Friday, April 30, 2010

இளையராஜா: மாசறு பொன்னே வருக!

தேவர் மகன் படத்தில் வரும் அம்மன் பாட்டினை இன்றைய வெள்ளிக்கிழமை இங்கிட்டு காண்போம்!
இன்னும் ஒரு சில இடுகைகள் தான்!
அப்பறம் ஆன்மீக பாடல் வலைப்பூக்களிலேயே முதல் முறையாக, அம்மன் பாட்டு - 200! :)

மாசறு பொன்னே வருக-ங்கிற பாட்டு படத்தில் எப்போ வரும்? ரேவதி முழுகாம இருக்கும் சந்தோஷச் சேதியில், கமல் மகிழ்ந்து சிரிக்க....
ஊரின் தேர் திருவிழாவுக்கு, ரேவதி கண்டாங்கிச் சேலை கட்டிக்கிட்டு, நெற்றியில் விபூதிக் கீற்றும் குங்குமமுமாய், கிராமத்துப் பொண்ணாய், அழகா வருவாங்க!

தேர் நகர நகர, பாட்டும் நகரும்!


சினிமாவில் முழுப் பாடலும் காட்ட மாட்டாங்க! ஏன்-ன்னா தேரில் தான் படத்தின் க்ளைமாக்ஸே இருக்கு!
அதனால், நாம அங்கு செல்லாமல், பாடலை மட்டும் சுவைப்போம்!
படத்தில் அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்துக் கொடுத்துள்ளேன்!
கண்டு, கேட்டு மகிழுங்கள்!
இசைஞானி இளையராஜாவின் கைவண்ணத்தில், மாய மாளவ கெளளை ராகத்தில் கெளரியின் பாட்டு, இதோ:





மாசறு பொன்னே வருக! - திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக!!
மாதவன் தங்காய் வருக! - மணிரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக!!

கோல முகமும் குறுநகையும் - குளிர்நிலவென
நீலவிழியும் பிறைநுதலும் - விளங்கிடும் எழில்
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும்
(மாசறு பொன்னே வருக)

நீர் வானம், நிலம் காற்று - நெருப்பான ஐம்பூதம்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே!
பார் போற்றும் தேவாரம் - ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே!

திரிசூலம் கரம் ஏந்தும் - மாகாளி உமையே!
கருமாரி மகமாயி - காப்பாற்று எனையே!

பாவம் விலகும், வினையகலும் - உனைத் துதித்திட
ஞானம் விளையும், நலம் பெருகும் - இருள் விலகிடும்
சோதியென ஆதியென அடியவர் தொழும்...
(மாசறு பொன்னே வருக)

வரிகள்: வாலி
குரல்: பலர்
இசை: இளையராஜா
படம்: தேவர் மகன்


மாசறு பொன்னே வருக = மாசறு பொன்னே, வலம்புரி முத்தே, காசறு விரையே, கரும்பே தேனே-ன்னு, கற்புக்கரசியான கண்ணகியைச் சிலப்பதிகாரம் போற்றும்! அதே போல் பாட்டும், மாசறு பொன்னே-ன்னு துவங்குகிறது!

திரிபுரம் எரித்த ஈசனின் பங்கே வருக = திரிபுரத்தை ஈசன் தன் சிரிப்பாலேயே எரித்தான் என்று சொல்வதுண்டு! பொதுவாக, கோபமும் தியானமும் மிகுந்து காணலாகும் ஈசன்! அவனின் சிரிப்புக்கு யார் காரணம்? அவன் இனிய காதல் பைங்கொடி, இவள் தானே!
அதனால் திரிபுரத்தை ஈசன் எரிக்கவில்லை! அவன் சிரிப்பான அன்னை எரித்தாள் என்று ஆகி விடுகிறது! அதான் திரிபுரம் எரித்த ஈசனின் பங்கே என்று கவிஞர் விளிக்கிறார் போலும்! எப்படி ஆகிலும் ஈசனின் சம-பங்கு, இடப் பாக இனியது கேட்பாள், இவள் தானே!

மாதவன் தங்காய் வருக = மாயோன் பெருமாளின் தங்கையானவளும் இவளே! மாயோள்! ரெண்டு பேரும் ஒரே நிறம் தான்! குடும்பக் கலர்! :)

மணிரதம் அதில் உலவ, வாசலில் இங்கே வருக!! = மாணிக்கத் தேரேறி, நம் வீட்டு வாசலுக்கே வருகிறாள்! வாடியம்மா ராசாத்தி!


