Monday, July 15, 2013

மூவெழுத்தில் இருப்பாள்!




சுப்பு தாத்தாவின் இசையில், குரலில்... மிக்க நன்றி தாத்தா!


பூவெழில் ஒளிர்முகம்
புன்னகை மிளிர்இதழ்
மானென மிரள்விழி
தேனெனும் தீங்குரல்

கார்முகில் கருங்கூந்தல்
தேரசை வெனும்நடை
வார்சடை முடியோனின்
வாமத்தில் அவள்இடம்

மார்தவழ் மணியாரம்
மரகதத் திருமேனி
பார்புகழ் பரமேசீ
பனிமலர் பொற்பாதம்

அழகெனும் சொல்லுக்கு
இலக்கணம் அவள்வடிவம்
அருளெனும் சொல்லுக்கு
இலக்கணம் அவளன்பு

மூவெழுத்தில் அவளிருப்பாள்
முன்னின்று சிரித்திருப்பாள்
நாவசைத்துச் சொல்லிவிட்டால்
நங்கைமனம் மகிழ்ந்திடுவாள்!


*மூவெழுத்து == அம்மா


--கவிநயா

2 comments:

  1. ஆகா... முடித்ததும் சிறப்பல்லவா...!

    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன்!

      Delete