இன்னும் ஒரு சில இடுகைகள் தான்!
அப்பறம் ஆன்மீக பாடல் வலைப்பூக்களிலேயே முதல் முறையாக, அம்மன் பாட்டு - 200! :)
மாசறு பொன்னே வருக-ங்கிற பாட்டு படத்தில் எப்போ வரும்? ரேவதி முழுகாம இருக்கும் சந்தோஷச் சேதியில், கமல் மகிழ்ந்து சிரிக்க....
ஊரின் தேர் திருவிழாவுக்கு, ரேவதி கண்டாங்கிச் சேலை கட்டிக்கிட்டு, நெற்றியில் விபூதிக் கீற்றும் குங்குமமுமாய், கிராமத்துப் பொண்ணாய், அழகா வருவாங்க!
தேர் நகர நகர, பாட்டும் நகரும்!

சினிமாவில் முழுப் பாடலும் காட்ட மாட்டாங்க! ஏன்-ன்னா தேரில் தான் படத்தின் க்ளைமாக்ஸே இருக்கு!
அதனால், நாம அங்கு செல்லாமல், பாடலை மட்டும் சுவைப்போம்!
படத்தில் அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொடுத்துள்ளேன்!
கண்டு, கேட்டு மகிழுங்கள்!
இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில், மாய மாளவ கெளளை ராகத்தில் கெளரியின் பாட்டு, இதோ:
மாசறு பொன்னே வருக! - திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! - மணிரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!
கோல முகமும் குறுநகையும் - குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் - விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு பொன்னே வருக)
நீர் வானம், நிலம் காற்று - நெருப்பான ஐம்பூதம்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் - ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே!
திரிசூலம் கரம் ஏந்தும் - மாகாளி உமையே!
கருமாரி மகமாயி - காப்பாற்று எனையே!
பாவம் விலகும், வினையகலும் - உனைத் துதித்திட
ஞானம் விளையும், நலம் பெருகும் - இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்...
(மாசறு பொன்னே வருக)
வரிகள்: வாலி
குரல்: பலர்
இசை: இளையராஜா
படம்: தேவர் மகன்
மாசறு பொன்னே வருக = மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே தேனே-ன்னு, கற்புக்கரசியான கண்ணகியைச் சிலப்பதிகாரம் போற்றும்! அதே போல் பாட்டும், மாசறு பொன்னே-ன்னு துவங்குகிறது!
திரிபுரம் எரித்த ஈசனின் பங்கே வருக = திரிபுரத்தை ஈசன் தன் சிரிப்பாலேயே எரித்தான் என்று சொல்வதுண்டு! பொதுவாக, கோபமும் தியானமும் மிகுந்து காணலாகும் ஈசன்! அவனின் சிரிப்புக்கு யார் காரணம்? அவன் இனிய காதல் பைங்கொடி, இவள் தானே!
அதனால் திரிபுரத்தை ஈசன் எரிக்கவில்லை! அவன் சிரிப்பான அன்னை எரித்தாள் என்று ஆகி விடுகிறது! அதான் திரிபுரம் எரித்த ஈசனின் பங்கே என்று கவிஞர் விளிக்கிறார் போலும்! எப்படி ஆகிலும் ஈசனின் சம-பங்கு, இடப் பாக இனியது கேட்பாள், இவள் தானே!
மாதவன் தங்காய் வருக = மாயோன் பெருமாளின் தங்கையானவளும் இவளே! மாயோள்! ரெண்டு பேரும் ஒரே நிறம் தான்! குடும்பக் கலர்! :)
மணிரதம் அதில் உலவ, வாசலில் இங்கே வருக!! = மாணிக்கத் தேரேறி, நம் வீட்டு வாசலுக்கே வருகிறாள்! வாடியம்மா ராசாத்தி!
கோல முகமும் குறு நகையும் = அழகு முகம், குறுஞ் சிரிப்பு! ஹா ஹா ஹா-ன்னு பயங்கரமான சிரிப்பு இல்ல! குறுஞ் சிரிப்பு!
குளிர்நிலவென நீலவிழியும் = விழி நீலமா இருக்கு! அதாச்சும் விழிக்கரு நீலம்! அதனை ஒட்டிய வெண்பகுதியோ குளிர் நிலவான வெண்மை!
பிறைநுதலும் = மூன்றாம் பிறையைக் கவிழ்த்துப் போட்டாப் போல் நெற்றி!
