Friday, September 25, 2009

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

"நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!"

அன்னையிவள் அருகில்வந்து ஆதரவாய்ப் பார்த்தாள்
என்னையிரு கைகளிலே மழலையெனச் சேர்த்தாள்
தன்னுடனே வைத்திருந்து தன்னுருவைக் காட்டி
முன்னையொரு வினைப்பயனாய் வந்தென்னில் கலந்தாள்

அழகென்னும் ஓர் தெய்வம் மேலிருந்து இறங்கி
அருகென்னில் வந்திருந்து அருட்கரத்தைக் காட்டி
திருவுருவச் சிறப்பெல்லாம் தனித்தனியே காட்டி
முறுவலுடன் மகிழ்த்தியதைநான் என்னவெனச் சொல்ல!

நவநவமாய்த் தினம் பிறந்து அல்லலுறும் என்னை
நவக்கோலம் காட்டியவள் நானுயரச் செய்தாள்
தவமிருந்தும் கிடைக்காத தாயவளின் கருணை
நவராத்ரியில் கிட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

குளிர்நிலவாய் வந்தென்றன் குறையெல்லாம் தீர்த்தாள்
பிறைநிலவாய்க் காட்சிதந்து பேரறிவில் நின்றாள்
வளர்நிலவாய் வந்தவளென் வாழ்வுயரச் செய்தாள்
முழுநிலவாய்ப் பொலிந்ததைநான் என்னவெனச் சொல்ல!

உலகோரை வாழவைக்க அன்னைகொண்ட தோற்றம்
உலகாளும் மாயவளின் ஒன்பதுவகைத் தோற்றம்
உலகெல்லாம் கொண்டாடும் நவதுர்கா தோற்றம்
எனக்காகத் தந்ததைநான் என்னவெனச் சொல்ல!

மலைமகளோ அலைமகளோ கலைமகளோ என்றே
மனதினிலே நானெண்ணி இருந்தநிலை எல்லாம்
ஒருநொடியில் தகர்த்தெறிந்து துர்கையுருக்காட்டி
ஆட்கொண்ட திறத்தினைநான் என்னவெனச் சொல்ல!

ஹிமவானின் மகளாக, தவமிருந்த கோலமாக
மணிநிலவின் ஒளியாக, அண்டம்காக்கும் அன்னையாக
கந்தனவன் தாயாக, குலமாதா காத்யாயனியாய்
ஆறுகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

காலத்தை நடுங்கச் செய்யும் காலதாத்ரி ரூபமாக
சீலத்தைக் காட்டிவரும் மஹாகௌரித் தாயாக
அட்டமஹாசித்திதரும் சித்தாத்ரி அன்னையாக
நவகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

எதிரில் வந்து நின்றவளின் எழிட்கோலம் கண்டேன்
கதிரொளியாய் வந்தென்னில் கலந்தவளைக் கொண்டேன்
இனியவளே கதியென்னும் இன்பநிலைக் கொண்டேன்
கனிவான அருள்முகத்தின் கருணையிலே கலந்தேன்!

அன்னையுன்றன் அருட்கோலம் நெஞ்சினிலே வைத்து
நீயின்றிக் கதியில்லை எனமிகவும் கதறி
அனுதினமும் நின்னளருளைத் தந்திடவே வேண்டுமெனும்
ஒருவரம்நீ அருளிடுவாய் உலகாளும் துர்க்கே!

நவதுர்கை அன்னையரின் தாளிணையைப் போற்றி
அவரருளே வேண்டுமென நாள்தோறும் வேண்டி

அடியார்கள் அனைவருக்கும் நல்லருள் நீ செய்திடவே

நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!

*****************
ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே! ஜெயதேவி துர்க்கே!

8 comments:

  1. //ஹிமவானின் மகளாக, தவமிருந்த கோலமாக
    மணிநிலவின் ஒளியாக, அண்டம்காக்கும் அன்னையாக
    கந்தனவன் தாயாக, குலமாதா காத்யாயனியாய்
    ஆறுகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல!

