Monday, October 21, 2013

குமரியம்மா!

சுப்பு தாத்தா காம்போதியில் உருகியிருப்பதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா.



சிற்றாடைப் பெண்ணாகச் சிரித்தபடி காத்திருக்கும்
சிங்காரச் சீமாட்டியே!
வற்றாத அருட்பாவை வாஞ்சைமிகு கன்னியுன்னை
வாழ்த்த வந்தேன் பாராட்டியே!

தவக்கோலம் கொண்டிங்கு சிவனுக்காய்க் காத்திருக்கும்
எழிற்கோலச் செல்லப் பெண்ணே!
விழிக்கோலம் கண்டபின்னே வேதனைகள் ஏதிங்கு
களிக்கோலக் கன்னிப் பெண்ணே!

வண்டாடும் விழியிரண்டும் வாசல்தனைப் பார்த்தபடி
அரன்வரவைப் பார்த்திருக்கும்!
கொண்டாடும் பக்தரையோ கோதையுன்றன் விழியிரண்டும்
கருணையுடன் காத்திருக்கும்!

முத்தான மூக்கினிலே மின்னுகின்ற மூக்குத்தி
பித்தனுக்கு வழி காட்டவோ?
சக்தியுன்றன் கரங்களிலே தவழுகின்ற ஜபமாலை
பக்தருக்கு வழி காட்டவோ?

காலங்கள் சென்றாலும் சிவனேதான் சதமென்று
காத்திருக்கும் கன்னி மயிலே!
கோலமயில் உன்னுறுதி எனக்கும் வரவேணுமடி
கருணைசெய்வாய் வஞ்சி எழிலே!

உன்பதமே சதமென்று உன்னடிகள் பற்றிவிட்டேன்
எனைக் காக்க வேணுமம்மா!
உறுத்துவரும் வினைகளெனைத் துரத்திவந்து எரித்தாலும்
புகல் நீயே தரணுமம்மா!


--கவிநயா 


படத்துக்கு நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Devi_Kanya_Kumari.jpg

4 comments:

  1. அருமை... அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அருமையான பாடல் வரிகள் தோழி உங்கள் இருவருக்கும் என்
    மனமார்ந்த நன்றி கலந்த வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்பாளடியாள்!

      Delete