விளங்கிடும் எழில் = இப்படி ஒரு முக அழகு!
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் = அது என்ன நீலி? சூலி-ன்னா சூலம் ஏந்துபவள்! நீலி-ன்னு ஏன் சொல்லணும்! பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!
நீர் வானம், நிலம் காற்று, நெருப்பான ஐம்பூதம் = இந்த ஐம்பூதங்களும்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே = இவள் ஆணையால் தான் தங்கள் பணியைச் செய்கின்றன!
பார் போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம், இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே! = நாயன்மார்களின் தேவாரமும், ஆழ்வார் பாசுரங்களும், அன்னை உமையாளைப் பாடிச் சிறப்பிக்கின்றன! தேவாரம் அன்னையைப் போற்றுவதில் வியப்பில்லை - சைவ இலக்கியம்! ஆனால் ஆழ்வார் பாசுரங்களும் அன்னையைப் போற்றுகின்றனவா?
அன்னையைப் பற்றிய குறிப்புகள், பாசுரங்களிலும் வரும்! கோதைக்கு அவள் திருமணக் கனவில், கூறைப் புடைவையும் மணமாலையும் போட்டு விடுவதே, அன்னை தான்! இன்றும் திருக்கோவிலூர் பெருமாள் கோயிலில், பூங்கோவல் நாச்சியார் அருகே, துர்க்கை அம்மனுக்குத் தனிச் சன்னிதி உண்டு!
திரிசூலம் கரம் ஏந்தும் - மாகாளி உமையே = அவனுக்கும், அவளுக்கும் ஒரே ஆயுதம் தான் = திரிசூலம்! குடும்பம்-ன்னா இப்படி இருக்கணும்! என்னா ஒற்றுமை பாருங்க! எதுக்குத் தனித்தனியா ரெண்டு? எல்லாத்தையும் Share பண்ணிக்க வேணாமா? :)
கருமாரி மகமாயி - காப்பாற்று எனையே = மாரியான மழைத் தெய்வமும் நீ தான்! மகா மாயோளும் நீ தான்! என்னைக் காப்பாத்தும்மா தாயே!
பாவம் விலகும், வினை அகலும் = பாவம், வினை ரெண்டும் வேற வேறயா? ஆமாம்!
* வினை = முற்பிறவியில் செய்தது! நம்மை இப்போது தொடர்வது! (சஞ்சித கர்மா - மூட்டை கட்டி வச்சிருக்கு! அதில் இருந்து கொஞ்சம் எடுத்து இந்த இப்பிறவிக்கு :)
* பாவம் = இப்பிறவியில் செய்வது! அடுத்த பிறவியில் இதுவும் வினையாகி, மீண்டும் தொடரும்! (ஆகாம்யம்)
ஏற்கனவே மூட்டையில் இருக்கு! இதுல இன்னும் இன்னும் செஞ்சி, சேர்த்துக்கிட்டே இருந்தா எப்படி? அட் லீஸ்ட், இந்தப் பிறவியிலாச்சும் பண்ணாம இருந்தா, மூட்டையில் பாரம் குறையும்-ல்ல? :)
இறைவன் திருவடிகளை ஊற்றமுடன் பற்றிக் கொண்டவர்க்கு, இந்த மூட்டை இருந்தாலும், இல்லாமல் போய் விடுகின்றது! எரிந்து விடுகிறது!
போய பிழையும், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் என்பது, என் தோழி கோதையின் வாக்கு!
அதைத் தான் வாலியும் காட்டுகிறார் = பாவம் விலகும், வினை அகலும்!
உனைத் துதித்திட, ஞானம் விளையும், நலம் பெருகும் = அவனை அடையவும் அவனே வழி என்ற ஞானம் விளையும்! அதனால், எல்லாம் அற, என்னை இழந்த நலம் = சரண நலம் பெருகும்!
இருள் விலகிடும் சோதியென ஆதியென அடியவர் தொழும் = இருள் விலகி அருள் சேரும் ஜோதி! ஆதி! தீப மங்கள ஜோதி நமோ நம! என்று அன்னையைத் துதிப்போம்!
மாசறு பொன்னே வருக!
மகமாயி குகதாயி வருக வருக!
அம்மன் பாட்டு - 200 உற்சவத்தை, இனிதே நடத்தித் தருக!