கோல முகமும் குறு நகையும் = அழகு முகம், குறுஞ் சிரிப்பு! ஹா ஹா ஹா-ன்னு பயங்கரமான சிரிப்பு இல்ல! குறுஞ் சிரிப்பு!
குளிர்நிலவென நீலவிழியும் = விழி நீலமா இருக்கு! அதாச்சும் விழிக்கரு நீலம்! அதனை ஒட்டிய வெண்பகுதியோ குளிர் நிலவான வெண்மை!

பிறைநுதலும் = மூன்றாம் பிறையைக் கவிழ்த்துப் போட்டாப் போல் நெற்றி!
விளங்கிடும் எழில் = இப்படி ஒரு முக அழகு!
நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் = அது என்ன நீலி? சூலி-ன்னா சூலம் ஏந்துபவள்! நீலி-ன்னு ஏன் சொல்லணும்! பின்னூட்டத்தில் சொல்லுங்க பார்ப்போம்!

நீர் வானம், நிலம் காற்று, நெருப்பான ஐம்பூதம் = இந்த ஐம்பூதங்களும்
உனது ஆணை தனையேற்றுப் பணியாற்றுதே = இவள் ஆணையால் தான் தங்கள் பணியைச் செய்கின்றன!
பார் போற்றும் தேவாரம், ஆழ்வார்கள் தமிழாரம், இவையாவும் எழிலே, உன் பதம் போற்றுதே! = நாயன்மார்களின் தேவாரமும், ஆழ்வார் பாசுரங்களும், அன்னை உமையாளைப் பாடிச் சிறப்பிக்கின்றன! தேவாரம் அன்னையைப் போற்றுவதில் வியப்பில்லை - சைவ இலக்கியம்! ஆனால் ஆழ்வார் பாசுரங்களும் அன்னையைப் போற்றுகின்றனவா?

அன்னையைப் பற்றிய குறிப்புகள், பாசுரங்களிலும் வரும்! கோதைக்கு அவள் திருமணக் கனவில், கூறைப் புடைவையும் மணமாலையும் போட்டு விடுவதே, அன்னை தான்! இன்றும் திருக்கோவிலூர் பெருமாள் கோயிலில், பூங்கோவல் நாச்சியார் அருகே, துர்க்கை அம்மனுக்குத் தனிச் சன்னிதி உண்டு!


திரிசூலம் கரம் ஏந்தும் - மாகாளி உமையே = அவனுக்கும், அவளுக்கும் ஒரே ஆயுதம் தான் = திரிசூலம்! குடும்பம்-ன்னா இப்படி இருக்கணும்! என்னா ஒற்றுமை பாருங்க! எதுக்குத் தனித்தனியா ரெண்டு? எல்லாத்தையும் Share பண்ணிக்க வேணாமா? :)

கருமாரி மகமாயி - காப்பாற்று எனையே = மாரியான மழைத் தெய்வமும் நீ தான்! மகா மாயோளும் நீ தான்! என்னைக் காப்பாத்தும்மா தாயே!

பாவம் விலகும், வினை அகலும் = பாவம், வினை ரெண்டும் வேற வேறயா? ஆமாம்!
* வினை = முற்பிறவியில் செய்தது! நம்மை இப்போது தொடர்வது! (சஞ்சித கர்மா - மூட்டை கட்டி வச்சிருக்கு! அதில் இருந்து கொஞ்சம் எடுத்து இந்த இப்பிறவிக்கு :)
* பாவம் = இப்பிறவியில் செய்வது! அடுத்த பிறவியில் இதுவும் வினையாகி, மீண்டும் தொடரும்! (ஆகாம்யம்)

ஏற்கனவே மூட்டையில் இருக்கு! இதுல இன்னும் இன்னும் செஞ்சி, சேர்த்துக்கிட்டே இருந்தா எப்படி? அட் லீஸ்ட், இந்தப் பிறவியிலாச்சும் பண்ணாம இருந்தா, மூட்டையில் பாரம் குறையும்-ல்ல? :)
இறைவன் திருவடிகளை ஊற்றமுடன் பற்றிக் கொண்டவர்க்கு, இந்த மூட்டை இருந்தாலும், இல்லாமல் போய் விடுகின்றது! எரிந்து விடுகிறது!
போய பிழையும், புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய் என்பது, என் தோழி கோதையின் வாக்கு!
அதைத் தான் வாலியும் காட்டுகிறார் = பாவம் விலகும், வினை அகலும்!

