Tuesday, April 7, 2009

மனசுக்குள் நடக்கும் மீனாட்சி கும்பாபிஷேகம்!

இது மதுரை அரசாளும் மீனாட்சிக் குழந்தையின் சிறப்பு கும்பாபிஷேகப் (குடமுழுக்கு) பதிவு!
ஊருக்கே மகாராணி என்றாலும் அன்பர்களுக்கு அவள் குழந்தை தானே!
குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டம் போலத் தானே குடமுழுக்குக் கொண்டாட்டங்களும்!

கேக்-க்குப் பதில் பிரசாத அப்பம்! கேண்டிலுக்குப் பதில் நெய் தீபம்!
தலைக் குளியலுக்குப் பதில் கோபுரத் தலைக் கலசங்களுக்குக் குளியல்! :)

(Added this actual picture of today's kumbabishekam. Thanks: Dinamalar)


அதான் இன்றைய சிறப்பு மீனாட்சிப் பாடல், பிள்ளைப் பாடல்! பார்ப்போமா? கேட்போமா? - பங்குனியில் ஒரு நவராத்திரி - 9!


மனசுக்குள் குடமுழுக்கு செய்து மகிழ்ந்தவர் பூசலார் நாயனார்! ஈசன் அந்தக் குடமுழுக்கைத் தான் முதலில் பெற்றுக் கொண்டானாம்!
அதே போல், மதுரை மீனாட்சி அன்பர்கள், உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தாலும்...

உங்க மனசுல நடப்பது தான் இந்த மீனாட்சி கும்பாபிஷேகம்! மனக் குடமுழுக்கு!
"கண்"ணார மட்டுமில்லாமல், "மன"மாரக் கண்டு களியுங்கள்!

ஈசனும் இப்படித் தான் மீனாட்சியை மனசுக்குள்ளாறவே வரைஞ்சி வரைஞ்சி பாக்குறாராம்! = ஒருவன் திருவுள்ளத்தில் அழகின் ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே!

இந்தப் பிள்ளைத் தமிழ்ப் பாட்டு பல இலக்கிய மேடைகளிலும், இசை மேடைகளிலும் பிரபலம்! தொடுக்கும் கடவுள் என்று துவங்கும் பாட்டு!
கேட்டுக் கொண்டே வாசியுங்கள்! இசை அரசி எம்.எஸ். அம்மாவின் தேன் குரலில்!



மெல்ல மெல்ல அடி எடுத்து வச்சி வாம்மா! வருகவே வருகவே என்று குழந்தை மீனாளுக்கு நடை காட்டுகிறார் கவிஞர்! அப்படியே நைசா நடத்தி நடத்தி, அவளை நம்மிடம் அழைத்து வந்து விடுகிறார்! யார்? = "குமர" குருபரர்!
* இன்று தான் மீனாட்சிக்கு ஒரு பதிவர். குமரன் என்றால்,
* அன்றும் மீனாட்சிக்கு ஒரு பதிவர். குமர-குருபரன் இருந்திருக்கிறார்! :)

தொடுக்கும் கடவுள் பழம் பாடல்
தொடையின் பயனே! நறை பழுத்த
துறைத் தீந் தமிழின் ஒழுகு நறுஞ்
சுவையே! அகந்தைக் கிழங்கை அகழ்ந்து


தொடுக்கும் கடவுள் பழம் பாடல் தொடையின் பயனே =
தொடையல்-ன்னா மாலை என்ற பொருளும் உண்டு! எப்படி மாலைக்கு நார், பூக்கள், இலை, சரிகை, நூல் என்று பலதும் தேவைப்படுதோ,
அதே போல் பாட்டுக்கும் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை-ன்னு பலதும் தொடுக்கத் தேவைப்படுகிறது! அதுல தொடை என்பது இன்னும் சிறப்பு!

