Monday, October 27, 2014
ஸ்ரீ சக்ர நாயகி
சுப்பு தாத்தா மத்யமாவதி ராகத்தில் ரசித்துப் பாடியிருப்பது இங்கே.... மிக்க நன்றி தாத்தா!
திருமீயச் சூரினிலே
திருக்கொலு விருப்பவளே
திருமுக தரிசனம் தாராயோ?
கருவிழியால் என்னைப் பாராயோ?
(திருமீயச்சூரினிலே)
ஸ்ரீசக்ர பீடத்தில்
அருளாட்சி செய்பவளே, என்
அகச் சக்கரம் அமர்ந்து
அருள வேண்டும் நாயகியே
அகத்திய முனிவருக்கு
அன்பு செய்த அம்பிகையே, என்
அகத்தினில் வந்தென்னை
ஆண்டு கொள்வாய் கண்மணியே
(திருமீயச்சூரினிலே)
சுந்தரன் மனங்கவர்ந்த
சௌந்தரியே வருவாய்
மேக நாதன் உடன்
மேதினிக்கு அருள்வாய்
கொலுசுகள் குலுங்கிட
கோமகளே வருவாய்
சிரசினைப் பதம் வைத்தேன்
செஞ்சுடரே அருள்வாய்
(திருமீயச்சூரினிலே)
--கவிநயா
படத்துக்கு நன்றி: தினமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment