Thursday, September 22, 2011

திரு அங்க மாலை - 2


நெஞ்சே நீ நினையாய்
வஞ்சமில்லா நெஞ்சினுக்கு தஞ்சம் அளிப்பவளை
செஞ்சடை யோனுடன் கொஞ்சிக் களிப்பவளை
நானிலமெல்லாம் காக்கும்
நாயகியை நிதமும்
நெஞ்சே நீ நினையாய் (6)

கையே நீ தொழுவாய்
கந்தமலர் தூவிஅவள் கஞ்சமலர்ப் பாதங்களை
விந்தையிலும் விந்தையான எந்தைஇடம் இருப்பவளை
காந்தமெனக் கவர்ந்திழுக்கும்
கன்னியவளை என்றும்
கையே நீ தொழுவாய் (7)

காலே வலம் வாராய்
கடலெனும் வாழ்விதிலே கரையெனவே ஒளிரும்
மடலவிழ்ந் தமலராய் மனதினில் மணத்திருக்கும்
கன்றென நமைக்காக்கும்
கற்பகத்தின் திருக்கோவில்
காலே வலம் வாராய் (8)

உடலே நீ பணியாய்
உம்பருக்கும் இம்பருக்கும் இகபர சுகமளிக்கும்
அங்கமொரு பங்கெனவே அரனுடன் பகிர்ந்திருக்கும்
உலகமெல்லாம் காக்கும்
உமையவளை தினமும்
உடலே நீ பணியாய் (9)

மனமே நீ உணராய்
மங்கை யவள் உறவன்றி உண்மை உற வெதுவுமில்லை
கங்கை முடி சூடியவன் பங்கை யன்றி புகலுமில்லை
அங்கையின் நெல்லிக்கனி
போலஅவள் அருமைதனை
மனமே நீ உணராய் (10)


--கவிநயா

(அடுத்த வாரம்னு சொல்லியிருந்தேன், ஆனா அடுத்த செவ்வாய் நவராத்திரி ஆரம்பிக்கறதால இப்பவே இட்டாச்சு :)

4 comments:

  1. விறலே!நீ வரையாய்
    சிவை தந்த தமிழ்ச்சொல்லால் அவளைப்போற்றும் பாடல்களை
    கவிதையிலே அடங்கா அவளெழில் கூறும் பாடல்களை
    புவிகாக்கும் அவள்புகழை
    உவந்துரைக்கும் பாடல்களை
    விரலே! நீ வரையாய்

    ReplyDelete
  2. விரலின் வரைதல் அழகா இருக்கு :) மிக்க நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  3. அருமை அருமை கவிநயா.

    அன்னையே அங்க மாலை இயற்றிய
    கவிநயாவிற்கு எல்லா நலங்களும் அருள்க அம்மே.

    ReplyDelete
  4. //அன்னையே அங்க மாலை இயற்றிய
    கவிநயாவிற்கு எல்லா நலங்களும் அருள்க அம்மே.//

    ஆஹா. மிக்க நன்றி கைலாஷி :)

    ReplyDelete