உனைத் துதித்திட, ஞானம் விளையும், நலம் பெருகும் = அவனை அடையவும் அவனே வழி என்ற ஞானம் விளையும்! அதனால், எல்லாம் அற, என்னை இழந்த நலம் = சரண நலம் பெருகும்!
இருள் விலகிடும் சோதியென ஆதியென அடியவர் தொழும் = இருள் விலகி அருள் சேரும் ஜோதி! ஆதி! தீப மங்கள ஜோதி நமோ நம! என்று அன்னையைத் துதிப்போம்!

மாசறு பொன்னே வருக!
மகமாயி குகதாயி வருக வருக!
அம்மன் பாட்டு - 200 உற்சவத்தை, இனிதே நடத்தித் தருக!

21 comments:

  1. ரெண்டு மாசம் முன்னாடிதான் மறுபடியும் இந்த படம் பாத்தேன்.

    நீலி - நீல மேக சியாமளனின் சகோதரி :)

    ReplyDelete
  2. நீலியென சூலியெனத் தமிழ்மறை தொழும் = அது என்ன நீலி? சூலி-ன்னா சூலம் ஏந்துபவள்::)))

    முன்பு பெண்ணாக இருந்து கணவன் செய்த துரோகத்தால் , பேயாக மாறி கணவனை பழி வாங்க திருவாலன்காடுக்கு வர , அங்கிருக்கும் மக்களிடம் பாதுகாப்பாக இருந்தான் அவள் கணவன். நீலி என்ற பேயி என்னை கொள்ள வருகிறாள் எனக்கு பாதுகாப்பு கொடுங்கள் என்று அவன் கேட்க மக்கள் அனைவரும் அவனுக்கு சத்தியம் செய்கின்றனர். நாங்கள் இருக்கும் வரை உன்னை நீலி நெருங்க மாட்டாள். அப்படி உன்னை கொன்று விட்டால் நாங்கள் அனைவரும் தீயில் சாகிறோம் என்று பூதேஸ்வரர் ஆலயத்தில் சத்தியம் செய்கின்றனர். நீலி பொய்யாக மக்களிடம் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றி அவனை கொன்று விடுகிறாள்.(நீலி கண்ணீர் என்று கேள்வி பட்டு இருப்பீர்களே)
    மக்களும் சத்தியம் செய்தபடியால் தீயில் குதித்து உயிர் விடுகின்றனர்.
    இன்றும் திருவாலங்காட்டில் பூதேஸ்வரர் ஆலயத்தையும், நீலியின் பாதத்தையும் , மக்கள் தீயிட்டு உயிர் துறந்த இடத்தையும் காணலாம்.
    நீலி என்பவள் அங்கால பரமேஸ்வரி அம்மன் என்றும் சொல்வார்கள்.

    ReplyDelete
  3. அது என்ன LK, ஒற்றைச் சிரிப்பான்? :)

    ReplyDelete
  4. //சின்ன அம்மிணி said...
    ரெண்டு மாசம் முன்னாடிதான் மறுபடியும் இந்த படம் பாத்தேன்//

    என்ன-க்கா, மலரும் நினைவுகளா பார்க்கறீங்க? :)
    அப்படியே தென்றலே என்னைத் தொடு-வும் பார்த்துருங்க!

    //நீலி - நீல மேக சியாமளனின் சகோதரி :)//

    என்னை ராகவன் கிட்ட மாட்டி விட, இப்படி ஒரு சிரிப்பானுடன் கூடிய பதிலா? :)

    பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே-ன்னு அபிராமி அந்தாதி!
    நீலி-ன்னா நீல நிறம் தான்! நீங்க சொன்னா மாதிரி!

    ReplyDelete
  5. அன்னைக்கு ஐந்து நிறங்களாச் சொல்வது வழக்கம்! இவை கடலில் தோன்றும் பல்வேறு கால நிறங்கள்!

    * நீலம் = நீலி (நீலியம்மன்)
    * பச்சை = ஹரிணி (எங்கூரு, வாழைப்பந்தல் பச்சையம்மன்)
    * சிவப்பி = அருணா (செவ்வாடைக்காரி)
    * வெள்ளை = ஸ்வேதா (வெள்ளையம்மன்)
    * மஞ்சள் = பிங்கலை (பொன்னாத்தாள்)

    முதல் இரண்டும் பிறந்த வீடு!
    பின் மூன்றும் புகுந்த வீடு!

    ReplyDelete
  6. //Sri Kamalakkanni Amman Temple said...//
    பழையனூர் நீலி கதையை யாராச்சும் சொல்வாங்களா-ன்னு பார்த்தேன்! இங்கு சொன்னமைக்கு நன்றி ராஜேஷ்! ஆமாம், காரைக்கால் அம்மையாரின் திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ள ஊர் தான் இது!

