Thursday, June 28, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 11 (241 -- 271]


"மாரியம்மன் தாலாட்டு" -- 11 (241 -- 271]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"

[வரிகள் 241-271]



ஆயி உமையவளே ஆஸ்தான மாரிமுத்தே

பாரமுத்தை நீயிறக்கிப் பாலகனைக் காருமம்மா

காரடி பெற்றவளே காலுதலை நோகாமல்

சொற்கேளாப் பிள்ளையென்று தூண்டில் கழுவில் வைத்தாய்

கழுதனக்கு மோர்வார்க்க கட்டழகி யுண்டுபண்ணாய்

நல்லதங்காளை யுண்டுபண்ணாய் நற்கழுவுக்கு மோர்வார்க்க

உரியில் தயிர்வார்க்க உத்தமியே யுண்டுபண்ணாய்

உன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக் காருமம்மா

எவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா

கடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா [250]


கடைக்கண்ணால் நீபார்த்தால் கடைத்தேறிப் போவேனம்மா

பாரளந்தோன் தங்கையரே பாலகனைக் காருமம்மா

பேரரசி மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா

மகமாயி மாரிமுத்தே மைந்தர்களைக் காருமம்மா

பெற்றவளே மாரிமுத்தே பிள்ளைகளைக் காருமம்மா

ஆணழகி மாரிமுத்தே அடிமைகளைக் காருமம்மா

பூணாரம் கொண்டவளே பிள்ளைகளைக் காருமம்மா

பாரமெடுக்கவோ அம்மா பாலனா லாகுமோதான்

பூணாரந் தானெடுக்க பிள்ளையா லாகுமோதான்

வருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [260]


பாலன் படுந்துயரம் பாக்கியவதி பார்க்கிலையோ

மைந்தன் படுந்துயரம் மாதாவே பார்க்கிலையோ

குழந்தை படுந்துயரம் கொம்பனையே பார்க்கிலையோ

சிற்றடிகள் படுந்துயரம் தேவியரே பார்க்கிலையோ

பூணார முத்திரையைப் பெற்றவளே தானிறக்கும்

ஆபரண முத்திரையை ஆத்தா ளிறக்குமம்மா

இறக்கிறக்குந் தாயாரே எங்களைக்காப் பாற்றுமம்மா

அடிமைதனைக் காப்பாற்றி யாணழகி நீயிறக்கும்

குப்பத்து மாரியரே கொலுவிலங் காரியரே

கொலுவிலங் காரியரே கோர்த்தமுத்து நீயிறக்கும்

கோர்த்தமுத்து நீயிறக்கும் கொம்பனையே மாரிமுத்தே [271]

[வளரும்]

3 comments:

  1. //எவ்வளவு நேரமம்மா ஏறெடுத்துப் பாருமம்மா
    கடுகளவு நேரமம்மா கண்பார்க்க வேணுமம்மா//

    இதுக்கு மேலேயும் அவள் பாக்காம இருக்கத் தான் முடியுமோ!
    கோர்த்தமுத்து இறக்கம்
    வராவிட்டால் இல்லை இரக்கம்!
    மிக அழகான வரிகள் SK!

    //உன் -மருமகளைக் காத்தார்ப்போ லிவ்வடிமையைக்//

    யார் இந்த மருமகள்?

    ReplyDelete
  2. மாரியம்மன் தாலாட்டில் இது எனக்கு ஒரு மலைப்பாகவே இருக்கிறது ரவி.

    இவளுக்குத்தான் ஊரெங்கும் சந்நிதிகள்.
    ஊருக்கொரு கதைகள்.
    இதில் குறிப்பிட்டிருக்கும் மருமகள் கூட, அப்படி ஏதோ ஊரில் வழங்கும் கதைதான் என நினைக்கிறேன்.

    இவற்றையெல்லாம் ஆராய்ந்து, தொகுத்து, ஒரு தொடராக, "மாரியம்மன் திருக்கதைகள்" என எழுதவேண்டும் என ஒரு ஆசை பிறந்திருக்கிறது.

    அம்மன அருளிருந்தால் நடக்கும்.

    நன்றி.

    [நீங்க கேட்ட கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை என சமாளித்திருக்கிறேன்!]
    :))

    ReplyDelete
  3. Arumai yaga irukkiradhu Ravi, thank you for all your posting, inga veli naadugalil irukkum ennai pondravargalukku idhu madhiryana blogs oru varaprasadham. migai paduthamal than solgirean.

    Srivathsan Prasanna
    Prasaan7779@yahoo.com

    ReplyDelete