Monday, July 28, 2014

அம்பிகையே வா!

உச்சந் தலையில் பாதம் பதிக்க உத்தமியே நீ வாவா
அச்சம் விலக்கி அபயம் அளிக்க அம்பிகையே நீ வாவா
சித்தம் நிறைத்த பித்தன் மனையே சீக்கிரமாய் நீ வாவா
பித்துப் பிடித்துப் பாடும் இந்தப் பேதைக்காக வாவா!

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார் அறியாயோ?
குற்றம் பார்க்கும் அன்னை நீயாய் இருந்தால் சரியாமோ?
சுற்றிச் சுற்றி வரும்பிள்ளை, எனைச் சற்றே பாராயோ?
கற்றுக் கொண்டேன் பாடங்கள், அதைக் காதால் கேளாயோ?

உன்னைத் தவிர எந்தன் நினைவில் ஒன்றும் இல்லையடி
உன்னை மறந்தால் எந்தன் வாழ்வும் தருமே தொல்லையடி
பந்தம் நீக்கிப் பாசம் நீக்கி உன்னைப் பார்க்கின்றேன், நீ
என்னைப் பார்க்கத் தாமதம் ஏனோ என்றே திகைக்கின்றேன்!


--கவிநயா

No comments:

Post a Comment