Monday, February 13, 2012

டும்! டும்! டும்!


சுப்பு தாத்தா அருமையாகப் பாடியது இங்கே. மிக்க நன்றி தாத்தா!

கயிலாய நாதனுக்கு கல்யாணமாம்
கயிலாய மலையெங்கும் கொண்டாட்டமாம்
எயிலெ ல்லாம் நீறாக முறுவலித்த சிவனுக்கு,
அயி லேந்தும் அரனுக்கு கல்யாணமாம்!

நந்திதேவர் மேளங் கொட்டிச் சொல்ல
நாரதர் கீதத்தில் சேதி சொல்ல
வாயுதேவன் தென்றல் வீசிச் சொல்ல
வானவர் எல்லோரும் கூடினராம்!

தடாதகைப் பிராட்டிக்கு கல்யாணமாம்
தரணியில் எங்கெங்கும் கொண்டாட்டமாம்
திக்குகள் அத்தனையும் தனியளாய் வென்றிட்ட
தென்னவளாம் தேவிக்கு கல்யாணமாம்!

மதுரையில் எங்கிலும் முரசொலிக்க, அது
மாநில மெங்கிலும் எதிரொலிக்க
மாந்தரின் மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க
மாமன்ன ரெல்லோரும் கூடினராம்!

தனபதியே முன்நின்று அலங்காரம் செய்ய
செஞ்சடையோன் சிரசினிலே வைரமுடி துலங்க
வெண்ணீற்று மேனியிலே பொன்னணிகள் மினுங்க
விரிந்ததிரு மார்பினிலே முப்புரிநூல் விளங்க!

அரவங்கள் யாவும்நவ ரத்தினங்க ளாக
இடைகொண்ட புலித்தோலும் பட்டாடையாக
எரிக்கின்ற விழிகூட அருட்புனலாய் மாற
வருகின்றான் எந்தை எழில் மாப்பிள்ளையாக!

மீனாளின் முடிமீதில் மணிக்கிரீடம் ஒளிர
தேனான இதழ்மீதில் பனிமுறுவல் தவழ
காடன்ன கருங்கூந்தல் கால்தொட்டு புரள
காற்றன்ன மெல்லிடையை செம்பட்டு தழுவ!

முத்துமணி ஆரங்கள் மார்மீது தவழ
சுற்றிவரும் வண்டுகள்போல் கருவிழிகள் சுழல
கைவளைகள் கலகலத்துக் கத்திக்கதை பேச
பைங்கிளியாம் எந்தாயும் நிலம்பார்த்து வந்தாள்!

வானவில் தான்வந்து தோரணங்கள் அமைக்க
வண்ண எழிற் கோலங்கள் வீதிஅலங் கரிக்க
உற்சவக் காலம்போல் ஊரெல்லாம் சிறக்க
நற்சுவைப் பண்டங்கள் நகரெல்லாம் மணக்க!

மத்தள மேளங்கள் கொட்டியே முழங்க
வித்தகரின் வாத்யங்கள் திசையெல்லாம் தழங்க
கந்தர்வ கானங்கள் மழையாகப் பொழிய
கன்னியரின் நடனங்கள் விருந்தினரைக் கவர!

நாமகளும் பூமகளும் தோழியராய் இருக்க
நான்முகனும் நான்மறையை நலமுடனே ஒலிக்க
நாரணனும் தங்கையவள் கரம்பிடித்துக் கொடுக்க
நல்லுலகம் போற்றிடவே சிவசக்தி சேர!

அழகுக்கே இலக்கணமாய் மணமக்கள் ஜொலிக்க
அன்பிற்கே இலக்கணமாய் உலகிற்கருள் கொடுக்க
அருகருகே வீற்றிருந்து காதலிலே களிக்க
அன்னவரின் பொற்பதங்கள் பணிந்தேற்றி மகிழ்வோம்!


--கவிநயா

13 comments:

  1. இளங்காலையில் ஈஸ்வரி கல்யாண தரிசனம் இனிய அனுபவம் !


    "கெளரி கல்யா...ணம் வைபோகமே ...!


    மீனாள் கல்யா...ணம் ஆனந்தமே .......!"


    என்று பாடுகையில் ஆனந்தக்கண்ணீர்தான் !


    இதோ என் மங்களாரத்தி:




    "திங்கள்தங்கும் முடியோன் மனைவிக்கு மங்களம்.

    கங்கைதாங்கும் தலையான் துணைவிக்கு மங்களம்.

    சங்கரனிடமுரையும் மங்கைக்கு மங்களம்.

    அங்கயற்கண்ணியாம் அம்பிகைக்கு மங்களம் .


    பாம்பணியும் பரமன் பத்தினிக்கு மங்களம்.

    சாம்பவிக்கு, பராசக்திக்கு மங்களம்.

    மாமதுரை மேவும் தெய்வ தம்பதிக்கு மங்களம்.

    மீனாட்சி சுந்தரேசன் தம்பதிக்கு மங்களம்."

    ReplyDelete
  2. கல்யாணமாம், கல்யாணம், மீனாக்ஷியின் கல்யாணம்.

    ReplyDelete
  3. வாங்க லலிதாம்மா! வெகு அழகாக, பொருத்தமாக, மங்களாரத்தி செய்தமைக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  4. //ஆஹா!!!!//

    வாங்க திவாகர் ஜி! அம்புட்டுதானா? :)

    ReplyDelete
  5. //கல்யாணமாம், கல்யாணம், மீனாக்ஷியின் கல்யாணம்.//

    வாங்க கீதாம்மா! யூ டூ அம்மா? :)

    ReplyDelete
  6. vasantha navarathiri : Pl. go to this link to view refreshed matter :

    http://natarajadeekshidhar.blogspot.in/2010/03/blog-post_09.html

    ReplyDelete
  7. பேஷ், பேஷ்....பாடலும், சுப்புரத்னம் சார் பாட்டும் வெகு ஜோர்.

    ReplyDelete
  8. Alagaana varnanai.Arputhamaana vaarthaigal.MeenakshiChokkanaathar Arul ellorukkum kidaikkattum>
    Natarajan.

    ReplyDelete
  9. //N.D. NATARAJA DEEKSHIDHAR said...

    http://natarajadeekshidhar.blogspot.in/2010/03/blog-post_09.html//

    அம்மன் பாட்டு வலைத்தளத்துக்கு வருகை தந்தமைக்கும், வசந்த நவராத்திரி தகவல்களுக்கும் மிக நன்றி.

    ReplyDelete
  10. //பேஷ், பேஷ்....பாடலும், சுப்புரத்னம் சார் பாட்டும் வெகு ஜோர்.//

    நன்றி மௌலி :)

    ReplyDelete
  11. //Alagaana varnanai.Arputhamaana vaarthaigal.MeenakshiChokkanaathar Arul ellorukkum kidaikkattum>
    Natarajan.//

    மிக்க நன்றி :)

    ReplyDelete