Monday, January 30, 2012

திக் விஜயம்


திக்குகள் எட்டும் நடுநடுங்க
திசைகள் யாவும் கிடுகிடுங்க
தேவதை யொருத்தி தேரில் ஏறி
திக் விஜயம் செய்யப் போகின்றாள்!

தகதக வென்றே ஜொலிக்கின்றாள்
பகலவ னைத்தோற் கடிக்கின்றாள்!
மாநில மெல்லாம் மதுரை ஆக்க
மதுரா புரியாள் துடிக்கின்றாள்!

மன்னவ ரெல்லாம் மண்டியிட்டார்
தென்னவள் மீனாள் காலடியில்!
சரணம் சரணம் எனப் பணிந்தார்
கருணைக் கடலின் காலடியில்!

வீரத்தின் தாகம் தணியவில்லை;
வெற்றிகள் பெற்றது பற்றவில்லை!
பற்றிய வாளைச் சுழற்றிக் கொண்டு
சிற்றிடை மீனாள் செல்கின்றாள்!

நான்முகன் நங்கையைப் பணிந்து விட்டான்!
நாரணன் தங்கையை வணங்கி விட்டான்!
கயிலை மலைக்கு வலையை வீசிட
மயிலன்ன மாதங்கி போகின்றாள்!

நற்சிவ கணங்கள் தோற்றோட
நந்தியும் களைத்தே பின்வாங்க
பொற்சிலம் பொலிக்க சிற்சபை ஆடும்
பொன்னம் பலத்தான் வந்து விட்டான்!

உலகில் அழகன் இவன் தானோ
உமையவள் மயங்கும் சிவன் தானோ!
இதயம் தொலைத்த மீனாளும்
இமைக்க மறந்து பார்த்து நின்றாள்!

உடலே வேறாய் ஆனதுவோ
உயிரே அவனிடம் போனதுவோ!
உள்ளம் இரண்டும் இடம் மாற
உறைந்தாள் மீனாள் அக்கணத்தில்!

போரை மறந்தாள் வாள் மறந்தாள்
தொடுத்த அம்பினை விடுக்க மறந்தாள்!
காதல் கனிய கசிந்து நின்றாள்
காதலனும் நிலை புரிந்து கொண்டான்!

சக்தியும் சிவமும் சேர்ந்திடவே
சகல உலகமும் மகிழ்ந்திடவே
மதுரை வருவேன் மணப்பேன் என்றே
மதுர மொழிகள் கூறினனே!




--கவிநயா

படம் இங்கே இருந்து: http://maduraiyampathi.blogspot.com/2010_04_01_archive.html. நன்றி மௌலி.

12 comments:

  1. ஒருமாதம் முன் 'வாழிய..' வில்"செல்லக்குட்டி,வெல்லக் கட்டி"யாய்த் திருக்காட்சியளித்த மீனாள், இன்று வீராங்கனையாய் வளர்ந்து வெற்றிக்கொடி ஏந்தி ,
    கயிலாயரைக்கண்டதும் காதல்கொடியாய் அவரைச் சுற்றி கொள்ளும்திருக்காட்சி "வா .....வ்"!அடுத்த காட்சி டும் டும்?நினைத்தாலே ஆனந்தமா இருக்கு!

    ReplyDelete
  2. அன்னை மீனாளின் கதையை
    இத்தனை அழகான
    கவிதையாய் காட்சியாய்
    கொடுத்தமைக்கு தாம்
    வேண்டிய அனைத்தும்
    கவிநயாவுக்கு தந்தருள
    அன்னை மீனாளை வேண்டுகிறேன்

    ReplyDelete
  3. //உலகில் அழகன் இவன் தானோ
    உமையவள் மயங்கும் சிவன் தானோ!
    இதயம் தொலைத்த மீனாளும்
    இமைக்க மறந்து பார்த்து நின்றாள்//

    காத்தால வந்தவுடனே சிற்றிடை மீனாள் தரிசனமும் திக்விஜயமும் சொன்ன கவினயா அக்காவுக்கு ஒரு கோடி நன்றிகள்! :-)

    ReplyDelete
  4. நற்சிவ கணங்கள் தோற்றோட
    நந்தியும் களைத்தே பின்வாங்க
    பொற்சிலம் பொலிக்க சிற்சபை ஆடும்
    பொன்னம் பலத்தான் வந்து விட்டான்!//

    அற்புத தரிசனம் கொடுத்துவிட்டீர்கள். மீனாக்ஷி திக்விஜயமும் மதுரைச் சின்னக்கடையில் பூவியாபாரிகளால் அமைக்கப்பட்ட பூப்பந்தலில் நாலுபுறமும் தேவதைகளைப் போல் அமைக்கப்பட்ட பொம்மைகள் பூக்கொட்ட,திக் விஜயம் நடக்கும் காட்சி கண் முன்னே விரிந்தது. அதெல்லாம் பொற்காலம். :(

