
    புவனேஸ்வரி மட்டும் புன்னகைக்கவில்லை! அவ புள்ள, உங்க தம்பியும் புன்னகைக்கிறேன்! :)

    ReplyDelete
  10. //அவ புள்ள, உங்க தம்பியும் புன்னகைக்கிறேன்! :)//

    நானும்தான் :)

    ReplyDelete
  11. புவனேஸ்வரியை அழகான பாடலில் போற்றி இருக்கிறீர்கள் கவிநயா, பாராட்டுக்கள்.

    ReplyDelete
  12. //புவனேஸ்வரியை அழகான பாடலில் போற்றி இருக்கிறீர்கள் கவிநயா, பாராட்டுக்கள்.//

    வாங்க ஷையக்கா. மிக்க நன்றி :)

    ReplyDelete
  13. நேற்று காலையில் உங்களது கவிதையை ஒரு ராகமாலிகையில் பாட நினைத்துப்
    பாடத்துவங்கினேன். முதல் இரண்டு மூன்று சரணங்கள் பாடியிருப்பேன். சாதாரணமாக, முதலில் ஒரு ஒத்திகை போலத்தான் பாடுவேன். அது சரியாக இருந்தால் அல்லது இதற்கு மேல் சரியாக முடியாது என்று தோன்றாத வரை அதை நான் எடிட் செய்து கொண்டே இருப்பேன்.

    ஆனால், மாதேஸ்வரி எனும் வார்த்தை அடங்கிய சரணத்தை நான் பாடும்போது ஒரு அற்புதம் நடந்தது. அதை ஒரு கோயின்ஸிடன்ஸ் என்று சொல்லிவிடலாம். ஆனால்,
    புத்தி சொல்வதை மனம் எப்பொழுதும் ஒப்புவதில்லை அல்லவா ?

    நான் மாதேஸ்வரி என்று வார்த்தை பாடும்பொழுது, எனது மகளுக்கு ஸ்டாம்போர்டு
    பிரசவ மருத்துவகத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தி ஸெல் ஃபோனில் வருகிறது. அதை என்
    மனைவி என்னிடம் சொல்கிறாள். என் மனவியின் குரல் கேட்பதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். புவனேஸ்வரியை மாதே என்று அழைக்கும்பொழுது
    ஒரு மழலை பிறந்த செய்தி எனக்கு ஒரு மிராகில் ஆக த் தெரிந்தது.

    கேட்பவருக்கு இந்த ராகமாலிகை எப்படி இருக்கும் எனத் தெரியவில்லை. அடாணா,
    சஹானா, பூபாளம், மோஹனம் போன்ற ராகங்கள் பிரதானமாகத் தெரியவரும்.

    அன்னை அளிப்பது ஒரு புன்னகைதான் எனினும்
    அதை களிப்பதில் எத்துணை வகை உள்ளது !!

    அதுவும் அன்னையின் அற்புதமே !!

    பாட‌லைக் கேட்க‌ இங்கே
    http://menakasury.blogspot.com

    வாருங்க‌ள் அல்ல‌து
    யூ ட்யூபில் எனை ஆளும் புவ‌னேஸ்வ‌ரி என்று ஸ்ர‌ச் செய்ய‌வும்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சூரி சார்! (தாத்தா)!
    பேரன் பேரு அப்புறமாச் சொல்லுங்க! :)

    //நான் மாதேஸ்வரி என்று வார்த்தை பாடும்பொழுது, எனது மகளுக்கு ஸ்டாம்போர்டு
    பிரசவ மருத்துவகத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்ற செய்தி ஸெல் ஃபோனில் வருகிறது//

    மாது+ஈஸ்வரி-ன்னும் பார்க்கலாம்!
    மாதா+ஈஸ்வரி-ன்னும் பார்க்கலாம்!
    உங்களுக்குப் போன் வந்த போது மாதாவான மாது, மாதாவாக ஆனாள்! :)

    புன்னகைப்பாள் புவனேஸ்வரி-ன்னு தலைப்பு மாத்தி வச்சது இந்தப் புன்னகைக்குத் தானோ? வாவ்! :)

    ReplyDelete
  15. //புவனேஸ்வரியை மாதே என்று அழைக்கும்பொழுது
    ஒரு மழலை பிறந்த செய்தி எனக்கு ஒரு மிராகில் ஆக த் தெரிந்தது.//

    படிக்கையில் கண்கள் பனித்தன சுப்பு தாத்தா. குழந்தைக்கு அன்னையின் ஆசிகள் பூரணமா இருக்கு :) பாடலை கேட்ட பின் மறுபடி வரேன் :) ஈன்றெடுத்த அன்னைக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. சுக மளிக்கும் புன்னகையை
    சொக்கிச் சொக்கிப் பார்த்திருப்பேன்

    உண்மையான வார்த்தைகள்.காஞ்சிபுரம் செல்லும் போதெல்லாம் பலகணியின் வழியாக காமாக்ஷி அம்பாளை உள்ளே எரியும் எண்ணை விளக்கினூடே பார்க்கும் போது தோன்றும் புன்னகையை சொக்கிச் சொக்கி பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன் பலதடவை.

    சுரீ சார் வழ்த்துக்கள் நானும் உங்களை பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் சிங்கையில் புதிய வரவை எதிர்பார்த்து.

    ReplyDelete
  17. //உண்மையான வார்த்தைகள்.காஞ்சிபுரம் செல்லும் போதெல்லாம் பலகணியின் வழியாக காமாக்ஷி அம்பாளை உள்ளே எரியும் எண்ணை விளக்கினூடே பார்க்கும் போது தோன்றும் புன்னகையை சொக்கிச் சொக்கி பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறேன் பலதடவை.//

    மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் தி.ரா.ச. ஐயா :)

    //சுரீ சார் வழ்த்துக்கள் நானும் உங்களை பின் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் சிங்கையில் புதிய வரவை எதிர்பார்த்து.//

    குழந்தையின் வரவிற்கு முன்கூட்டிய வாழ்த்துகள் :)

    ReplyDelete
  18. //பாட‌லைக் கேட்க‌ இங்கே
    http://menakasury.blogspot.com//

    பாடலைக் கேட்டேன் தாத்தா, குழந்தை பிறந்த செய்தியையும் :) பாடல் அருமையாக வந்திருக்கு. நீங்க "எனையாளும் புவனேஸ்வரி" என்ற வரியை புவனேஸ்வரி அம்மாவுடைய படத்தோட இணைச்சிருப்பது நல்லாருக்கு. மிக்க நன்றி.

    தாத்தா பாட்டிக்கும், குடும்பத்தினருக்கும் மீண்டும் ஒரு முறை வாழ்த்துகளை தெரிவிச்சுக்கறேன்!

    ReplyDelete
  19. தாத்தா & பாட்டி - இருவருக்கும் வாழ்த்துகள். உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்.

    திராச தாத்தா - உங்களுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள். :-)

    ReplyDelete
  20. I want two phothos. i will pay the amount by draft please send them.

    ReplyDelete
  21. I want two phothos. i will pay the amount by draft please send them.

    ReplyDelete