200-வது பதிவிற்காக 'அயிகிரி நந்தினி' மெட்டில் 5 பத்திகள் கொண்ட பாடல் ஒன்று எழுதினேன்; அதிலிருந்து 2 எடுத்து பயன்படுத்தினோம். சரியாக நிறைவடையாதது போல் தோன்றியதால், 5 ஆக இருந்தது பிறகு 10 ஆகி விட்டது. அதனை இரண்டு பகுதிகளாக இடுகிறேன்...
பகுதி-1
நெஞ்சில் நிறைந்தவள் நினைவில் உறைபவள் எங்கள் இறையவள் சக்தியளே!
பஞ்சினும் மெல்லிய பாதங்கள் உடையவள் அஞ்சிடும் நெஞ்சிற்கு துணையவளே!
சிந்தையில் நின்றவள் விந்தை மிகுந்தவள் எந்தையுடன் மகிழ்ந் தருள்பவளே!
மந்தையென வரும் துன்பங்கள் தீர்ப்பவள் சொந்தமென எமைக் காப்பவளே! (1)
அன்னையவள் இளங் கன்னியவள் எழு உலகையும் ஆள்கின்ற அரசியளே!
முன்னையவள் முதல் முடிவுமவள் எமை கண்ணெனக் காக்கின்ற பெண்ணவளே!
விண்ணுமவள் இந்த மண்ணுமவள் தன்னை உன்னுபவர்க் கருள் புரிபவளே!
கண்ணுமவள் கனி யமுதுமவள் இந்த மன்னுயிர் தனதென காப்பவளே! (2)
கண்ணுதலான் ஒரு பாதியவள் கறைக் கண்டனைக் காத்திட்ட தேவியளே!
விண்ணுறை தேவரும் மண்ணுறை மாந்தரும் பொன்னென போற்றிடும் பூவையளே!
கண்டென இனித்திடும் கன்னலவள் எழிற் செண்டென சிரித்திடும் செவ்வியளே!
உண்டென உணர்ந்துன்னை அண்டிய தொண்டரை அன்புடன் தாயென காப்பவளே! (3)
கொன்றை யணிந்தவன் மேனி பகிர்ந்தவள் பங்கய கண்ணனின் தங்கையளே!
குன்றில் அமர்ந்தவன் கோலஎழில் குகன் வென்றிட வேல் தன்னைத் தந்தவளே!
மன்றினில் ஆடிடும் செஞ்சடை யோனுடன் கொஞ்சி மகிழ்ந்திடும் கோமகளே!
கன்றதன் குரலினில் குழைந்திடும் ஆவென ஓடி உடன்வந்து காப்பவளே! (4)
மலையென நின்றவன் மங்கையவள் அவன் மனதினைக் கவர்ந்திட்ட நங்கையளே!
சிலையினை அங்கையில் ஏந்தியவள் எழிற் சிலையென விளங்கிடும் மலைமகளே!
கலையினை திருமுடி சூடியவள் சிலம் பொலித்திட திருநடம் புரிபவளே!
நிலையற்ற வாழ்விதன் நிலையினை உணர்த்தி நிகரற்ற நேசத்தால் காப்பவளே! (5)
--கவிநயா
ஒவ்வொரு வரியும் அருமை அக்கா.
ReplyDelete//ஒவ்வொரு வரியும் அருமை அக்கா.//
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி குமரா :) நன்றி.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் வலைப்பதிவு படிக்கும் அத்தனை
ReplyDeleteபேருக்கும் சுப்பு ரத்தினத்தின் அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்.
சுப்பு ரத்தினம்.
simply superb your rhytmic style in composing this song
வாழ்த்துகளுக்கு நன்றி தாத்தா.
ReplyDeleteபாடலை ரசித்தமைக்கும் நன்றிகள் :)
பகுதி2 வேண்டும் சகோதரி
ReplyDelete