    காலத்தை நடுங்கச் செய்யும் காலதாத்ரி ரூபமாக
    சீலத்தைக் காட்டிவரும் மஹாகௌரித் தாயாக
    அட்டமஹாசித்திதரும் சித்தாத்ரி அன்னையாக
    நவகோலம் காட்டியதைநான் என்னவெனச் சொல்ல! //

    இந்த வெள்ளிக்கிழமை ஒரு தமிழ் நாளிதழில் நவ துர்க்கைகளின் பெயர்களையும் மறுபடியும் வாசிக்க நேர்ந்தது. அம்மன் பாட்டில் வாசித்த முந்தைய பதிவுகள் தான் ஞாபகத்திற்கு வந்தன.

    //நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்! //
    இந்த வாசகத்தை படிக்க வைத்து எம்மையும் பணிய வைத்ததற்க்கு கோடி நன்றிகள். :-)

    ReplyDelete
  2. அன்னையின் அருள் தங்களுக்கும், அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன் ராதா அவர்களே!

    ReplyDelete
  3. நேரடியாக உள்ளத்திலிருந்து வெளிவரும் வார்த்தைகள். நவராத்திரி நேரத்தில் தங்களுக்கு நேரும் அற்புத அனுபவங்களை இங்கே படித்தேன் எஸ்.கே.

    ReplyDelete
  4. இந்த அற்புதத்தை எப்படிச் சொன்னாலும் என் மனம் ஆறவில்லை குமரன்! எல்லாம் குருவருளன்றி வேறேதும் இல்லை. நன்றி.

    ReplyDelete
  5. காரண குருவே /காரிய கிரியே/இச்சா சக்தியே /கிரியா சக்தியே /ஒளி நிறை ந்த மதியே /மரகத மா மணியே /நவகிரகநாயகியே /நான் முக நாரனியே /நான் பணிவேன் இன்று /அருள் தருவாய் ன்றும் /....சித்ரா

    ReplyDelete
  6. //காரண குருவே /காரிய கிரியே/இச்சா சக்தியே /கிரியா சக்தியே /ஒளி நிறை ந்த மதியே /மரகத மா மணியே /நவகிரகநாயகியே /நான் முக நாரனியே /நான் பணிவேன் இன்று /அருள் தருவாய் என்றும் /....சித்ரா//

    ஆஹா! தினமும் சொல்லத்தக்கத் துதியாக இருக்கிறது ! அனைவருக்கும் இனிய விஜயதசமி வாழ்த்துகள்!!

    ReplyDelete
  7. //நவதுர்கை அன்னையரின் தாளிணையைப் போற்றி
    அவரருளே வேண்டுமென நாள்தோறும் வேண்டி
    அடியார்கள் அனைவருக்கும் நல்லருள் நீ செய்திடவே
    நவராத்ரி நாளினிலே நானுன்னைப் பணிந்தேன்!//

    அடியேனும் தங்கள் அனைவருடன் அன்னையின் பாதம் பணிந்து

    எல்லாரும் நல்லா இருக்க வேண்டும்

    அதற்கு அன்னை அருள வேண்டும்

    என்று வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. காரிய குருவாய் வெளியில் பெற்றவர் வழி நடக்கையிலே நமக்கு கிடைப்பது முதலில் காரணகுருவே-"ஆத்மதரிசனம்". இந்த காரண குருவே நம்மை, தன்னை உணர்த்தி பின் எல்லாம்வல்ல ஆண்டவரை அடையவும் செய்வித்து துணை நிற்கிறார். கரியகுருவால் காரணகுருவை கண்டு தன்னை உணர்ந்து அம்மயமாகி பின் இறைநிலையை அடைவோம்.
    http://sagakalvi.blogspot.in/2011/12/blog-post_01.html

    ReplyDelete