Thursday, July 31, 2014

மூன்றாம் ஆடி வெள்ளிக்காக... ஆடித் தபசு

அரியா சிவனா என்ற கேள்விக்கு
அற்புத பதிலளித்தாய்!
ஆதி நாயகியே நீ தவமிருந்து
உலகிற்கு எடுத்துரைத்தாய்!

ஆடி மாதத்தில் அரனை நோக்கியே
அன்னை நீ தவம் புரிந்தாய்!
அரி அரனுடைய இடப் பாகம் கொள்ள
அன்புடன் வேண்டி நின்றாய்!

சங்கரன் மேனியில் உன் சோதரனும்
இடமதைப் பெற்றுக் கொண்டான்!
சங்கர நாராயணன் எனும் பெயருடனே
இருவரும் இணைந்து விட்டார்!

அந்திச் சிவப்புடன் சியாமள நிறமும்
ஒன்றாய் நின்றதுவே!
ஒரு கை மழுவும் மறுகை சங்கும்
தாங்கியே நின்றனவே!

ஜடை முடியுடனே கிரீடமும் முடியில்
காட்சி தந்தனவே!
மூன்றாம் கண்ணும் திரு மண்ணுடனே
நெற்றியில் துலங்கியதே!

புலித் தோலுடனே பட்டுப் பீதாம்பரமும்
இடை அணி செய்தனவே!
ருத்திராட்சத்துடன் துளசி மாலையும்
தோள்களில் தவழ்ந்தனவே!

வாம பாகத்தைப் பெற்றவள் நீயே
விருப்புடன் தியாகம் செய்தாய்!
வாஞ்சை மீறவே நாராயணனுக்கு
நீ அதைத் தந்து விட்டாய்!

அம்மா, உன்னில் பொங்கும் அன்பிற்கு
எல்லை ஏதுமில்லை!
உந்தன் புகழினைப் பாடுவதன்றி
எனக்கும் வேலை இல்லை!


--கவிநயா

படத்துக்கு நன்றி: http://www.sankarankoviltemple.in/arulmigugomathi_english.htm

Monday, July 28, 2014

அம்பிகையே வா!

உச்சந் தலையில் பாதம் பதிக்க உத்தமியே நீ வாவா
அச்சம் விலக்கி அபயம் அளிக்க அம்பிகையே நீ வாவா
சித்தம் நிறைத்த பித்தன் மனையே சீக்கிரமாய் நீ வாவா
பித்துப் பிடித்துப் பாடும் இந்தப் பேதைக்காக வாவா!

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார் அறியாயோ?
குற்றம் பார்க்கும் அன்னை நீயாய் இருந்தால் சரியாமோ?
சுற்றிச் சுற்றி வரும்பிள்ளை, எனைச் சற்றே பாராயோ?
கற்றுக் கொண்டேன் பாடங்கள், அதைக் காதால் கேளாயோ?

உன்னைத் தவிர எந்தன் நினைவில் ஒன்றும் இல்லையடி
உன்னை மறந்தால் எந்தன் வாழ்வும் தருமே தொல்லையடி
பந்தம் நீக்கிப் பாசம் நீக்கி உன்னைப் பார்க்கின்றேன், நீ
என்னைப் பார்க்கத் தாமதம் ஏனோ என்றே திகைக்கின்றேன்!


--கவிநயா

Friday, July 25, 2014

இரண்டாம் ஆடி வெள்ளிக்காக...



ஆடி வெள்ளி நாயகியே
அசைந்து வரும் அம்பிகையே
நாளும் உன்னைப் போற்றுகின்றோம் அம்மா, எம்மை
வாள் விழியால் காத்திடுவாய் அம்மா!

மஞ்சளிலே குளிக்க வைத்து
மல்லிகைப்பூ மாலையிட்டு
செந்தூரத் திலகமிட்டோம் அம்மா, உந்தன்
செவ்விதழ்கள் மலர்ந்திடுவாய் அம்மா!

எலுமிச்சம் பழமெடுத்து
எழிலாகத் தீபமிட்டு
உடலாலும் மனதாலும் அம்மா, நாங்கள்
உன்னை வணங்க வந்தோமே அம்மா!

பச்சரிசி ஊற வைத்து
அச்சு வெல்லம் சேர்த்திடித்து
மாவிளக்கு ஏற்றி வந்தோம் அம்மா, எங்கள்
மாதா உனைப் போற்றிடவே அம்மா!

