"மாரியம்மன் தாலாட்டு" -- 25 [684-722]
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்
"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள்[684-722]
ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை
எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்
"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள்[684-722]
நாடு தழைக்கவம்மா நானிலத்தோர் தான்வாழி
மாடு தழைக்கவம்மா நல்லோர் மிகவாழி
பாரிலுள்ள ஆடவரும் பாலகரும் மங்கையரும்
ஆரியரும் மற்றோரும் யாவர்களும் தான்படிக்க
முன்னாளில் மூத்தோர் மொழிந்த இந்த தாலாட்டை
இன்னாளில் போற்ற எழுதா எழுத்ததனால் [690]
அச்சுக்கூடத் ததிபர் அநேகர் இதுவரையில்
உச்சிதமாய் அச்சிலிதை யோங்கிப் பதிப்பித்தார்
கற்றோரும் மற்றோருங் களிப்பாய்ப் படிப்பதற்கு
சொற்குற்றமில்லாமல் சுத்தப் பிரதியாய்
பாரிலுள்ளோ ரிக்கதையைப் படித்துத் தொழுதேற்ற
கற்றவரும் மற்றவரும் களிப்படைய வாழி
சங்கரனும் சங்கரியும் ஆறுமுகனுந்தான் வாழி
செங்கண்மால் ஸ்ரீராமர் சீதையரும் தான்வாழி
பஞ்சவர்க ளனைவரும் பைங்கிளியாள் துரோபதையும்
அல்லி சுபத்திரையும் அனைவோரும் தான் வாழி [700]
முப்பத்து முக்கோடி தேவர்க ளும்வாழி
சொற்பெரிய சோம சூரியாக் கினிவாழி
நாற்பத் தெண்ணாயிரம் நல்முனிவர் தான்வாழி
சந்திரனுஞ் சூரியனுந்தானவர்கள் தான்வாழி
இந்திரனுந் தேவர்கள் எல்லோருந் தான்வாழி
கற்பகக் காவும் காமதேனுவும் வாழி
பற்பல தீவும் பஞ்சாக்ஷரம் வாழி
காத்தனோடு வீரன் கருப்பன் மிகவாழி
சங்கிலிக் கருப்பன் சப்பாணி தான்வாழி
பாவாடை ராயன் பலதேவரும் வாழி [710]
இக்கதை கேட்டோர் என்னாளுந் தான்வாழி
பெருமையுடன் கேட்கும் பெரியோர் மிகவாழி
ஊரெங்கும் கீர்த்தி பெற்ற உத்தமருந் தான்வாழி
பாருலகி லிக்கதையைப் படித்தோர் மிகவாழி
நாயகியாள் தன்கதையை நாள்தோறும் வாசிப்போர்
பாரினில்புத் திரபாக்கியம் படைத்து மிகவாழ்வாரே
மாரித் திருக்கதையை மகிழ்ந்துமே கேட்டோரும்
தேவி திருக்கதையை தீர்க்கமய்க் கேட்டோரும்
பாடிப் படித்தோரும் பாக்கியத்தைத் தான்பெறுவார்
நாடித் துதிப்போரும் நற்கதியைத் தானடைவார் [720]
ஆல் போல்தழைத்து அறுகுபோல் வேரோடி
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்ந்திருப்பார். [722]
மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு !
எங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களமாம் ! !
மாரியம்மன் தாலாட்டு முற்றிற்று.
****************************************************************************
கடந்த 25 நாட்களாய், எனது நீண்ட நாள் ஆசையான இந்தப் பெருமைமிகு "மாரியம்மன் தாலாட்டு" என்னும் மங்கல நூலை வெளியிட என்னை அருளிய அருள்மிகு அன்னைக்கும், இது வருவதற்குக் காரணமான திரு. நாமக்கல் சிபிக்கும்,
தங்கள் பதிவுகளை இடாமல், இது தொடர்ந்து வர உதவிய திரு. குமரன், ரவி மற்றும் அன்புத்தோழி அவர்களுக்கும்,
அழகிய அம்மன் படங்கள் அளித்து உதவிய திரு. ரவி கண்ணபிரான், கோவி.கண்ணன், செல்வி.அன்புத்தோழி, செல்வி விஜி சுதன் அவர்களுக்கும்,
பின்னூட்டம் இட்ட அன்பர்களுக்கும்,
படித்த, படிக்கத் தவறிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து அன்னை அனைவர்க்கும் எல்லா நலன்களும் அருள வேண்டுகிறேன்.