    //நீலி பொய்யாக மக்களிடம் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றி அவனை கொன்று விடுகிறாள்.(நீலி கண்ணீர் என்று கேள்வி பட்டு இருப்பீர்களே)//

    நீலிக் கண்ணீர், பொய்-ன்னு எல்லாம் பின்னாளில் நம்ம மக்கள் உருவாக்கிட்டாங்க! ஆனால் உண்மை அதுவல்ல! பாவம் நீலி!
    அவள் "பொய்" எல்லாம் சொல்லவில்லை! இதோ, உங்கள் கதையை இன்னும் செவ்வியாக்கித் தருகிறேன்!

    காஞ்சிபுர வணிகன், தன் மனைவியான நீலியை விடுத்து, பரத்தையரிடம் பல பழக்கம் வைத்திருந்தான்! கணவனையே உயிருள் வைத்துப் போற்றிய நீலிக்கு வாழ்நாளெல்லாம் வருத்தம்-ன்னு தெய்வம் விதி எழுதிருச்சி போல! :(

    கணவனிடம் எவ்வளவோ கெஞ்சியும் கண்டித்தும் பார்த்தாள்! கேட்கவில்லை! ஒரு கட்டத்தில் இடையூறாக இருக்கும் அவளைக் கொன்றே விடுகிறான் அந்த தனவான்!

    அன்று, அன்பு குடிகொண்ட பெண்ணின் நெஞ்சில்
    இன்று, பழி குடி கொண்டது!

    பேயாய்த் திரிந்து, பழி வாங்கத் துடிக்கிறாள்! அவனோ ஒரு மந்திரச் சாமியாரிடம், சடங்கு செய்து, மந்திரித்த வாளை வாங்கி வைத்துக் கொள்கிறான்! நீலியால் அவனை அணுக முடியவில்லை!

    வணிக நிமித்தமாய், அவன் வேற்றூருக்குச் செல்லும் போது பின் தொடர்கிறாள்! கள்ளிச் செடி ஒடித்து, குழந்தையாய் மாற்றி, தானும் ஒரு பெண்ணுருவில் பின் தொடர, அவன் பயந்து போய், வழியில் உள்ள பழையனூர் சபையில் முறை இடுகிறான்! மொத்தம் 70 சைவ வேளாளர்கள்! அவர்களிடம் நீலி அழுகிறாள்!

    நீலி பொய் சொல்லவில்லை! நீலிக் கண்ணீரும் விடவில்லை! அவள் கண்ணீர் உண்மைக் கண்ணீரே!

    சபை வேளாளர்கள், சரி மறுநாள் பேசிக்கலாம், இன்று இரவு இங்கேயே தங்குங்கள் என்று சொல்ல, கணவன் மறுக்கிறான்! இவள் பேய் பேய் என்று மட்டும் அலறுகிறான்! தான் தான் அவளைப் பேயாக்கினது என்பதை மட்டும் சொல்லவில்லை! :)

    சரி, அவனே மனைவி என்பதை ஒப்புக்கறானே என்று நினைத்து, ஏதோ வெறுப்பில் பேய் என்கிறான் போல என்று கருதி, வலுக்கட்டாயமாகத் தங்க வைக்கிறார்கள்!

    அந்த மந்திரித்த வாளையும், ஆயுதம் வேண்டாம் என்ற நோக்கில் பறிமுதல் செய்கிறார்கள்! நாங்க தான் இருக்கோமே, பயப்படாதே, ஏதாச்சும் ஆச்சுன்னா எங்க உயிரையும் கொடுத்து உன்னைக் காப்போம் என்று சத்தியம் செய்கிறார்கள்!

    இரவில், நீலி அவனைப் பேயறைந்து விடுகிறாள்!
    மறுநாள் காலையில், இதைப் பார்த்த சபை வேளாளர்கள், "அப்பாவி" ஒருவனைக் காப்பாற்றத் தவறி விட்டோமே என்று, தீப்பாய்ந்து இறக்கிறார்கள்! அவர்களுக்குத் தங்கள் தரப்பே சரியெனப் பட்டது போலும்! வாக்கு மாறக் கூடாது என்ற ஒரு சாதாரண தர்மத்துக்காக அத்தனை பேரும் உயிர் துறக்கின்றனர்! அதனால் நீலி என்பவள் மேல், ஒரு பயங்கரமான இமேஜ், முத்திரை விழுந்து விட்டது! :((

    பின்னாளில் பெரியபுராணம் முதலான பல சைவ இலக்கியங்கள், நீலியை இப்படியே சித்தரித்து விட்டன!