எதுகைத் தொடை, மோனைத் தொடை-ன்னு பாட்டுக்கு அழகு சேர்க்கும்! ஆனால் அது மட்டுமே இருந்து, பாட்டில் பொருள் இல்லீன்னா?
அதே போல, தொடை நிரம்பிய பல கடவுள் பாடல்களுக்கு எல்லாம், உள்ளுறைப் பொருளாய் இருக்கிறாள் குழந்தை மீனாட்சி!

என்ன தான் விதம் விதமா தொடுத்தாலும், இறைவன் தோளில் போய் அமர்ந்தால் அல்லவோ மாலைக்கு அழகு?
பழம் பாடலும் இறைவனுக்குப் பயனாய் அமர்ந்தால் தான் அழகு! அதான் தொடையின் பயனே!

நறை பழுத்த துறைத் தீந் தமிழின் ஒழுகு நறுஞ் சுவையே =
ந"றை"-ன்னா தேன்! ந"ரை"-ன்னா தான் வெள்ளை முடி! :)
ஆனா நறையைத் தலையில் தடவினா, தலை நரை ஆயிடும்-ன்னு சில பேரு வீட்டுல இன்னும் சொல்லுவாய்ங்க! :)

நறை பழுத்த = தேன் பழுத்த = தேன் எப்படிங்க பழுக்கும்?
பூ தான் காயாகி, அப்புறம் கனி ஆகுது இல்லையா? அந்தப் பூவில் இருக்கும் தித்திப்பான தேன் தானே பழத்தின் ருசிக்குக் காரணம்!
அந்த மகரந்தமே, ஒட்டு மொத்தமா பழுத்தா எப்படி இருக்கும்? சும்மா வண்டு போல உறிஞ்சிக் குடிச்சிற மாட்டோம்? :) அதான் நறை பழுத்த என்கிறார்!

துறைத் தீந் தமிழின் ஒழுகு நறும் சுவை! பல திணை/துறைகளில் ஊறிக் கிடக்கும் தமிழ்த் தேன்! தீம்பால், தீஞ்சுவை-ன்னு சொல்றோம்-ல்ல? அதே தான் தீம்+தமிழ் = தீந்தமிழ்!

அந்தத் தமிழை ஆசை ஆசையாக் கடிச்சித் தின்னும் போது...ஒழுகு நறும் சுவை!
மல்கோவா மாம்பழத்தைக் கடிச்சித் தின்னும் போது, விரலிடுக்கில் ஒழுகும் பாருங்க!
வெட்கம் மானம் பார்ப்போமா வீட்டுக்குள்ள? சப்பு கொட்டி மாம்பழச் சாறை வழித்துச் சாப்பிட்டு விட்டு தானே மறு வேலை? அதே போல் தான் ஒழுகு தமிழ்ச் சுவை! :)



எடுக்கும் தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே! வளர்சிமய
இமயப் பொருப்பில் விளையாடும்
இள மென் பிடியே! எறி தரங்கம்

அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும் = கிழங்கை வெட்ட முடியாது, அரிய முடியாது! நாரோட ஒட்டிக்கிட்டு தான் வரும்! பனங்கிழங்கு சாப்பிட்டிருந்தா தெரியும்! கிழங்கைப் பல்லால் அகழ்ந்து தான் எடுக்கணும்! அதே போலத் தான் அகந்தை என்னும் கிழங்கு!
தான்-தான்-தான் = இதையும் நம்ம மனசுக்குள்ள நாமே போய், அகழ்ந்து எடுத்தாத் தான் முடியுமே தவிர, எம்புட்டு சாத்திரம் பேசினாலும் ஒன்னும் முடியாது! :)

தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே! = ஆனா அகழ்ந்துட்டா அதுல குழி விழுந்துருமே! அதனால் என்ன? குழியில் அன்பு என்னும் நெய்யை உற்றி அதையே விளக்கு ஆக்கிருவாங்களாம் அடியவர்கள்! தொழும்பர்கள்!
அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாக, இன்பு உருகு சிந்தை இடு திரியாய்-ன்னு பாடினாரே ஆழ்வார்! அது போல, தொழும்பர் உளக் கோயிற்கு ஏற்றும் விளக்கே! தாயே மீனாட்சி!

வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இள மென் பிடியே = பிடி-ன்னா பெண் யானை! களிறு=ஆண் யானை!
இமயமலைச் சிகரங்கள் வளருதாம்! எப்படி? பனி உருகினாப் பிறகு ஒரு உசரம்! பனி மூடி இருக்கும் போது அதை விட உசரம்! அதான் "வளர்" சிமய-ன்னு சொல்றாரு!
அந்த மலைச் சிகரங்களில் பெண் யானையைப் போல் ஓடி விளையாடியவள், இமவான் மகள்! பார்வதி!



உடுக்கும் புவனம் கடந்து நின்ற
ஒருவன் திரு உள்ளத்தில் அழகு
ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும்
உயிர் ஓவியமே! மதுகரம் வாய்


இது தான் சிறப்பு வர்ணனை! பாட்டுக்கே மகுடம்!

காதலன் எப்படி அழகாத் தெரியறான் காதலிக்கு?
காதலுக்கு முன்னாடி அவனை லூசு என்கிறாள்! கல்யாணம் ஆன பிறகு சரியான வெத்து வேட்டு என்கிறாள்! :))
ஆனால் காதலின் போது மட்டும், அவன் அழகாத் தெரியக் காரணம் என்ன?
இருங்க அக்கம் பக்கத்துல கேட்டுட்டு வந்து சொல்லுறேன்! :))

ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் பார்க்கிறா! அதான் காரணமாம்!
ஒருவன் திரு உள்ளத்தில், அழகு ஒழுக, எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே!

மனசு தாங்க அழகுக்கு காரணம்! சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் சும்மா கொஞ்ச நாளு தான்! அப்புறம் நம்மளயே பேக் பண்ணி அனுப்பிச்சிருவாங்க! :)
ஆனால் மனசை அழகா வச்சிக்கிட்டா, சிரிப்பும் அழகா வரும்! சிரிப்பும் அழகா வந்தா, முக அழகு தானே வரும்! - சரி தானே டார்லிங் நான் சொல்றது? :)

இப்படி மனசுக்குள்ள வரைஞ்சி பார்த்த ஓவியம்! அழகு வண்ணங்கள் ஒழுக ஒழுக, வரைஞ்சிப் பார்த்த உயிர் உள்ள ஓவியம் = மீனாட்சி!

தரங்கம்-ன்னா அலை! தரங்கம்பாடி-ன்னு ஊரு இருக்குல்ல?
அலைகடலை பார்டர் போட்ட புடைவையை உடுத்திக் கொண்டிருக்கும் மண் மகள்! அவளையும் கடந்து கயிலை நின்ற ஒருவன்! எறி தரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன்!

* யார் வரைஞ்சாங்க? = சொக்கன்! சிவன்!
* யாரை வரைஞ்சான்? = மீனாட்சி என்னும் ஓவியத்தையே, ஓவியத்தில் வரைஞ்சான்!


மடுக்கும் குழற் காடு ஏந்தும் இள
வஞ்சிக் கொடியே வருகவே!
மலையத் துவசன் பெற்ற பெரு
வாழ்வே வருக வருகவே!!


மதுகரம் வாய் மடுக்கும் = வண்டுகள் வாய் மடுக்கும்
குழற் காடு ஏந்தும் இள வஞ்சிக் கொடி = கருங் காடு போல கூந்தல் பரவிக் கிடக்க, ஒரு வஞ்சிக் கொடி மீனாட்சி பூத்துக் குலுங்குகிறாள்!
அவளைச் சுற்றி வண்டு போல், ங்கொய், ங்கொய்-ன்னு நாமளும் சுற்றி சுற்றி வருகிறோம்!

