Monday, September 7, 2009

காத்தருள்வாய் அம்மா!

முன்னை வினையும் இம்மை வினையும்
மத்தாய் என்னைக் கடைகிறதே
வெண்ணெய் என நீ திரண்டு வந்து
என்னைக் காத்து அருள்வாயே

பொம்மையைப் பார்த்து அன்னையை மறந்த
பிள்ளை யாக ஆனேனே
மாயை விலக்கி மருளை நீக்கி
என்னைக் காத்து அருள்வாயே

அறியாத சிறு பிள்ளை நானே
தவறுகள் பலவும் செய்தேனே
அறியாமை எனும் இருளை நீக்கி
என்னைக் காத்து அருள்வாயே

உள்ளே உறையும் உன்னை மறந்து
உயிர் நோக அலைகின்றேனே
உந்தன் உண்மை உணர வைத்து
என்னைக் காத்து அருள்வாயே!


--கவிநயா

10 comments:

  1. //உள்ளே உறையும் உன்னை மறந்து
    உயிர் நோக அலைகின்றேனே
    உந்தன் உண்மை உணர வைத்து
    என்னைக் காத்து அருள்வாயே!//

    தாயே உன் பாதங்களில் சரணம்.

    ReplyDelete
  2. பாமாலையை அன்னையின் பாதத்தில் சமர்பிப்போம்.

    ReplyDelete
  3. //தாயே உன் பாதங்களில் சரணம்.//

    சரணம் சரணம்.

    வருகைக்கு மிக்க நன்றி கைலாஷி.

    ReplyDelete
  4. //பாமாலையை அன்னையின் பாதத்தில் சமர்பிப்போம்.//

    முதல் வருகைக்கு மிக்க நன்றி திரு.இராதாகிருஷ்ணன்.

    ReplyDelete
  5. http://www.youtube.com/watch?v=bQB-TVQCKi8

    in a ragha malika pattern
    nadhanamakriya, yadukula kambhoji,
    followed by kanada

    subbu thatha

    ReplyDelete
  6. அற்புதமாக அனுபவித்துப் பாடியிருக்கிறீர்கள் தாத்தா. அம்மாவின் படங்களெல்லாம் கொள்ளை அழகு. மிக்க நன்றி.

    ReplyDelete
  7. //முன்னை வினையும் இம்மை வினையும்
    மத்தாய் என்னைக் கடைகிறதே//
    சற்றே வித்தியாசமான உவமை.

    "உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே" அப்படின்னு திருநாவுக்கரசர் தேவாரம்.

    பாடல் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  8. வாங்க ராதா.

    //சற்றே வித்தியாசமான உவமை.

    "உறவுக்கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே" அப்படின்னு திருநாவுக்கரசர் தேவாரம்.//

    இது இப்பதான் தெரியும், ஆனால் மத்து உதாரணம் அபிராமி அந்தாதியிலும் (ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி), லலிதா நவரத்னமாலையிலும் (மத்தேறு தத்திக்கிணை வாழ்வடையேன்) படிச்சிருக்கேன்.

    //பாடல் அருமையாக உள்ளது.//

    மிக்க நன்றி ராதா.

    ReplyDelete
  9. //மத்து உதாரணம் அபிராமி அந்தாதியிலும் (ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி), லலிதா நவரத்னமாலையிலும் (மத்தேறு தத்திக்கிணை வாழ்வடையேன்) //
    ஆஹா ! இந்த அபிராமி அந்தாதி பாடல் இப்பொழுது தான் நினைவிற்கு வருகிறது.
    லலிதா நவரத்தின மாலை படிக்க வேண்டும். நன்றி அக்கா !

    ReplyDelete
  10. நல்லது ராதா :) லலிதா நவரத்னமாலையை அழகான பொருள் விளக்கத்துடன் குமரன் இங்கேயே எழுதியிருக்கார். சுசீலாம்மா குரலிலும் கேட்கலாம்.

    இதோ முதல் பதிவு:
    http://ammanpaattu.blogspot.com/2009/01/1.html

    ReplyDelete