Friday, September 25, 2009

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!


1996 ஆம் வருடம். வேலை கிடைத்து சென்னைக்கு வந்த நேரம். முதன்முதலாக திருமயிலைக்குச் சென்று கற்பகவல்லியின் பொற்பதங்கள் பணியும் வாய்ப்பு. மதுரை வழக்கம் போல் கோவிலுக்குள் நுழைந்தவுடன் நேரே அம்மன் சன்னிதிக்குள் நுழைந்தேன். மதுரையில் கொஞ்சம் உள்ளே சென்றால் தான் மரகதவல்லியைத் தரிசிக்க இயலும். இங்கோ சன்னிதி வாசலில் கால் வைத்தவுடனேயே பளீரென்று கற்பகவல்லியின் திருவுருவ தரிசனம். நேரில் அவள் நின்று சிரிப்பதைப் போல் ஒளி வீசும் காட்சி. ஒரு நிமிடம் திகைத்து சன்னிதி வாசற்படியிலேயே நின்று விட்டேன். சுதாரித்து உள்ளே சென்று அவளைத் தரிசித்து அந்தத் திகைப்பு மாறாமலேயே கபாலிநாதனைக் காணச் சென்றேன்.

அதன் பின் பல முறை கற்பகத்தைத் தரிசிக்கச் சென்றாலும் அன்று முதன்முதலில் கிடைத்த காட்சி கிடைக்கவில்லை. அடுத்த முறை செல்லும் போதாவது அன்னை அருளுகிறாளோ பார்ப்போம்.

காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா
கல்யாணியே கற்பகமே அற்புத (காட்சி)

மாட்சியெல்லாம் வாழ்வில் சேர்ந்திடக் கனிவுடன்
மன்றிலே நின்று ஆடும் அம்பலவாணருடன் (காட்சி)

அங்கம் ஒரு பாகமாய் அமைந்த என் தாயே
ஆனந்த மாமலையில் தேமதுரக் கனியே
மங்கலக் குங்குமத்தில் மகிழ்ந்திடும் அம்மையே
மரகத மயில் உருவத் தேவியே தவத்திரு (காட்சி)




பாடியவர்: சுசீலா
மின் தொகுப்பு: தெய்வீக இசை மலர்

14 comments:

  1. //நேரில் அவள் நின்று சிரிப்பதைப் போல் ஒளி வீசும் காட்சி.//

    அப்படித்தான் இருந்தது பதிவில் நீங்க இட்டிருக்கும் படத்தை பார்த்த போது :) நிறைய பேருக்கு பிடிச்ச பாடல்னு நினைக்கிறேன்... எனக்கும் :) நன்றி குமரா.

    ReplyDelete
  2. அன்னை கற்பகத்தைத் தொலைவில் இருந்து, அதுவும் அந்தப் படிகளின் உசரத்தில் இருந்து, எட்டி எட்டிப் பார்க்கும் ஆனந்தமே தனி! கற்பக மரம் போல தொலைவில் இருந்து பார்த்தாலும் பசேல் என்று பசுமையாக அருளுவாள்!

    //வேலை கிடைத்து சென்னைக்கு வந்த நேரம்//

    என் முதல் வேலை பற்றிய தொலைபேசி அழைப்பும் மயிலை அவள் சன்னிதியில் தான்! :)

    பாடல் சுசீலாம்மா பாடியது! தெய்வீக இசை மலர் என்னும் ஆல்பத்துக்காக! பதிவில் சேர்த்து விடுங்கள் குமரன்! கல்யாணி ராகத்தில்....மன்னவன் வந்தானடி போலவே மெட்டு இருக்கும்! :)

    ReplyDelete
  3. குமரன்,
    எடுத்தவுடன் பாடலை படிக்க நேர்ந்தது. குமரனாகத் தான் இருக்கும் என்று எப்படி ஊகித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. :-)
    இது எளிமைத் தன்மை பற்றி அல்ல.
    உங்கள் பதிவுகளை/எழுத்துக்களை நிறைய படித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். :-)
    ~
    ராதா

    ReplyDelete
  4. கற்பகாம்பாள் - my all time favourite.. அம்மா என்று இவளிடம் என்று சென்றாலும் அருமையான தரிசனமும் மன நிறைவும் கிடைக்கும்.

    ReplyDelete
  5. //"காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா!"///


    நீண்ட நாட்கள் கழித்து கேட்கிறேன் இந்த பாடலினை !

    நன்றி :)

    ReplyDelete
  6. நடை சாத்தும் சமயம் கற்பகாம்பாள் சன்னிதியில் ஊஞ்சலாட்டம் பார்க்க வேண்டும் குமரன்.
    "சீரார் பவளங்கால்...பொன்னூசல் ஆடாமோ" என்று திருவாசகம் ஓதி, "நமோ பார்வதி பதயே நம ஹர ஹர ஹர மஹாதேவா" என்று கோஷ்டியாக ஒரே குரலில் எல்லோரும் தொழும்போது ஓர் அற்புத உணர்வு ஏற்படும்.

    ReplyDelete
  7. பாடல் அருமையாக உள்ளது. :-)
    "கற்பகமே", "மரகத மயில் உருவத் தேவியே", குமரன் விரும்பும் வகையில் தரிசனம் தந்தால் என்ன? :-)

    ReplyDelete
  8. நன்றி கவிநயா அக்கா.

    ReplyDelete
  9. இரவி. அந்த வாசல் படிக்கட்டைத் தான் சொல்கிறேன். எனக்கு அப்போது எட்டிப் பார்க்கவே தேவையில்லாமல் இருந்தது. படியில் ஏறியவுடன் பளீரென்று முகத்தில் அறைந்தது போல் ஒரு தரிசனம்.

    நேர் எதிரே இருக்கும் மண்டபத்தில் பூசலார் திருமுன்னிலிருந்து பார்த்தாலும் அன்னையை மிக நன்றாக தரிசிக்க முடிவதையும் கண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  10. இராதா, நீங்கள் சொல்ற ஊஞ்சல் பூசை எங்க ஊர் பள்ளியறை பூசையை போல் இருக்கும் போல் இருக்கிறதே. நான் இது வரை நடை சாத்தும் போது திருமயிலையில் இருந்ததில்லை; திருவல்லிக்கேணியில் தங்கியிருந்ததால் பார்த்தசாரதியின் கடைசி பூசையைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. சீரார் பவளங்கால் முத்தங் கயிறாக
    ஏராரும் பொற்பலகை ஏறி இனிதமர்ந்து
    நாரா யணன் அறியா நாண்மலர்த்தான் நாயடியேற்கு
    ஊராகத் தந்தருளும் உத்தர கோசமங்கை
    ஆரா அமுதின் அருள்தா ளிணைப்பாடிப்
    போரார் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ

    ஆணோ அலியோ அரிவையோ என்றிருவர்
    காணாக் கடவுள் கருணையினால் தேவர்குழாம்
    நாணாமே உய்யஆட் கொண்டருளி நஞ்சுதனை
    ஊணாக உண்டருளும் உத்தர கோமங்கைக்
    கோணார் பிறைச்சென்னிக் கூத்தன் குணம்பரவிப்
    பூணார் வனமுலையீர் பொன்னூசல் ஆடாமோ

    ReplyDelete
  12. இனிய அனுபவம் குமரன்! நம்ம மயிலை மன்னாருக்கும் மிகவும் பிடிக்கும் இவளை!:))

    ReplyDelete
  13. இனிய அனுபவம் குமரன்! நம்ம மயிலை மன்னாருக்கும் மிகவும் பிடிக்கும் இவளை!:))

    ReplyDelete