Monday, November 8, 2010

நெஞ்சில் நிறைந்தவள் - 2

சென்ற பதிவில் இட்ட பாடலின் நிறைவுப் பகுதி இது.




பகுதி-2

இதயத்தில் இருப்பவள் இயக்கத்தை அளிப்பவள் இமயத்தில் உறைகின்ற உமையவளே
உதயத்தைப் போலவே உள்ளத்தில் ஜொலிப்பவள் ஓம்எனும் பிரணவத்தை ஆள்பவளே
சதமென பதங்களை பற்றிய பேருக்கு இதமுடன் இன்னல்கள் தீர்ப்பவளே
விதவித மாகவே துதிட்ட போதிலும் வேற்று மைகள்இன்றி காப்பவளே! (6)

வான்முதல் வளியவள் தேனினும் இனியவள் வணங்கிடும் அடியவர்க் கெளியவளே
வானவர் வணங்கிட தானவர் பணிந்திட மாதவர் போற்றிட திகழ்பவளே
கானத்தில் கரைபவள் ஞானத்தில் ஒளிர்பவள் மோனத்தில் உறைபவன் மனையவளே
நான்முகன் முதலிய மூவரும் துதித்திட ஐந்தொழில் புரிந்தெம்மை காப்பவளே! (7)

கலைகளின் தாயவள் எழில்வடி வானவள் மலையர சன்மகளும் அவளே
வலையென பின்னிடும் வினைகளை களைந்திட மலையென உடன்துணை இருப்பவளே
அலைந்திடும் மனமதை அசைவற்று நிறுத்திட அருளிடு அன்பினில் சிறந்தவளே
கலங்கிடும் அறிவினை தெளிந்திட வைத்தெம்மை அருமையுடன் தினம் காப்பவளே! (8)

சடைமுடி தரித்தவன் விடைதனில் இருப்பவன் இடமதை வரித்திட்ட உமையவளே
மடையென பெருகிடும் வினைகளை அழித்திட கொடையென பொழிந்தருள் புரிபவளே
படையென பல்திசை பயணிக்கும் புலன்களை அடக்கிட உதவிடும் அருள்மகளே
கடையவ னாயினும் கருணை மிகுந்திட கனிவுட னேவந்து காப்பவளே! (9)

நாயகியாய் நல் நவமணியாய் எழில் நான்முகியாய் திகழ் நாரணியே
காயமிதில் உயிர் காயும்முன்னே வந்து மாயங்கள் களைந்திடு மாதவியே
பாய்கின்ற நதியென ஓடிவந்து எமை பரிவுடன் காத்திடு பரிபுரையே
தாயுன்றன் அடிகளை சரண்புகுந்தோம் எமை ஆதரித் தருள்புரி திரிபுரையே! (10)

--கவிநயா

2 comments:

  1. அருமையான பதிவு..நெஞ்சில் வைக்க வேண்டிய பாடல்

    ReplyDelete
  2. //அருமையான பதிவு..நெஞ்சில் வைக்க வேண்டிய பாடல்//

    மிக்க நன்றி சதீஷ்குமார்.

    ReplyDelete