Thursday, September 29, 2011

உன் பாதம் சரணம்!



சூலம் ஏந்திக்கொண்டு சூலியவள் நம்மை காத்து நிற்கிறாள்
சூழும் பகைதன்னை விரட்டித் துரத்திடவே பார்த்து நிற்கிறாள்
கால தேவனையும் அடக்கி ஆளுபவள் காளி தேவியே
ஞாலம் யாவையுமே போற்றிப் பணியுமவள் புகழைப் பாடியே!

சண்டி என்றாலும் அண்டி வருவோரைக் காத்து நிற்பவள்
கண்டைப் போலவே இனிக்கும் அன்புதனைக் கொடுத்து நிற்பவள்
தீமை அவளைக்கண்டால் தீயைக் கண்டதுபோல் தூர ஓடுமே
நாவை துருத்திவரும் நங்கை அவளைக்கண்டால் நடுங்கிச் சாகுமே!

அன்னை என்றுதன்னை அன்பு செய்வோரைக் காத்து நிற்பவள்
பிள்ளை இவனென்று அணைக்கும் அன்பினிலே கனிந்து நிற்பவள்
சக்தி உன்றன் திருப்பாதம் சரணென்ற எண்ணம் போதுமே
பக்தர் தமைக்காக்க சூலம் அரணென்று வந்து சேருமே!


--கவிநயா

1 comment:

  1. சரணடைந்தோரை காக்கும் அரணான அவள் சரணமே சரணம்!

    ReplyDelete