இட்டும், தொட்டும், கவ்வியும், நெய்யுடை உணவை, மெய்ப்பட விதிர்த்தும்,
சிறு கை நீட்டி, குறு குறு நடந்து.......

* மலையத்துவச பாண்டியன் பெற்றவளே! வருக! வருகவே!
* என்னைப் பெத்த ராசாத்தீ! யம்மாடீ! வருக வருகவே!

* இந்த அம்மன் பாட்டு வலைப்பூவில், எங்கள் மனக் கும்பாபிஷேகம் காண, வருக வருகவே!

தென்னாடுடைய சிவளே போற்றி! எந் நாட்டவர்க்கும் இறைவீ போற்றி!! எங்கள் மீனாட்சி போற்றி போற்றியே!!!

7 comments:

  1. >>>ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் பார்க்கிறா! அதான் காரணமாம்!
    ஒருவன் திரு உள்ளத்தில், அழகு ஒழுக, எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே!<<<<

    கே ஆர் எஸ்!
    அற்புதம்.
    குமர குருபரர் தமிழுக்காக மீனாளே குழந்தையாக மன்னனின் மடியில் அமர்ந்தாள். இப்படி தமிழ் பாடினால் ஏன் வரமாட்டாளாம்?

    திவாகர்

    ReplyDelete
  2. ஆகா, அருமை.

    தமிழும் அழகும் உங்கள் விளக்கமும் படிக்க மிகச் சுவை. அம்மையைப் போலவே எழில் கொஞ்சுகிறது. மிக்க நன்றி கண்ணா.

    ReplyDelete
  3. //DHIVAKAR said...
    >>>ஆங்...அவனையே உள்ளத்தில் எழுதி எழுதிப் பார்க்கிறா! அதான் காரணமாம்!
    ஒருவன் திரு உள்ளத்தில், அழகு ஒழுக, எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே!<<<<

    கே ஆர் எஸ்!
    அற்புதம். குமர குருபரர் தமிழுக்காக மீனாளே குழந்தையாக மன்னனின் மடியில் அமர்ந்தாள். இப்படி தமிழ் பாடினால் ஏன் வரமாட்டாளாம்?//

    கண்டிப்பா ஓடியாந்துருவா திவாகர் சார்! மன்னன் கழுத்து மாலையையே பறித்தும் கொடுப்பாள் பைந்தமிழுக்கு! :)

    ReplyDelete
  4. //கவிநயா said...
    தமிழும் அழகும் உங்கள் விளக்கமும் படிக்க மிகச் சுவை. அம்மையைப் போலவே எழில் கொஞ்சுகிறது//

    நன்றி-க்கா!
    கொஞ்சமா கொஞ்சமா பொட்டி கட்டியாச்சா? :)
    மீனாட்சி குடமுழுக்கு படம் பாத்தீயளா? இருங்க, இங்கும் தரவேற்றுகிறேன்!

    ReplyDelete
  5. மலையத் துவசன் பெற்ற பெரு
    வாழ்வே வருக வருகவே!!

    மலயத்வசன் பெற்ற பெருந்தவமே வருக வருக. கண்ணா(கவிக்கா கோவிச்சக்க போறாங்க) கேஆர் ஸ் அவர்களே இந்தப் பாட்டு நான் எச்.எச்.எல்.சி (1963) படிக்கும் போது படித்தது. ஆனால் இப்பொதுதான் தங்களின் மூலம் முழு அர்தத்தையும் உணரமுடிந்தது. குடமுழுக்கால் குளிர்ந்திருக்கும் அங்கையற்கண்ணி கடைக்கண்ணால் நம்மை குளிரவைப்பாள்

    ReplyDelete
  6. இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன் கண் விடல்.

    எதுக்கு இந்தக் குறட்பாவைச் சொல்றேன்னு உங்களுக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன் இரவி. :-)

    திருக்குடமுழுக்குச் சிறப்பு இடுகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. அற்புதம், மிகவும் அருமை.

    ReplyDelete