வரவேண்டும், வந்திருந்து
தரவேண்டும் உனதருளை
கன்றாகக் கெஞ்சுகிறோம் அம்மா, உன்னை
மன்றாடி வேண்டுகிறோம் அம்மா!


--கவிநயா
 

Monday, July 21, 2014

நாள் எதுவோ?



சிந்து பைரவியில் சுப்பு தாத்தா மனமுருகிப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


 
வேல் விழி எனைத் துளைக்க
வேதனை தனைத் தீர்க்க
நாள் படுமோ? என்று துயர் விடுமோ?

பால் முகம் எனைப் பார்க்க
கனி யிதழ் தனை விரிக்க
நாள் படுமோ? என்று நலம் வருமோ?

உன் விழி நினைவாட
என் விழி நீராட
மனம் வருமோ? என்று சுகம் வருமோ?

கனவிலும் வரவில்லை
நனவிலும் நீயில்லை
இரண்டிலும் நீ வரும் நாள் எதுவோ?

ஒரு தலை அன்பிதுவோ
தறுதலைப் பிள்ளைக்கு
ஆறுதலை நீ தரும் நாள் எதுவோ?

கவிதையில் நீயுண்டு
கண்ணீரில் நீயுண்டு
களிப்பென நீ வரும் நாள் எதுவோ?


--கவிநயா

Friday, July 18, 2014

முதல் ஆடி வெள்ளிக்காக...



சுப்பு தாத்தாவிற்கு மிகவும் பிடித்து விட்டது போலும்! இரண்டு விதமாகப் பாடித் தந்திருக்கிறார்... நீங்களுமெ கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!!

http://youtu.be/GSYguhcVDBg
http://youtu.be/cNoR98258O8

ஆடி வெள்ளிக் கிழமையிலே
கூடி உன்னைப் பாடி வந்தோம்
வீடு தேடி வருவாயே மாரியம்மா, எம்மைச்
சாடும் வினை தீர்ப்பாயே மாரியம்மா!

நாடி வரும் பிள்ளைகளை
ஓடி வந்து காப்பவளே
கோடிக் கண்கள் கொண்டவளே மாரியம்மா, உன்னைக்
கொண்டாடிப் பாடி வந்தோம் மாரியம்மா!

கூழு காய்ச்சிக் கொண்டு வந்தோம்
குழைந்து குடிக்க வாடியம்மா
தாழ்ந்து உன்னைப் பணிந்தோமே மாரியம்மா, எம்மை
வாழ வைக்கும் வடிவழகி மாரியாம்மா!

வேப்பிலையில் இருப்பவளே
வேதனைகள் தீர்ப்பவளே
பூமாலை சூடித் தந்தோம் மாரியம்மா, எங்கள்
பாமாலை கேட்டு மகிழ வாடியம்மா!


--கவிநயா

Monday, July 14, 2014

வேண்டாத மனம் வேண்டும்!


ஆஹிரி ராகத்தில் சுப்பு தாத்தா அனுபவித்துப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!!


 
வேண்டாத மனம் வேண்டும் வேண்டுகின்றேன்
தூண்டாமல் ஒளிரும் செஞ்சுடரே! தண்மதியே!
(ஏதும் வேண்டாத)

உன்னை என்றும் மறவாத
உள்ளம் வேண்டும், அது போதும்
(வேறெதும் வேண்டாத)

தோன்றும் பொருளிலெல்லாம்
தோன்றாமலே உறைவாய்
தோன்றாத பொருளினிலும்
தூயவளே நிறைவாய்

வேண்டும் பொழுதிலெல்லாம்
வேண்டாமலே வருவாய்
வேண்டாத போதும் என்னை
ஆண்டு கொண்டு அருள்வாய்!
(வேண்டாத)


--கவிநயா

Monday, July 7, 2014

எவரிடத்தில் சொல்வேன்?



சுப்பு தாத்தாவின் அருமையான இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!!



உன்னிடம் சொல்லாமல்
எவரிடத்தில் சொல்வேன்,
உன்மத்தம் பிடிக்க வைக்கும்
உள்ளத்தின் துயரங்களை?
(உன்னிடம்)

அணு அணுவிலும் இருப்பாய்
அண்டம் பிண்டங்களில் இருப்பாய்
தொழும் அடியவர் மனதில்
கனிவுடன் குடியிருப்பாய்
(உன்னிடம்)

எங்கெங்கிலும் இருந்தும்
என் திசை தெரியலையோ?
எப்பொரு ளிலும் இருந்தும்
என்னுள்ளம் புரியலையோ?
(உன்னிடம்)

--கவிநயா