Monday, June 30, 2014

அம்மாவின் பூஞ்சிரிப்பு!


செந்தூரப் பொட்டு வைத்து
செவ்வாடை இடையில் கட்டி
செம்பருத்திப் பூவைப் போலே
சிரிப்பாளாம் அம்மா
செங்கரும்பாய் மனசுக்குள்ளே இனிப்பாளாம்!

மலர்மாலை தோளைத் தழுவ
மணியாரம் மார்பில் தவழ
முல்லைப்பூ மலர்ந்தது போலே
சிரிப்பாளாம் அம்மா
மல்லிகையாய் மனசுக்குள்ளே மணப்பாளாம்!

கொஞ்சிக் கொஞ்சி கொலுசுகள் சிணுங்க
கொடியிடையில் மேகலை துலங்க
கனியிதழ்கள் விரியக் கனிவாய்ச்
சிரிப்பாளாம் அம்மா
கற்கண்டாய் மனசுக்குள்ளே இனிப்பாளாம்!

கரங்களிலே வளைகள் பூட்டி
கண்களிலே முறுவல் காட்டி
காசுகொட்டிக் கவிழ்த்தது போலே
சிரிப்பாளாம் அம்மா
கள்ளமில்லாப் பிள்ளை அன்பில் களிப்பாளாம்!


--கவிநயா

No comments:

Post a Comment