    நம் சம்பந்தப் பெருமான் கூட இவளை, "வஞ்சப் படுத்து ஒருத்தி வாணாள் கொள்ளும் வகை கேட்டு அஞ்சும் பழையனூர்"-ன்னு ஊர் சொன்னதைப் போல் பயங்கரமானவளாகவே காட்டி விட்டார்! "பழையவூர் நீலி செய்த
    வஞ்சனையால் வணிகன் உயிர் இறப்ப" என்றெல்லாம் சேக்கிழாரும் பாடி விட்டார்! :(

    நீலி பொய் சொல்லவில்லை! அவள் தன்னைப் பேயாகக் காட்டிக் கொள்ளாமல், பெண்ணாகக் காட்டிக் கொண்டாள் அவ்வளவே!

    இதே காரைக்கால் அம்மை-புனிதா என்னும் பெண்ணைப் பேயாகக் காட்டினாங்களே! அது பொய் இல்லையா? நீலி செஞ்சது தான் பொய்யா? என்ன உலக நியாயமோ? முருகா! பேதை உள்ளங்களின் கதி எப்பமே இது தானோ? :((

    நீலி, "நீலிக் கண்ணீர்" விடவில்லை! அவள் கண்ணீர் உண்மைக் கண்ணீரே! இதை என் முருகன் அறிவான்!

    ReplyDelete
  7. இனி, முதலைக் கண்ணீர்-ன்னு வேணும்-ன்னாச் சொல்லுங்க!
    தயவு செய்து நீலிக் கண்ணீர் என்ற பிரயோகம்/பலுக்கல் வேண்டாம்!

    புனிதாவின் கதியும், நீலியின் கதியும், அதுவும் இருவரும் அருகருகே ஊர்களில்...
    படிக்கும் போதெல்லாம், எனக்கு என்னமோ போல் இருக்கும்! முருகா...நின்னருளாங் கதியன்றி வேறொன்றில்லை!

    ReplyDelete
  8. வெகு அழகான பாடல் தந்தமைக்கு மிக்க நன்றி கண்ணா. நீலி கதையும் இப்பொதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கும் நன்றி :)

    ReplyDelete
  9. அட! பரவாயில்லையே! சம்பந்தர், சேக்கிழார் எல்லாருமெ பொய் சொல்லிட்டாங்கன்னு சொல்லிட்டாரே!
    இனிமே, இதான் தீர்ப்பு!

    பேயாகிப் பழி எண்ணம் கொண்டு துரத்தியவள் பெண்ணாக உருமாறி, நடித்து, கண்ணீர் வடித்து, சொன்னது பொய்யுரை இல்லை! தன்னை ஒரு பெண்ணாகவே காட்டிக் கொண்டு, தான் பேய் என்பதை மறைத்தது பொய்யே இல்லை!
    நம்பிய மக்களை ஏமாற்றி, அவர்கள் தூங்கும்போது, பழிதீர்த்த பேய் செய்தது நியாயமே!

    அதைச் சொன்ன தெய்வக் குழந்தை சம்பந்தரும், பெரியபுராணம் பாடிய சேக்கிழாரும் தான் பொய்யுரைத்தனர்1

    நல்லா இருங்கப்பா!

    ReplyDelete
  10. இது தீர்ப்பு இல்லை எஸ்.கே. ஐயா! வெறும் கருத்து தான்! தீர்ப்பு சொல்ல இரவிசங்கர் என்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதியா? இல்லை போப்பாண்டவரா? :-)))

    ReplyDelete
  11. //குமரன் (Kumaran) said...
    இது தீர்ப்பு இல்லை எஸ்.கே. ஐயா! வெறும் கருத்து தான்!//

    eggjactly! :)

    //தீர்ப்பு சொல்ல இரவிசங்கர் என்ன சுப்ரீம் கோர்ட் நீதிபதியா? இல்லை போப்பாண்டவரா? :-)))//

    நான் போப்பாண்டவரோ, பஞ்சபாண்டவரோ...
    பந்தல் ஆண்டவர் கூட இல்லை! :)
    ஒன்லி செந்தில் ஆண்டவர்!

    ReplyDelete
  12. //VSK said...
    அட! பரவாயில்லையே! சம்பந்தர், சேக்கிழார் எல்லாருமெ பொய் சொல்லிட்டாங்கன்னு சொல்லிட்டாரே!
    இனிமே, இதான் தீர்ப்பு!//

    வாங்க SK ஐயா!

