அம்மா என் துயரம்
எப்போது முடிந்திடுமோ - இல்லை
முடியாத இரவாகி
விடியாமல் போய்விடுமோ?
விதி என்னும் நீர்ச்சுழிக்குள்
வசமாக அகப்பட்டேன்
ஒன்று முடிந்த பின்னும் நான்
மற்றொன்றில் உழலுகிறேன்
காட்டாற்றில் அகப்பட்டு
கதியற்றுச் செல்லுகிறேன் - உன்
மாயத்தின் கைப்பிடிக்குள்
மயங்கிச் சுழலுகிறேன்
சுழல் விட்டு வெளிவந்தால்
நீ வருவாய் என்கின்றார்
இது என்ன நியாயமோ
எனக்குப் புரியவில்லை
மூழ்காமல் காத்திடுதல்
உந்தன் பொறுப்பில்லையோ
கைகொடுத்துக் கரைசேர்க்கும்
கருணை உனக்கில்லையோ??
--கவிநயா
கவிநயா,
ReplyDelete//ஒன்று முடிந்த பின்னும் நான்
மற்றொன்றில் உழலுகிறேன் //
மீண்டும் உங்கள் கவிதை வாசித்ததில் மகிழ்ச்சி
//சுழல் விட்டு வெளிவந்தால்
நீ வருவாய் என்கின்றார்//
உண்மைதான் கவிநயா
அன்புடன் புகாரி
அட, வாங்க புகாரி! நானும் இப்பதான் உங்க வலைபூவை பார்த்துக்கிட்டிருந்தேன் :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteசொன்னதெல்லாம் மறந்துவிட்டுச்
ReplyDeleteசொன்னதையே சொல்லுமாம் கிளிப்பிள்ளை! கிளிப்பிள்ளை ஆகாமல்
வழியங்கே இருப்பதுவும் தெரியலையோ?
விதியென்றும் சுழிஎன்றும் தனியே எதுவுமில்லை,
செய்ததற்கு விளைவாகக் காண்பதுதான் அவையும்!
விளையாட்டாய் எடுத்துக்கொண்டால்
நொடிப்பொழுதில் மாறிவிடும்.
விதியை வகுத்தவள்தான் உள்ளிருந்து
வாடுகிறாள்
என்னதில்லை எதுவும் என்னதில்லை
உன்னது தான் அம்மா உன்னதுதான் என்றே
உள்ளது உள்ளபடி அன்னையிடம் சொல்லிப்பார்
மாற்றம் இல்லையென்றால் நம்முள்
தடையென்ன தேடிப்பார்
அன்னையவள் கைகளிலே பொறுப்பை விட்டு விடு
பின்னையவள் தருவதெல்லாம் நல்லதற்கே என்று இரு
சொல்லுகிற வார்த்தை எல்லாம்
சொல்பவனின் அனுபவம் தான்!
பொய்யுமில்லை புனைவுமில்லை
உள்ளது உள்ளபடி!
//சொன்னதெல்லாம் மறந்துவிட்டுச்
ReplyDeleteசொன்னதையே சொல்லுமாம் கிளிப்பிள்ளை!//
பாவம் நான், திட்டாதீங்க கிருஷ்ணமூர்த்தி சார் :) கிளிப்பிள்ளை மட்டுமில்லை, சின்ன்ன்னப் பிள்ளை... அறியாப் பிள்ளையும்தான் :))
நீங்கள்சொல்லும்போது இவ்வளவுதானா என்று தோன்றுகிற விஷயம், நடைமுறையில் அப்படி இல்லை. இந்த கவிதை எழுதி ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும். சில சமயம் எல்லாம் தெளிந்த நீரோடை போல் இருக்கிறது, மறுபடி மூழ்கினால் எல்லாம் குழம்பி விடுகிறது. அப்படி ஒரு மனநிலையில் தான் இந்த கவிதையை இட்டேன்.
வருகைக்கும் அருமையான கவிதைக்கும் மிக்க நன்றி.
(நான் இப்படில்லாம் எழுதலைன்னா நீங்களும் அப்படில்லாம் எழுத மாட்டீங்களே! :)
சவலைப் பிள்ளை அழுவது போல இருந்தவன்தான் நானும்!