ஆடி மாதம் முழுதும் படியுங்கள்! ஆனந்தம் அடையுங்கள்!!
நன்றி. வணக்கம்.
மங்களம் மங்களம் மாரியம்மன் தன் கதைக்கு!
எங்கும் நிறைந்த ஈஸ்வரிக்கு மங்களமாம்! !
*******************************************************************************
மாரியம்மன் தாலாட்டைப் பதிவிட்டார் தான் வாழி!
ReplyDeleteமாரியம்மன் தாலாட்டைப் படித்தார்கள் தான் வாழி!
பார்த்தார்கள் படித்தார்கள் பாங்குடனே நன்மனத்தில்
சேர்த்தார்கள் எல்லாரும் சிறந்திங்கே வாழியவே!
SK ஐயா! மிக அருமையான பணி!
பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், வணக்கங்கள்!
wikisource-இல் அவசியம் இதைச் சேர்க்க வேண்டும்!
எஸ்.கே. நேற்று தான் மாரியம்மன் தாலாட்டைப் படிக்கத் தொடங்கினேன். 2ம் பகுதி தான் முடித்திருக்கிறேன். விரைவில் 25ம் பகுதிக்கு வந்துவிடுவேன் என்று நினைக்கிறேன். மாரியம்மன் தாலாட்டை இங்கே இட்டதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteவாழி வாழியென வாழ்த்துகள் பாடி
ReplyDeleteஎழிலாகப் படுத்திருக்கும் நம்ரவியும்
அழகான பாட்டொன்று இங்களித்தார்
வாழி அவரும் அம்மன் அருள் பெற்று!
நன்ரி, திரு.ரவி!
உங்களது பங்கு இந்த முயற்சியில் என்னால் மறக்க முடியாத ஒன்று!
உங்களடு ஆர்வத்துக்கு, விராஇவிலேயெ இருபத்து ஐந்தையும் விரைவில் படித்து விடுவீர்ர்கள், குமரன்!
ReplyDeleteஆடி மாதம் படிப்பது மிகவும் விசேஷம்!
ஆடி வெள்ளி அதை விட விசேஷம்!
பதிவில் சொல்லாமல் விட்ட ஒரு செய்தியை இங்கு சொல்ல வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
ஜூலை 17 ஆடி துவங்குகிறது.
அதனால்தான் கடைசி இரு பதிவுகளில் அதிக வரிகள் சேர்த்து அளித்தேன்.
எல்லா தேவர்களுக்கும் வாழ்த்து கூறி இத்திருப்பாடலை முடித்த திரு வி.எஸ்.கே அய்யாவிற்கும், இந்த பாடலை அவர் எழுத காரணமாயிருந்த திரு நாமக்கல் சிபி அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பாடல்களை எழுதி, ஆடி மாதத்தில் படிப்பதற்கு கொடுத்த திரு விஎஸ்கே அய்யாவிற்கு என் நன்றிகள்.
பொறுமையாகப் பதிவிடாமல் காத்திருந்தும், அவ்வப்போது அழகிய கருதுக்களைக் கூறியும், படங்களை அளித்தமைக்கும், நானும் நன்றி சொல்லிக் கொள்கிறேன் உங்களுக்கு, அன்புத்தோழியே !
ReplyDeletewikisource-இல் சேர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதையும் நீங்களே செய்துவிடுவீர்கள்தானே, ரவி!!
ReplyDelete:))
விஎஸ்கே ஐயா,
ReplyDeleteதமிழகத்து தெய்வத்திற்கு தாலாட்டு பாடி நிறைவு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ஆடி வரும் பின்னே
ReplyDeleteஅன்னையின் தாலாட்டு வந்தது முன்னே!
அன்பர்கள் வாழ்ந்திட காரணம் அவள் திருக்கண்ணே
அன்புடனே இதை அளித்த விஎஸ்கே அவர்களைப்பாராட்டுவதும் என்னே!
நன்றி, கோவியாரே!
ReplyDeleteஅன்புடன் கவிதையால் பராட்டிய ஷைலஜாவுக்கு என் மனமார்ந்த நன்றி!
ReplyDeleteஆடி மாதக் கருத்தை வலியுறுத்தி இட்டது இன்னும் அழகு!