Wednesday, July 4, 2007

"மாரியம்மன் தாலாட்டு" 16 [391- 420]


"மாரியம்மன் தாலாட்டு" 16 [391- 420]

ஓம் சக்தி துணை
மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 391-420]


ஊத்துக்காட் டமர்ந்தவளே உதிரபலி கொண்டவளே

வீராணம் பட்டணமமர்ந்த வேதாந்த மாரிமுத்தே

சமைந்தாய் சமயபுரம் சாதித்தாய் கன்னபுரம்

கன்னபுரத் தெல்லையெல்லம் காவல்கொண்ட மாரியரே

எக்கால தேவியரே ஈஸ்வரியே யிறங்குமம்மா

திக்கெல்லாம் பேர்படைத்த தேசத்து மாரியரே

அண்ட புவனமெல்லாந் துண்டரீக முள்ளசக்தி

கச்சிப் பதியாளே காமாட்சித் தாயாரே

கைலாச லோகமெல்லாம் காவல்கட்டி யாண்டவளே

பாதாள லோகமெல்லாம் பரதவிக்கப் பண்ணசக்தி [400]


காலைக் கொலுவிலம்மா காத்திருந்தா ராயிரம்பேர்

உச்சிக் கொலுவிலம்மா உகந்திருந்தா ராயிரம்பேர்

அந்திக் கொலுவிலம்மா அமர்ந்திருந்தா ராயிரம்பேர்

கட்டியக் காரரெல்லாம் கலந்தெச்சரிக்கை பண்ண

பாடும் புலவரெல்லாம் பண்பிசைந்த பாடல்சொல்ல

வடுகர் துலுக்கரோடு மராட்டியர் கன்னடியர்

கன்னடியர் காவலுடன் கனாட்டுப் பட்டாணியர்

இட்டசட்டை வாங்காத இடும்பரெல்லாம் காத்திருக்க

போட்டசட்டை வாங்காத பொந்திலியர் காத்திருக்க

வடுகர் துலுக்கரம்மா மறுதேசப் பட்டாணியர் [410]


வேடிக்கை பார்த்திருந்தாள் வேப்பஞ் சிலையாளும்

கேளிக்கை பார்த்திருந்தாள் கிளிமொழியாள் மாரிமுத்து

மாயமெல்லா முன்மாயம் மருளரெல்லா முன்மருளர்

மருளர் தழைக்கவம்மா மருமக்க ளீடேற

பலிச்சட்டி தானெடுக்கும் புத்திரர்கள் தான்றழைக்க

வேதங்கள் தான்றழைக்க விண்ணவர்க ளீடேற

குமாரவர்க்கந் தான்றழைக்க கொம்பனையே கண்பாரும்

மைந்தர்கள் தான்றழைக்க மாதாவே கண்பாரும்

காஞ்சிபுரியிலே தான் கர்த்தரையும் நீ நினைத்து

கர்த்தரையும் நீ நினைத்துக் காமாட்சி பூஜைபண்ணாய்
[420]

[பூஜை தொடரும்]

4 comments:

  1. விஎஸ்கே ஐயா,
    அம்மன் பாட்டு பகுதியில் மாரியம்மன் தாலட்டு வந்து வெற்றிகரமாக 'வலம்' வருகிறது. மேரியம்மன் தாலாட்டும் வருமா ?

    (100 % நீங்கள் மட்டுமே இந்த பின்னூட்டத்தை வெளி இடுவீர்கள் என்று நம்புவதால்...இது ரிஜக்ட் ஆகாது என நினைக்கிறேன்)

    ReplyDelete
  2. வாங்க GK.

    SK ஐயா முடித்ததும், ஆடி மாதம் நான் இடுகிறேன்!
    மண்ணளக்கும் தாயே என்று ஒவ்வொரு ஊராகச் சொல்லிப் பாடும் வரிசையில்

    நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
    வேளாங்கண்ணியிலே வேளாங்கண்ணியம்மா என்று வரும்!
    அந்தப் பாட்டும் இந்த வலைப்பூவில் வரும்!

    அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே! :-)

    ReplyDelete
  3. மேரியம்மன் தாலாட்டு இருந்தால் சொல்லுங்களேன். இல்லாவிட்டால்/தெரியாவிட்டால் குறைந்தது ஒரு பாட்டாவது எழுதி இட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  4. இல்லாவிட்டால் என்ன?

    எழுதிட்டா போச்சு!

    அதை கிருஸ்துமஸ் சமயம் போடலாமா?

    இல்லேன்னா வேளாங்கண்ணி மாதா திருவிழா எப்பன்னு சொல்லுங்க.

    அப்ப போட்டுறலாம்.

    சரியா, கோவியாரே!

    எம்மதமும் சம்மதமே!

    ReplyDelete