Friday, October 3, 2008

"தேவி திருக்கதை" -- 3

"தேவி திருக்கதை" -- 3

முந்தைய பதிவு

" முதல் கதை"
"மது-கைடப வதம்!"

தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


ஆதியிலே பரந்தாமன் ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்தான்

ஆதிசேஷன் படுக்கையிலே அமைதியாகத் துயிலிருந்தான்


பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமன் துயிலிருந்தான்

அன்னைபரா சக்தியவள் அருட்செயலால் துயிலிருந்தான்


அகிலமெல்லாம் ஆளுபவள் ஆணையினால் துயிலிருந்தான்

அண்டமெலாம் காப்பவளின் சொல்லுக்காகத் துயிலிருந்தான்


யோகத்துயில் ஆழ்ந்தவனின் லீலைகளும் துயிலுற்றன

துயிலிருந்தவன் செவியினின்று பிறந்திட்டார் இருவரக்கர்


மது என்னும் ஓர் அரக்கன் கைடபன் என்னும் மறு அரக்கன்

திருமாலின் தன்னினின்று தோன்றியதால் கொண்டிட்டார்


தான் என்னும் அகங்காரம் தமதென்ற மமகாரம்

அகங்காரம் தலைக்கேற ஏறிட்டார் தம் பார்வை


நாபியின் கமலத்தில் தானாக முளைத்திட்ட

பிரமனின் உருமீது பட்டதவர் பார்வையங்கு


படைப்பினைப் பிறப்பிக்கப் பிரமனவன் முனைகின்ற

நேரத்தில் மதுகைடபர் தொந்தரவு செய்திட்டார்


தன்தொழிலைச் செய்யவிடாது தடுக்கின்ற அரக்கர்களைத்

தன்னால் இயன்றவரை தடுத்துக் களைத்திட்டார்


இனிமேலும் படைப்பிதனைச் செய்திடலும் ஆகாது

எனவுணர்ந்த பிரமனவன் திகைத்திட்டார் விழித்திட்டார்


நடப்பதெல்லாம் நாயகியின் லீலையெனப் புரிந்திட்ட

பிரமனவன் தேவியவள் திக்கை நோக்கித் துதித்திட்டார்


என்பணியை யான் செய்ய எனக்கிங்கே உதவிடுக

எனச்சொல்லிப் பலவாறு துதிகளினால் வேண்டிட்டார்


விஷ்ணுமாயா மனமகிழ்ந்தாள் அப்படியே எனவென்றாள்

திருமாலின் துயில்விட்டுத் தான்நீங்கிச் சென்றிட்டாள்


துயில்கலைந்த திருமாலும் தேவிதனை வணங்கிவிட்டு

தானெழும்பிச் சென்றிட்டார் அரக்கர் வதம் செய்திட்டார்


மது கைடப அரக்கருடன் ஆயிரம் ஆண்டு போர் செய்தபின்

அரக்கர்தமை அழித்திட்டார் படைப்பினையே தொடரச் செய்தார்


'தமஸ்' எனும் குணத்தை அரக்கரிவர் கொண்டதனால்

தானுமந்த குணம் கொண்டு அன்னையிவள் வதம்செய்தாள்!


முதலாம் கதையிதுவே! முழுதுமாகச் சொல்லிவந்தேன்

உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!


தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்

செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!


முதலாம் கதை முற்றிற்று!
************************

[விஷ்ணுமாயை எழுப்பிய விஷ்ணுவின் தோற்றம்]

[தொடரும்]

அடுத்த பதிவு

4 comments:

  1. //'தமஸ்' எனும் குணத்தை அரக்கரிவர் கொண்டதனால்

    தானுமந்த குணம் கொண்டு அன்னையிவள் வதம்செய்தாள்!//

    வைரத்தை வைரத்தால் அழித்தாலே அன்னை,அதை நாமும் போக்கிடுவோம்.

    ஓம் சக்தி, ஓம் சக்தி , ஓம் சக்தி,

    ReplyDelete
  2. அடுத்த கதைக்கு(ம்) ஆவலோடு இருக்கிறேன்.

    ReplyDelete
  3. //வைரத்தை வைரத்தால் அழித்தாளே அன்னை,அதை நாமும் போக்கிடுவோம்.

    ஓம் சக்தி, ஓம் சக்தி , ஓம் சக்தி,//

    ஆஹா! என்ன ரத்தினச் சுருக்கமாகச் சொல்லிவிட்டீர்கள் திரு. கைலாஷி!

    ReplyDelete
  4. //அடுத்த கதைக்கு(ம்) ஆவலோடு இருக்கிறேன்.//

    தினம் வரும் கோவியாரே!
    நன்றி!

    ReplyDelete