    ReplyDelete
  5. அட? போன பாடலில் குழந்தையாய் இருந்த மீனாக்ஷிக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதா? அதைக் கவனிக்கவே இல்லை நான். :)))) அடுத்து மீனாக்ஷியின் கல்யாண விபரங்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. //இன்று வீராங்கனையாய் வளர்ந்து வெற்றிக்கொடி ஏந்தி ,
    கயிலாயரைக்கண்டதும் காதல்கொடியாய் அவரைச் சுற்றி கொள்ளும்திருக்காட்சி "வா .....வ்"!//

    'வா...வ்' க்கு நன்றி லலிதாம்மா :)

    //அடுத்த காட்சி டும் டும்?நினைத்தாலே ஆனந்தமா இருக்கு!//

    எனக்கும்! ஆனா அவ மண்டபத்துல வந்து என்றைக்கு தராளோ?

    ReplyDelete
  7. //தாம்
    வேண்டிய அனைத்தும்
    கவிநயாவுக்கு தந்தருள
    அன்னை மீனாளை வேண்டுகிறேன்//

    ஆசிகளுக்கு மிக்க நன்றி. ஏன்னா, எனக்கு அவள்தான் வேணும் :)

    மீனாக்ஷி மேல பாட்டு எழுதச் சொல்லி என்னைத் தூண்டியமைக்கு உங்களுக்குதான் நன்றி திவாகர் ஜி. நீங்க சொன்ன பிறகும் ரொம்ப நாள் ஒண்ணுமே தோணலை. அப்புறம் திடீர்னு ஒரு நாள் கிடுகிடுன்னு எழுத வச்சுட்டா.

    ReplyDelete
  8. //காத்தால வந்தவுடனே சிற்றிடை மீனாள் தரிசனமும் திக்விஜயமும் சொன்ன கவினயா அக்காவுக்கு ஒரு கோடி நன்றிகள்! :-)//

    சொன்னதும் வந்து வாசிச்சதுக்கு தக்குடு கோந்தைக்கும் ஒரு கோடி நன்றிகள் :)

    ReplyDelete
  9. //அற்புத தரிசனம் கொடுத்துவிட்டீர்கள். மீனாக்ஷி திக்விஜயமும் மதுரைச் சின்னக்கடையில் பூவியாபாரிகளால் அமைக்கப்பட்ட பூப்பந்தலில் நாலுபுறமும் தேவதைகளைப் போல் அமைக்கப்பட்ட பொம்மைகள் பூக்கொட்ட,திக் விஜயம் நடக்கும் காட்சி கண் முன்னே விரிந்தது. அதெல்லாம் பொற்காலம். :(//

    மதுரைக்காரங்களே சொன்னா தனி மகிழ்ச்சிதான் :) நன்றி கீதாம்மா. ஆனா நீங்க சொன்ன காட்சியை நான் பார்த்ததில்லை :( அதை எப்ப பார்க்கலாம்?

    ReplyDelete
  10. //அட? போன பாடலில் குழந்தையாய் இருந்த மீனாக்ஷிக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிவிட்டதா? அதைக் கவனிக்கவே இல்லை நான். :)))) அடுத்து மீனாக்ஷியின் கல்யாண விபரங்களை எதிர்பார்க்கிறேன்.//

    :) அது சரி... நானும் அவளிடம் சொல்லி வச்சிருக்கேன்... :)

    ReplyDelete
  11. சித்திரைத் திருநாளில் மேலமாசி வீதி சின்னக்கடைச் சந்திப்பில் முன்னால் நடந்து கொண்டிருந்தது. இப்போதும் திருவீதி உலா இருக்கும். ஆனால் இப்போ அங்கே கடைகள் இருக்கின்றனவா என்றோ அல்லது இந்தக் குறிப்பிட்ட இடத்தில் முன்போல் பந்தல் போட்டு நாலு பக்கமும் தேவதை பொம்மைகள் வைக்கிறார்களா என்பதோ தெரியாது. :(((( எங்க சொந்தக்காரங்க கிட்டே கேட்டுச் சொல்றேன். இந்த வருஷம் சித்திரைத் திருநாளுக்கு மதுரையில் இருங்க. இருந்து பாருங்க.

    ReplyDelete
  12. தகவலுக்கு நன்றி அம்மா. சித்திரையில் ஊருக்கு போகிறேன், ஆனால் திருவிழா சமயத்தில் மதுரைக்கு போவேனா என்று தெரியவில்லை. அவள் திருவுளப்படி...

    ReplyDelete