Monday, August 5, 2013

அம்மா உன் கருணைக்கு அளவேது?




சுப்பு தாத்தா ஹம்ஸானந்தி ராகத்தில் கலக்கியிருப்பது இங்கே... நீங்களும் கேட்டு பரவசமடையுங்கள்! 

 
அம்மா உன் கருணைக்கு அளவேது? உன்

பதமலர் பணிந்த பின்னே பயமேது?

(அம்மா)



மனமுருகித் துதிக்க மறுஜென்மம் கொடுத்தாய்

மன்மதனை இரதியினுக்குப் பரிசெனவே அளித்தாய்

பட்டருக்குப் புகல்தந்து பரிந்துயிரைக் காத்தாய்

வட்டநில வைவானில் வடிவுடனே அமைத்தாய்

(அம்மா)



நஞ்சை யமுதாக்கி யுன்றன் நாயகனைக் காத்தாய்

பஞ்சுநிகர் கரத்தாலே நீலகண்டனாக்கி வைத்தாய்

காளிதாசன் நாவினிலே கவிமுகிலாய் அமர்ந்தாய்

காழிப்பிள்ளை பசிதீர்க்க ஞானமெனும் அமுதளித்தாய்

(அம்மா)



மாதவனின் சோதரியே மாதவங்கள் செய்தவளே

கோதையரில் மாமணியே கொஞ்சுமிளம் பைங்கிளியே

நாதவடி வானவளே நாமம் சொல்ல மகிழ்பவளே

வேதவடி வானவளே வெந்துயரைத் தீர்ப்பவளே

(அம்மா)



--கவிநயா

2 comments:

  1. ஆதியந்தம் ஏதுமற்ற அன்னையே !அருட்கடலே !

    ஆதிரையான் மேனியிலே பாதியைப் பறித்தவளே !

    ஆதாரமாயுந்தன் பாதமலர் பற்றியபின்

    பேதையே ஆயினும் ஏதம்மா குறை எனக்கு ?



    கவிநயாவின் வரிகளுக்கு உயிரூட்டும் வகையில் கணீரென்று பாடி அசத்தியிருக்கும் சுப்புசாருக்கும் நன்றி!

    ReplyDelete
  2. நன்றி லலிதாம்மா!

    ReplyDelete