Monday, September 22, 2008

காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?



காடு மலை மேடெல்லாமே
காலில்லாமலே சுற்றும் காற்றே
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ
உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?

காட்டுக்குள்ளே செடியாகி
தழைத்து வளர்ந்திருப்பாள்
கொடியாகி மரத்தின் இடையை
சுற்றிக் கட்டிக்கொண் டிருப்பாள்
சின்னச் சிட்டுக் குருவியாகி
கூட்டுக்குள்ளே ஒளிந்திருப்பாள்
காட்டரசன் சிங்கமாகி
கர்ஜித்து மகிழ்ந்திருப்பாள் -

காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
காட்டுக்குள்ளே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?

மலைமீது மரமாகி
வானம் தொட வளர்ந்திருப்பாள்
அசையாத பாறையாகி
படுத்து ஓய் வெடுத்திருப்பாள்
பாறையிலே பசுந்தளிராய்
துளிர்த்து சிரித்திருப்பாள்
சின்னக் குற்றுப் புதராகி
குனிந்து நிலம் பார்த்திருப்பாள் -

காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
மலைமேலே அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?

கடல்மீது அலையாகி
துள்ளிக் குதித்திருப்பாள்
நீர் உவர்க்க உப்பாகி
காதலன்போல் கலந்திருப்பாள்
சின்னச் சின்ன மீனாகி
நீந்திக் களித்திருப்பாள்
கரையினிலே மணலாகி
பார்த்து ரசித்திருப்பாள் -

காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ?
கடல்பக்கம் அவளைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?

காடு மலை மேடெல்லாமே
காலில்லாமலே சுற்றும் காற்றே
காத்திருக்கும் எனக்காக தூது செல்வாயோ - நீ
உன் வழியில் அம்மாவைப் பார்த்தால் கொஞ்சம் சொல்வாயோ?


--கவிநயா


12 comments:

  1. காடு மலை கடலெல்லாம் சுற்றும் காற்றையே அம்மாவுக்குத் தூதனுப்பி அதன் கரங்களிலே உங்கள் கவி ஓலையைத் தவழ விட்டிருக்கிறீர்கள்.
    தென்றலாய் அது தேடிச் சென்று அன்னையவள் அடிகளிலே உங்கள் தேனமுதைச் சேர்த்திடும். தேடலைச் சொல்லிடும்.

    வாழ்த்துக்கள் கவிநயா!

    ReplyDelete
  2. //காட்டுக்குள்ளே செடியாகி
    தழைத்து வளர்ந்திருப்பாள்//

    மெய்யாலுமே அக்கா!
    வாழைப்பந்தல் தாழம் புதரில் தான் அம்மாவுக்கு மொதல் பூசை! அப்பறம் தான் முடியிறக்கி காது குத்தல் எல்லாம்!
    தாழம் புதர் வாசம்
    தவிக்கும் மனம் எல்லாம் வீசும்!

    //நீர் உவர்க்க உப்பாகி
    காதலன் போல் கலந்திருப்பாள்//

    அருமை! அருமை! :)
    எனக்கு மிகவும் பிடிச்ச வரிகள்!

    ReplyDelete
  3. ஆஹா, சேர்க்கட்டும் சேர்க்கட்டும். சொல்லட்டும் சொல்லட்டும். சீக்கிரம். நன்றி ராமலக்ஷ்மி.

    ReplyDelete
  4. //மெய்யாலுமே அக்கா!
    வாழைப்பந்தல் தாழம் புதரில் தான் அம்மாவுக்கு மொதல் பூசை! //

    மிக்க மகிழ்ச்சி கண்ணா. முடிஞ்சா படம் பிடிச்சுட்டு வாங்க, ஊருக்கு போறப்ப. பிடிக்கலாம்னா...

    //////நீர் உவர்க்க உப்பாகி
    காதலன் போல் கலந்திருப்பாள்//

    அருமை! அருமை! :)
    எனக்கு மிகவும் பிடிச்ச வரிகள்!////

    நன்றி கண்ணா :)

    ReplyDelete
  5. தேடுதல் என்பதே முதல்படி, அதை அழகிய தூதுக்-கவியாக்கிட்டீங்க. சூப்பரு...

    ReplyDelete
  6. //தேடுதல் என்பதே முதல்படி, அதை அழகிய தூதுக்-கவியாக்கிட்டீங்க. சூப்பரு...//

    மிக்க நன்றி மௌலி.

    ReplyDelete
  7. காக்கைச் சிறகினிலே நந்தலாலாவைப் பார்த்தான் கவிஞன். காணும் திசையெல்லாம் அம்மாவைப் பார்க்கிறீர்கள் கவிநயா. மிக நன்றாக இருக்கிறது காற்றுவிடுதூது.

    ReplyDelete
  8. //காணும் திசையெல்லாம் அம்மாவைப் பார்க்கிறீர்கள்//

    அதேதான் குமரா. அவளே எல்லாமாகவும் இருக்கிறாள் என்றே சொல்ல வந்தேன். ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. இந்த அற்புதமான பாடலுக்கு ஜோன்புரி எனும் ராகத்தில்
    மெட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

    திருவேற்காடு அம்மன் சன்னதியில் பாடுவதாக இருக்கும் பாடலைக்
    கேட்டு மகிழ்வீர்.

    வரவும்.
    http://menakasury.blogspot.com
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.

    ReplyDelete
  10. இப்போதான் பார்க்கிறேன் அக்கா, அற்புதமாக பாடல் அமைந்துள்ளது. அதை சூரி ஐயா பாடிக் கேட்டது, மேலும் இன்பம் அளித்தது!

    ReplyDelete
  11. பாடலைக் கேட்டு மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றி தாத்தா.

    ReplyDelete
  12. வாங்க ஜீவா. மிக்க நன்றி.

    ReplyDelete