    நாளும் இன்னிசையால் நற்றமிழ் பரப்பும் நம் ஞான சம்பந்தன்!
    அவரைப் போயி, "பொய்" சொல்லிட்டாரு-ன்னு சொல்லுவேனா?

    சரியாப் பாருங்களேன்! "ஊர் சொன்னதைப் போல் பயங்கரமானவளாகவே காட்டி விட்டார்!"-ன்னு தான் சொல்லி இருக்கேன்!
    சம்பந்தர் அவள் காலத்தில் வாழ்ந்தவர் அல்லரே! ஊர் சொன்ன கதையைக் கேட்டுத் தானே எழுதினார்! அதைத் தான் சொன்னேன்!

    //பேயாகிப் பழி எண்ணம் கொண்டு துரத்தியவள் பெண்ணாக உருமாறி, நடித்து, கண்ணீர் வடித்து, சொன்னது பொய்யுரை இல்லை!//

    அவள் பேயான முதற் காரணம் எது SK ஐயா?

    வணிகன் அவளைப் பேய் என்றானே சபை வேளாளர்களிடம்! அப்படி அவளைப் பேயாக்கியது தான் தான் என்ற உண்மையைச் சொன்னானா?

    அப்பறம் எப்படி இவள் மட்டும் "நடித்தாள்", "போலிக் கண்ணீர் வடித்தாள்", "பொய் சொன்னாள்" என்றெல்லாம் குற்றஞ் சாட்டப் படுகிறது?

    //தன்னை ஒரு பெண்ணாகவே காட்டிக் கொண்டு, தான் பேய் என்பதை மறைத்தது பொய்யே இல்லை!//

    நானும் இதைச் சொல்லியுள்ளேனே!
    அவள் தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டாள்! சரி தான்!
    ஆனால் "பொய்" சொல்லவில்லை! தன் கணவனைத் தன்னிடம் சேர்த்து வைக்குமாறே வேண்டினாள்!

    எது எப்படியோ, நீலியின் கண்ணீர் பொய் அல்லவே அல்ல!
    அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர், அன்றே
    செல்வத்தைத் தேய்க்கும் படை!


    //நல்லா இருங்கப்பா!//

    :))
    SK ஐயா என்னும் கோழி அடிச்சி, இந்த கேஆரெஸ் குஞ்சு சாகப் போவதில்லை!

    ReplyDelete
  13. ஊர் சொன்ன கதையைக் கேட்டு அந்த தெய்வக் குழந்தை, அதை நம்பி அப்படியே பாடியது எனச் சொல்வது ஏற்புடையதாக இல்லை ரவி!

    பழிகொண்ட பேயாக வந்தவள், தான் அவனைக் கொல்லத்தான் வந்திருக்கிறேன் எனச் சொன்னாளா?
    அதை மறைத்து அழுத கண்ணீர் எப்படி மெய்யாக முடியும்?
    இவள் பாதி மறைத்து ஆடியது நீலித்தனம் இல்லையெனில், மெய்யாகவே வஞ்சகனான வணிகன் எப்படிப் பொய்யனாக முடியும்?

    நியாயம் என்பது இருபுறமும் இருக்கணுமில்ல!:))
    அவனைக் கொல்லும் வஞ்சக எண்ணத்துடன் மட்டுமே நீலி அழுத கண்ணீர் பொய்யே என்பது என் கருத்து.... தீர்ப்பு அல்ல!!:)))

    நான் மிதிக்கல்லாம் இல்லை ரவி.

    சம்பந்தரையும், சேக்கிழாரையும் ஏதோ ஒண்ணும் தெரியாதவங்கமாரி சொன்னது பொறுக்கலை! :)))

    ReplyDelete
  14. //VSK said...
    ஊர் சொன்ன கதையைக் கேட்டு அந்த தெய்வக் குழந்தை, அதை நம்பி அப்படியே பாடியது எனச் சொல்வது ஏற்புடையதாக இல்லை ரவி!//

    சரி, மன்னிக்கவும் SK ஐயா!

    ஊர் சொன்ன கதை அல்லாது, வேறு இலக்கியக் குறிப்புகளை வைத்துச் சம்பந்தர் அப்படிப் பாடினார் என்றால், அந்த இலக்கியங்களின் பேரையாவது சொல்லுங்களேன்!
    சம்பந்தருக்கு முன் நீலியைப் பற்றிக் காட்டின இலக்கியங்கள் யாதோ?

