Thursday, July 26, 2012

வரம் தருவாய் அம்மா, வரலக்ஷ்மி!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துகள்!


 
அஷ்டலக்ஷ்மியின் மீதான இந்தப் பாடல் முன்பு 'நினைவின் விளிம்பில்...' எழுதியதுதான். இப்போது சுப்பு தாத்தா அஷ்டலக்ஷ்மியைப் பொருத்தமாக 8 ராகங்களில் பாடித் தந்திருப்பதால், இங்கே மறுபடியும்! மிக்க நன்றி தாத்தா!

ஆனந்த பைரவி, பூபாளம், நீலாம்படி, அடனா, கானடா, ???, ***, மோஹனம், ஷண்முகப்ரியா, மத்யமாவதி, இவற்றில் அமைத்திருக்கிறாராம். '???', மற்றும் '***' என்ன என்று கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கிறார்! உங்களுக்குத் தெரிகிறதா? :)

***

வரம் தருவாய் அம்மா வரலக்ஷ்மி - எங்கள்
வாழ்வினில் மங்களம் அருள் லக்ஷ்மி!

(வரம்)

ஆதி கேசவனின் அழகு மார்பினிலே
வாசம் செய்யுகின்ற ஆதிலக்ஷ்மி!

தங்கக் கலசமுடன் சங்குச் சக்கரமும்
தாங்கி அருளுகின்ற தனலக்ஷ்மி!

பச்சை ஆடையது இடையில் துலங்கிடவே
பசுமை காக்கின்ற தான்யலக்ஷ்மி!

வெள்ளைப் பாற்கடலில் உதித்து மாலவனின்
உள்ளம் ஆளுகின்ற கஜலக்ஷ்மி!

(வரம்)

எம்மைக் காக்கவென்றே அன்னையாக வந்து
தோற்றம் கொண்டசந் தானலக்ஷ்மி!

வில்லும் அம்புடனும் சூலம் வாளுடனும்
அபயம் அளிக்கின்ற வீரலக்ஷ்மி!

எட்டுக் கரங்களுடன் சுற்றி வரும்பகைகள்
வெட்டி வீழ்த்துகின்ற விஜயலக்ஷ்மி!

மாயை இருள் களைந்து ஞான ஒளியேற்றி
முக்தி அளிக்கும்வித் யாலக்ஷ்மி!

அஷ்ட லக்ஷ்மிவடி வாக வந்திருந்து
இஷ்டம் பூர்த்தி செய்யும் வரலக்ஷ்மி!

உன்னை மனமுருக வணங்கும் பக்தரெலாம்
உய்ய அருள்செய்வாய் ராஜ்யலக்ஷ்மி!

(வரம்)


--கவிநயா

1 comment:

  1. பத்துப்பதங்களும் சேர்ந்த முத்துப்பாச்சரம்!

    ReplyDelete