Thursday, June 21, 2007

"மாரியம்மன் தாலாட்டு" -- 4

"மாரியம்மன் தாலாட்டு" -- 4

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்

"மாரியம்மன் தாலாட்டு"


[வரிகள் 31 - 60 ]


தாயே துரந்தரியே சங்கரியே வாருமம்மா

மலையாள தேசமெல்லாம் விளையாடப் பெண்பிறந்தாய்

மலையாள தேசம்விட்டு வாருமம்மா யிந்தமுகம்

சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்

இருந்தாய் விலாடபுரம் இனியிருந்தாய் கன்னபுரம்

சமயபுரத்தாளே சாம்பிராணி வாசகியே

சமயபுரத் தெல்லைவிட்டுத் தாயாரே வாருமம்மா

கன்னபுரத்தாளே காரண சவுந்தரியே

கன்னபுரத் தெல்லைவிட்டு காரணியே வந்தமரும்

கடும்பாடி எல்லையெலாங் காவல்கொண்ட மாரிமுத்தே [40]

ஊத்துக்காட் டமர்ந்தவளே பரசுராமனைப் பெற்றவளே

படவேட்டை விட்டுமெள்ள பத்தினியே வாருமம்மா

பெரியபாளை யத்தமர்ந்த பேச்சியெனும் மாரியரே

பெரியபாளை யத்தைவிட்டு பேரரசி வாருமம்மா

ஆரணிபெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை

ஆற்றங்கரை மேடைவிட்டு ஆச்சியரே வாருமம்மா

வீராம்பட் டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே

கோலியனூ ரெல்லையிலே குடிகொண்ட மாரியரே

அந்திரத்திற் தேரோட அருகே செடிலசைய

உச்சியிற் தேரோட உயரச் செடிலசைய [50]

மச்சியிற் தேரோட மகரச் செடிலசைய

பக்கங் கயிரோட பகரச் செடிலசைய

ஆண்டகுரு தேசிகரை அறியாத மானிடரை

தூண்டிலாட் டாட்டிவைக்கத் தோன்றினாய் நீயொருத்தி

சத்தியாய் நீயமர்ந்தாய் தனிக்குட்டி காவுகொண்டாய்

எல்லையிலே நீயமர்ந்தாய் எருமைக்கிடா காவுகொண்டாய்

உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை

என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்

கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக

ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே [60]


[இன்னும் வரும்]

6 comments:

  1. இன்னிக்கும் படிச்சாச்சு!

    நன்றி!

    ReplyDelete
  2. இன்னைக்கு பாட்டில் ஊர் பெயர்கள் அடுக்கி வருகின்றனவே!

    //ஆரணி பெரிய பாளையமாம் அதிலிருக்கும் ஆற்றங்கரை//
    ஹைய்யா...எங்கூரு ஆரணியும் வந்து விட்டது! நன்றி SK!

    //துரந்தரியே//
    அந்தரி-ன்னா பார்வதி
    துரந்தரி-? விளக்கம் ப்ளீஸ்!

    ReplyDelete
  3. //உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை
    என்னைப்போல் பிள்ளைகள்தான் எங்குமுண்டு வையகத்தில்
    கோர்த்தமுத்து வடமசைய கொங்கைரெண்டும் பாலொழுக
    ஏற்றவர்க்கு வரந்தருவாய் எக்காள தேவியரே//

    அம்மனை வணங்கும் ஒவ்வொருவருமே அவளுடைய பாரபட்ச மில்லா குழந்தைகள் தான் வி எஸ் கே அய்யா.

    ReplyDelete
  4. //துரந்தரி-? விளக்கம் ப்ளீஸ்!//

    அந்தரி, துரந்தரி, நிரந்தரி என 3 பெயர்கள், 3 நிலைகளைக் குறிக்கும்.

    அந்தரி என்பது ஒரு இடைப்பட்ட நிலை.

    துரிய நிலையைக் குறிக்கும் சொல் துரந்தரி.

    நிலையான சாயுஜ்ய நிலை அளிப்பவள் நிரந்தரி.

    உயிர்கள் உறங்கும் போதும், பிரியும் போதும், 3 நிலைகளுக்குச் செல்லுகின்றன எனப் படித்திருப்பீர்கள்.

    ஜாக்ரதா, ஸ்வப்னம், ஸுஷுப்தி என்ற 3 நிலைகள்.

    விழித்திருக்கும் போது, கனவு நிலை, அதையும் தாண்டிய நிலை. இவற்றின் அதிபதி அந்தரி.

    இந்த மூன்றையும் தாண்டிய நிலை , துர்யா என்னும் நான்காவது நிலை.

    அதற்கும் காவலாக இருப்பவளே துரந்தரி.

    மோன நிலை அளிப்பவள் நிரந்தரி!

    ReplyDelete
  5. //அந்தரி என்பது ஒரு இடைப்பட்ட நிலை.
    துரிய நிலையைக் குறிக்கும் சொல் துரந்தரி.
    நிலையான சாயுஜ்ய நிலை அளிப்பவள் நிரந்தரி//

    விளக்கும் SK தான் விSK! அருமையான விளக்கம்! நன்றி SK!

    ReplyDelete
  6. மாரியம்மன் கோவில்களும் அங்கே ஆடும் செடில் காவடிகளும் கண்ணெதிரே தெரிகின்றன எஸ்.கே.

    ReplyDelete