    //பழிகொண்ட பேயாக வந்தவள், தான் அவனைக் கொல்லத்தான் வந்திருக்கிறேன் எனச் சொன்னாளா?//

    கணவனைக் "கொல்ல" வரவில்லை!
    கணவனிடம் "நியாயம் கேட்கவே" வந்தாள்!
    ஆனால் அப்போதும் அவன் மனம் மாறவில்லை!

    முருகன் சூரனைக் "கொல்லவா" வந்தான்?
    ஆணவ மலம் நீக்கி தன்னிடம் "சேர்த்துக் கொள்ளத்" தானே வந்தான் என்பார்கள்!
    முருகனுக்கு ஒரு நியாயம், நீலிக்கு ஒரு நியாயமா?

    //அதை மறைத்து அழுத கண்ணீர் எப்படி மெய்யாக முடியும்?//

    அவள் அழுத கண்ணீர், சபை வேளாளர்களைக் கரைக்க அல்ல!
    அவள் அழுத கண்ணீர், அவள் மனத்தால் துடி துடித்தது!
    அவள் வாழ்வே கண்ணீர்! அதுவே அவள் கண்களில் வந்தது!

    //நியாயம் என்பது இருபுறமும் இருக்கணுமில்ல!:))//

    நியாயம் செய்த தவறை உணர வைக்கும்! உணராத பட்சத்தில் சமன்படுத்தும்! இங்கு சமன்படுத்தியது!

    //சம்பந்தரையும், சேக்கிழாரையும் ஏதோ ஒண்ணும் தெரியாதவங்கமாரி சொன்னது பொறுக்கலை!//

    :)
    சேக்கிழார் ஒன்னும் தெரியாதவரா என்ன? எவ்வளவு பெரும் புலவர்! சிவ பக்தர்!
    நான் சொல்ல வந்தது, சமுதாயத்தில் நீலியின் சித்தரிப்பு! அது அவர்கள் பாட்டிலும் ஏறி விட்டது என்பதே!

    இன்னொன்றும் சொல்கிறேன்:
    சமண இலக்கியத்தில் நீலி காட்டப் படுகிறாளே! "வஞ்சகி" என்றெல்லாம் அவளைச் சமணத்தில் யாரும் திட்டவில்லையே! கற்புள்ள, அளவிலா அன்புள்ளவளாகத் தானே சொல்லப்படுகிறாள்! கணவனிடம் நியாயம் கேட்கத் துடிப்பதாகத் தானே வருகிறது?

    ReplyDelete
  15. இது முதலில் நீங்க சொன்னது!
    //அன்று, அன்பு குடிகொண்ட பெண்ணின் நெஞ்சில்
    இன்று, பழி குடி கொண்டது!


    அட! இதுவும் இப்ப நீங்க சொன்னதுதான்!
    //பேயாய்த் திரிந்து, பழி வாங்கத் துடிக்கிறாள்!
    கணவனைக் "கொல்ல" வரவில்லை!
    கணவனிடம் "நியாயம் கேட்கவே" வந்தாள்!//

    முருகனின் கருணையை, நீலித்தனத்தையும் ஒன்றாகப் பார்க்கும் முன், மேலே சொன்னதுல எது சரின்னு முடிவு பண்ணிட்டு வாங்க ரவி!:)))

    ReplyDelete
  16. அடடா, SK ஐயா கூட கலந்துரையாடல் செஞ்சி எம்புட்டு நாளாச்சி? இதோ எறங்கிடலாம்! :))

    //இது முதலில் நீங்க சொன்னது!
    **அன்று, அன்பு குடிகொண்ட பெண்ணின் நெஞ்சில்
    இன்று, பழி குடி கொண்டது!**//

    உண்மை தான் SK! பழி குடி கொண்டதால் தானே, "நியாயம் கேட்க" வந்தாள்-ன்னும் சொன்னேன்! பூர்வ ஜன்ம அன்பு பாராட்ட வந்தாள்-ன்னு நான் சொல்லலையே!

    * பழி குடி கொண்டதால் தான், நியாயம் கேட்க வந்தாள்!
    * நியாயம் கேட்டாள்!
    * கிடைக்கவில்லை! தன் முனைப்பிலேயே இருந்தான்!
    * பேயறைந்தாள்!
    * பேயறைந்த பயத்தில் மாண்டான்!
    * தன்னுடனேயே சேர்த்துக் கொண்டாள்!

