Sunday, September 28, 2008

"தேவி திருக்கதை!" -- 1

"தேவி திருக்கதை!" -- 1





[ நவராத்திரி தொடங்கிவிட்டது. ஒன்பது இரவுகள் ஒரு பகல் இனிக் கொண்டாட்டம்தான் !இந்தக் காலத்தில் தேவி மஹாத்மியம் என்னும் திருக்கதையைப் படித்தலும், கேட்டலும் முறையாகப் பாராயணம் செய்வதும் நன்மை பயக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
இதையொட்டி, நூலில் சொல்லப்பட்டிருக்கும் கதையை என் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறேன்.
அனைவருக்கும் தேவி ராஜ ராஜேஸ்வரியின் அருள் குறையின்றிக் கிடைக்க வேண்டி, இதைத் துவங்குகிறேன்.]


--காப்பு--

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்!

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!



உலகாளும் அன்னையவள் ஒன்பது நாள் உலாவந்த

உன்னதத்தைப் பாக்களிலே படித்திடவே துணிகின்றேன்


என்னவிங்கு சொல்வதுவோ எப்படித்தான் பாடிடவோ

என்னருமைத் தேவியிவள் செய்திருந்த அற்புதத்தை


அறியாதான் பாடவந்தேன் அம்மை திருக்கதையை

தெரியாதான் பாட வந்தேன் தேவி திருக்கதையை


குற்றமிங்கு கொள்ளாமல் குணம்மட்டும் கொண்டிருக்க

ஏற்றியும்மை வேண்டுகிறேன் கணபதியின் துணைகொண்டு


ஆனைமுகத்தோனை அகிலமெலாம் காப்பவனை

பானைவயிற்றோனை பக்தர்களைக் காப்பவனை


மூஷிகத்தில் வீற்றிருந்து மோனநிலை அருள்வோனை

வந்தித்துத் தொடங்கிடுவேன் கலைவாணி அருள்வாயே!


வெண்டாமரை வீற்றிருக்கும் வாணி சரஸ்வதியே

அண்டிவந்த பக்தருக்கு அருள்ஞானம் தருபவளே


சொற்குற்றம் பொருட்குற்றம் ஏதுமிங்கு வாராது

தேவிதிருக்கதையைத் திருத்தமாய் அருளிடம்மா!


குருவுக்கும் குருவாக என்னுள்ளில் இருப்பவனாம்

என்னப்பன் முருகனையும் இக்கணத்தில் துதித்திடுவேன்!


ஏறுமயில் ஏறிவந்து என்னுள்ளம் வீற்றிருப்போன்

ஆறுமுகசுவாமி நின்றன் அடிபணிந்து தொடங்குகிறேன்!


பாடலிலே பழுதின்றி பத்திரமாய்க் காத்திடுவாய்

நாடிவரும் என்நாவில் நல்லதமிழ் தந்திடுவாய்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்!

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!********************************************************

[தொடரும்]

3 comments:

  1. சீசன் பதிவுக்கு மீ த பர்ஸ்ட் !

    ReplyDelete
  2. தொடருங்கள் கவிநயா. கேட்டுக் களிக்கின்றோம்.

    ReplyDelete
  3. இது நான் இல்லை, ராமலக்ஷ்மி. வி.எஸ்.கே. அவர்கள். தொடர்ந்து கேளுங்கள் :)

    ReplyDelete