Thursday, October 3, 2013

" நவமியில் அருளுவள்."

அனைவருக்கும் இனிய நவராத்திரி நல் வாழ்த்துகள்!

கீழே உள்ள பாடல், நவராத்திரிக்கெனெ VSK என்னும் திரு.டாக்டர்.சங்கர்குமார் அவர்கள் எழுதித் தந்தது. நன்றி அண்ணா.


நவமிவள் நலமிவள் நமக்கென வருபவள்
தவமிவள் தலமிவள் தனக்கிணை இலதிவள்
பவமிவள் பரமிவள் பரமனின் இடமிவள்
சிவமிவள் சுகமிவள் நவமியில் அருளுவள். 1

அருளிவள் அழகிவள் அகமிவள் அமிழ்திவள்
திருவிவள்  துணிவிவள் திறமிவள் திட‌மிவள்
கருவிவள் கதியிவள் கருத்தினில் உறைபவள்
குருவிவள் குலமிவள் நவமியில் அருளுவள். 2

மனமிவள் மகிழ்விவள் மலரிவள்  மறையிவள்
தனமிவள் துணையிவள் துயரிவள் களைபவள்
நனவிவள் நினைவிவள் நிகழ்விவள் நிலமிவள்
எனதிவள் எழிலிவள் நவமியில் அருளுவள். 3

உருவிவள் உலகிவள் உயர்விவள் உயிரிவள்
பெருவிவள் பெயரிலள் பெரிதினும் பெரியவள்
மருவிவள் மதியிவள் முகிழ்விவள்  மிகையி
ள்
இருளிவள் பகலிவள் நவமியில் அருளுவள். 4

முதலிவள் முடிவிவள் முதலெழுத் தானவள்
பதமிவள் புதியவள் பொலிவிவள் புகழிவள்
இதமிவள் இனியவள் இசையிவள்
இசைவிவள்
சதமிவள் துதியிவள் நவமியில் அருளுவள். 5

செயலிவள் செகமிவள் செயமிவள் சுயமிவள்
தயவிவள் தகவிவ‌ள் திசையிவள் தெரிவிலள்
பயமிவள் தீர்ப்பவள் பலமிவள் தருபவள்
அயமிவள் அசைவிவள் நவமியில் அருளுவள்  . 6

குணமிவள் குறைவிலள் களியிவள் கருத்திவள்
உணவிவள் உடையிவள் உரமிவள் உணர்விவள்
மணமிவள் மலைமகள் மல‌ரினும் மெலியவள்
கணமிவள் கனியிவள் நவமியில் அருளுவள். 7

வேரிவள் வலியிவள் வகையிவள் வழியிவள்
தேரிவள் ஏறுவள் சூரிவள் அழிப்பவள்
கூரிவள் தாங்குவள் பாரிவள் காப்பவள்
போரிவள் வெல்பவள் நவமியில் அருளுவள். 8

ஒன்றிவள் இரண்டிவள் மூன்றிவள் மலைமகள்
நான்கிவள் ஐந்திவள் ஆறிவள் அலைமகள்
ஏழிவள் எட்டிவள் நவமிவள் துர்க்கையள்
ஊழிவள் உமையவள் உருவினள் லலிதையள். 9


வானிவள் மழையிவள் பொழிவதில் மகிழ்பவள்
தானிவள் தருபவள் தருவதில் மகிழ்பவள்
நானிவள் பதமலர்ப் பணிந்திட மகிழ்பவள்
காணிவள் சீரெலாம் கூறுதற் கரியதே!  10.


ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நம:

வாழ்க சீரடியாரெல்லாம்.
முருகனருள் முன்னிற்கும்.


மிகை, v. n. & s. abundance
தகவு
(p. 471) [ takavu ] , v. n. (from தகு), fitness, தகுதி.
அயம் (p. 25) [ ayam ] {*},  festival; & good luck, favourable, fortune caused by deeds in former births, நல்வினை.

5 comments:

  1. அருமை...

    திரு.டாக்டர்.சங்கர்குமார் அவர்களுக்கும் நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அற்புதம்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. மிகவும் அற்புதமாக இருக்கிறது கவிதை.

    இது தன்யாசி ராகத்துக்கென்றே இயற்றப்பட்டதோ என நினைக்கிறேன்.

    பாடி இருக்கிறேன். விரைவில் லிங்க் அனுப்புகிறேன்.

    டாக்டர ஷங்கர் அவர்களுக்கு என் ஆசிகளைச் சொல்வதுடன்
    அவரை அடிக்கடி இது போன்ற ஆன்மீக கவிதைகளை எழுதச் சொல்லுங்கள்>

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  4. பாடலைப் பாராட்டி ஆசியளித்த அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.

    சுப்புத் தாத்தா அவர்கள் பாடியனுப்புவதாகச் சொல்லியிருந்தாரே?:)

    ReplyDelete
  5. இப்போதுதான் நிதானமாக வாசித்தேன். மிகவும் அருமை. நன்றி அண்ணா. நவமியில் அருளுவளின் திருப்பதங்கள் சரணம்.

    ReplyDelete