    //முருகனின் கருணையை, நீலித்தனத்தையும் ஒன்றாகப் பார்க்கும் முன்//

    என் ஆசை முருகனின் கருணை தனிப்பெருங் கருணை!
    நீங்கள் இவளைக் குறிப்பிடுவதோ "நீலித்தனம்"!

    இவளை முன்னிட்டு, "நீலித்தனம்/நீலிக் கண்ணீர்" என்ற ஒரு சொற்றொடரே உருவாக்கி விட்டதே சமூகம்! அதுவும் வாழ்விழந்த ஒரு அபலைப் பெண்ணுக்கு! அது தான் வேதனை! :(

    ஒரு சில கிராமங்களில் இன்றும் நீலியை அம்மனாகவே பாவித்து வழிபடுகிறார்கள்! அம்மனின் கண்ணீர் பசப்பும் அல்ல! "நீலிக்" கண்ணீரும் அல்ல!

    ReplyDelete
  17. சில கிராமங்களில் மட்டும் அல்ல, கருணை கூர் சமண சமயத்திலும், நீலி அபலையாகவே சொல்லப் படுகிறாள்! நீலியின் வாழ்வைப் பற்றி இரத்தன கரண்டகம் என்ற சமண நூல் அபலையாகவே பேசுகிறது!

    பின்னாளில் தான், ஒரு அபலையின் கண்ணீரை, "நீலிக் கண்ணீர்" என்று மாற்றி விட்டது சமூகம் - அவள் நியாயம் கேட்ட ஒரே காரணத்துக்காக!

    அதைத் தான் "சமூக வழக்கில்" உள்ளபடியே, சம்பந்தப் பெருமானும், பின்னர் சேக்கிழார் சுவாமிகளும், சமூக வழக்காகவே பாடி விட்டனர் என்றேன்! மற்றபடி அவர்களைக் குறையாக ஏதும் சொல்லவில்லை!

    நீலி அபலையே!
    வாழ்வைத் தொலைத்து நிற்கும் அபலையானவர்களுக்கு, நீலி அபலை என்பதும் புரியும்! அவள் So Called "நீலி"க் கண்ணீரும் புரியும்!

    ReplyDelete
  18. அட்ட்பன்களே நீலி என்பது தச மஹா வித்யையின் இரண்டாம் நிலை தாரா!!!

    ReplyDelete
  19. வணக்கம், நாட்டார் தெய்வங்களின் வரலாறு குறித்து முழு தகவல்கள் உள்ள நூல்களை google'ல் எவ்வளவு முயன்றும் கண்டறிய முடியவில்லை. தேடி தேடி வாங்கிய சில நூல்களிலும் ஒரு கொசுறு செய்தியாகவே தகவல்கள் உள்ளது. நாட்டார் தெய்வங்கள் மற்றும் நாட்டார் தெய்வ வழிபாடு குறித்த நூல்களை பரிந்துரைத்தால் சிறந்த உதவியாய் இருக்கும்.
    குறிப்பாக சீலைக்காரி அம்மன், சோணை/சமயன் வரலாறு குறித்த தகவல்கள் உள்ள நூல்கள், இத்தெய்வங்களை செய்த தியாகங்களுக்காக வணங்குகிறோமா இல்லை சாதிய அடக்குமுறைகளால் இறந்தவர்களை பயத்தின் காரணமாய் நாங்கள் வணங்குகிறோமா என்கிற சந்தேகம் தான், இந்த கேள்விக்கான காரணம்.

    ReplyDelete
  20. வணக்கம், நாட்டார் தெய்வங்களின் வரலாறு குறித்து முழு தகவல்கள் உள்ள நூல்களை google'ல் எவ்வளவு முயன்றும் கண்டறிய முடியவில்லை. தேடி தேடி வாங்கிய சில நூல்களிலும் ஒரு கொசுறு செய்தியாகவே தகவல்கள் உள்ளது. நாட்டார் தெய்வங்கள் மற்றும் நாட்டார் தெய்வ வழிபாடு குறித்த நூல்களை பரிந்துரைத்தால் சிறந்த உதவியாய் இருக்கும்.
    குறிப்பாக சீலைக்காரி அம்மன், சோணை/சமயன் வரலாறு குறித்த தகவல்கள் உள்ள நூல்கள், இத்தெய்வங்களை செய்த தியாகங்களுக்காக வணங்குகிறோமா இல்லை சாதிய அடக்குமுறைகளால் இறந்தவர்களை பயத்தின் காரணமாய் நாங்கள் வணங்குகிறோமா என்கிற சந்தேகம் தான், இந்த கேள்விக்கான காரணம்.

    ReplyDelete