"மாரியம்மன் தாலாட்டு" 13 [301-330]
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்
"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 301 -- 330]
நண்பான பிள்ளைகளை நலிந்திடச் செய்யாதே
உன்னை நம்பினோரை ஓய்ந்துவிடச் செய்யாதே
அந்நீதஞ் செய்யாதே ஆயி மகமாயி
வேம்பு ரதமேறி வித்தகியே வாருமம்மா
பச்சிலை ரதமேறி பார்வதியே வாருமம்மா
கொலுவி லிருந்தசத்தி கோர்த்தமுத்து நீயிறக்கும்
போட்டமுத்தை நீயிறக்கும் பூலோகமாரிமுத்தே
கேளிக்கை யாகக் கிளிமொழியே முத்திறக்கும்
அரும்பால கன்றன்னை அவஸ்தைப் படுத்தாதே
வருத்தப் படுத்தாதே மாதாவே கண்பாரும் [310]
அன்ன மிறங்கவம்மா ஆத்தாளே கண்பாரும்
ஊட்டத்தை நீகொடுத்து உத்தமியே காருமம்மா
இரக்கங் கொடுத்து ஈஸ்வரியே காருமம்மா
காருமம்மா பெற்றவளே காலுதலை நோகாமல்
எங்கேயோ பாராமுகமாய் இருந்தேனென்று சொல்லாதே
அந்திசந்தி பூஜையில் அசதியா யெண்ணாதே
ஒட்டாரம் பண்ணாதே ஓங்காரி மாரிமுத்தே
பாவாடம் நேருமம்மா பழிகள் வந்து சேருமம்மா
பாவாடம் நேர்ந்ததென்றால் பாலருக் கேறாது
கண்டார் நகைப்பார்கள் கலியுகத்தா ரேசுவார்கள் [320]
கலியுகத்தா ரேசுவார்கள் கட்டழகி மாரிமுத்தே
பார்த்தார் நகைப்பார்கள் பரிகாசம் பண்ணுவார்கள்
உதடு படைத்தவர்கள் உதாசீனஞ் சொல்லுவார்கள்
பல்லைப் படைத்தவர்கள் பரிகாசம் பண்ணுவார்கள்
நாவைப் படைத்தவர்கள் நாணயங்கள் பேசுவார்கள்
பார்த்தோர் நகைக்கவம்மா பரிகாசம் பண்ணாதே
கச்சிப் பதியாளே காமாட்சி தாயாரே
தாயாரே பெற்றவளே தயவுவைத்துக் காருமம்மா
மாதாவே பெற்றவளே மனது வைத்துக் காருமம்மா
பார்வதியே பெற்றவளே பட்சம் வைத்துக் காருமம்மா [330]
[காக்க இனியும் வருவாள்!]
[அந்நீதம்= வீம்புச்செயல்; பாவாடம்= பாவம்; ஒட்டாரம்= முரட்டுத்தனம்,, பிடிவாதம்]
அந்நீதம்= வீம்புச்செயல்;
ReplyDeleteபாவாடம்= பாவம்;
ஒட்டாரம்= முரட்டுத்தனம்,, பிடிவாதம்
//ஒட்டாரம்= முரட்டுத்தனம்,, பிடிவாதம்//
ReplyDeleteவிஎஸ்கே,
அடம் அல்லது அடம்பிடிப்பது சரியான சொல்லாக நினைக்கிறேன். குழந்தைகளை 'ஒட்டாரம் பண்ணாதே' என்று தாய்மார்கள் அதட்டுவது வழக்கில் இருப்பது. தவறெனில் மன்னிக்க.
( சில சமயங்களில் விரதம் முறிஞ்சு போய்டுது ! குறிப்பாக உங்களுடன் தொடர்புடைய வற்றில் :))
அந்நீதம் என்றால் அநீதி எனவும் ஒரு பொருள் உண்டு என அறிகிறேன்!
ReplyDeleteநீங்க சொல்வதும் சரிதான், கோவியாரே!
ReplyDeleteஅடம் பிடிப்பதும், பிடிவாதம் பிடிப்பதும் ஒன்றே!
ஒட்டாரம் பண்ணாம வந்ததற்கு மிக்க நன்றி!
:))
//கலியுகத்தா ரேசுவார்கள் கட்டழகி மாரிமுத்தே
ReplyDeleteபார்த்தார் நகைப்பார்கள் பரிகாசம் பண்ணுவார்கள்
உதடு படைத்தவர்கள் உதாசீனஞ் சொல்லுவார்கள்
பல்லைப் படைத்தவர்கள் பரிகாசம் பண்ணுவார்கள்
நாவைப் படைத்தவர்கள் நாணயங்கள் பேசுவார்கள்
பார்த்தோர் நகைக்கவம்மா பரிகாசம் பண்ணாதே
கச்சிப் பதியாளே காமாட்சி தாயாரே//
ஆறு அறிவு படைத்த மனிதர்களுக்கு கடவுளைக் கூட உரிமையுடன் திட்ட முடியும். அப்படியிருந்தும் காப்பவள் தான் அன்னை காமாட்சி. இந்தப் பாடல் மிகவும் நன்றாக உள்ளது
காப்பவள்தான் காமாட்சி!
ReplyDeleteஆஹா! இதுவும் மிக நன்றாக இருக்கிறது, அன்புத்தோழியே!
நன்றி!