ReplyDeleteதிவலை அளவென்றும் வினை
என்னை அணுகாமல் காத்திடம்மா
என்றே கதறியும் பாத்தாச்சு!
சவலைக்குக் கிடைத்த பதில் எல்லாம்
பொருள்பொதிந்த மௌனம்தான்!
கவலையும் தீரவில்லை! கண்ணீரும் மாறவில்லை!தாயே நீ பொய் தானோ?
அழுதும் பாத்தாச்சு! திட்டியும் தீத்தாச்சு! என்னவோ நடக்கட்டும் என
ஏகாந்தமாய் இருந்தபோது அது ஏனென்று வந்து சொன்னாள்!
பொறுத்தால் தீர்வு வரும்!
பொறாதவர்க்கு நோவு வரும் துயர்கூடும்!நெருப்பினிடை வாடுதலும் பக்குவம் பெறத்தானே!
இரும்பாய் இருப்பதனால் இத்தனை வாட்டமடா! தங்கமாய் இருந்திருந்தால் வாட்டுதல் குறைந்திருக்கும்!
வாட்டுவதும் எதற்காக? அம்மா!
நீ சொல்லும் ஆறுதல் எதற்காக?
வேதனை நான் படுவதிலே உனக்கு என்னவோர் பெருஞ்சுகமோ?
தாய் நீ! பிள்ளையைப் படுத்தலாமோ?
புரியவில்லை உன் நியாயம்!
போதுமிங்கு உன் ஜாலம்!
பொறுமித் தீர்த்தவனைத்
தாய்மையுடன் பார்த்துச் சொன்னாள்!
புரியவில்லை என்பதனால் வரும் அனுபவமும் நில்லாது!
அந்த அனுபவம் இல்லையென்றால் மாற்றமும் வாராது!
அழுதாலும் தீராது! ஆற்றாமை உதவாது! மகனே நீ கேளு!
வலியைத் தருபவள் தான் அந்த
வலியையும் தாங்குகிறேன்!
இதுவும் எனதென்று எண்ணம் எதற்காக?
சொல்லிவிட்டுப்போய் விட்டாள்!
சொன்ன கதை புரியாமல் என்னவோ
செய்துவிட்டு அவத்தை பெரிதாகி
செய் தயவு! அம்மா நீ இங்கு வா!
எனக் கதறின பொழுதினில் ஓடிவந்தாள்! எனைத் தேடி வந்தாள்!
சும்மா இருக்கப் பழகிக்கொள்!
அம்மா எதையும் பார்த்துக் கொள்வாள் என சும்மா இருக்கவும்
கற்றுக்கொள்! சும்மா இருப்பதும் பெருஞ்சுமைதான்!
இருளைக் கிழித்துப் புறப்படும் மின்னல்!மன இருளையும் நீக்கும் நேரம் வரும்! உண்மை புரியும் காலம் வரும்! என்பெயர் சொல்லிக் காத்து இரு!
அவள் பெயர் சொல்வது ஒன்றே தான் எனக்குத் தெரிந்த ஒரு வேலை!
ஹ்ம்... அருமை கிருஷ்ணமூர்த்தி சார், உங்க அனுபவத்தை பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி. உங்களுக்கு செய்தி கிடைச்சிருச்சு, அதனாலதான் இவ்வளவு உறுதியா பேசறீங்கன்னு தோணுது... :)
ReplyDeleteவாடினால்தான் மனசு உறுதியாகும், சுத்தமாகும் என்பது உண்மைதான். அதனால்தான் துயரத்திலும் ஒரு சந்தோஷம் இருக்கு.
//சும்மா இருக்கப் பழகிக்கொள்!
அம்மா எதையும் பார்த்துக் கொள்வாள் என சும்மா இருக்கவும்
கற்றுக்கொள்!
என்பெயர் சொல்லிக் காத்து இரு!//
ஆம், அதேதான் என் முயற்சியும்...
தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி. மறுபடியும் குழம்பும்போது உதவும் :)